PUBLISHED ON : ஜூலை 13, 2025

மதம் கொண்ட யானைகள் மோதிக்கொள்வது போல தலைகள் மோத, கரங்கள் எதிராளியின் மணிக்கட்டை அழுத்தி வீழ்த்த முயற்சிக்க, நீள்கிறது இந்த மல்யுத்தம்! வெற்றி தோல்வி அறிய முடியாத இப்போட்டியினை காண, நாம் ஸ்ரீவைகுண்டம் - துாத்துக்குடி சாலையில் ஒன்றரை கி.மீ., தொலைவிலுள்ள நத்தம் கிராமத்துக்கு செல்ல வேண்டும்!
அங்குள்ள வரகுணமங்கை விஜயாஸனர் கோவில் அர்த்த மண்டபத்து கல் துாண்களுக்கிடையில் கூரையில் செதுக்கப்பட்டுள்ளது இரு வீரர்கள் மோதும் இம்மல்யுத்த காட்சி!
'மோதிக் கொள்பவர்கள் மட்போரில் வல்லவர்கள்' என்பதை அவர்களின் முக அமைதி எடுத்துரைக்க, ஒருவர் மற்றவர் மீது செலுத்தும் பலத்தை காலுான்றி நிற்கும் பாவனையிலும், கரங்களின் விரல்களில் புடைத்து நிற்கும் அழுத்தம் வழியாகவும் தத்ரூபமாய் உணர்த்தி இருக்கிறார் சிற்பி!
வீரர்களின் பலப்பிரயோகத்தை அவர்களின் பின்னங்கால் சதை திரட்சி மூலமும், கீழாடை இறுக்கமாக இருப்பதை முறுகி நிற்கும் தொடை மூலமும் காட்டியிருப்பது சிற்பியின் திறமையை வணங்க வைக்கிறது!
அதேபோல், 'ஆரோக்கியத்திற்கும் தொப்பைக்கும் சம்பந்தம் இல்லை' என்பதை வீரர்களின் தொங்கும் தொப்பைகள் உணர்த்துவதாக மட்போர் சிலையின் பெருமைகள் கூறி, விஜயாஸனர் பக்தர்களை இச்சிலை காண வைக்கிறார் கோவில் அர்ச்சகர்.