PUBLISHED ON : ஜன 26, 2025

முழு நீள 'யு டியூப்' சித்திரம்!
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்ளும் நடுத்தர குடும்ப இளைஞன் நவீன், வேலை பறிபோனதை குடும்பத்திடம் மறைத்து, பொருளாதார, சமூக அழுத்தங்களால் பல சிக்கல்களில் மாட்டுகிறான். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது எது எனச் சொல்லும் ஜவ்வ்வ்....வு திரைக்கதை!
'இதோ... டாக்டரே வந்துட்டாரே' எனும் அன்றைய நாடக பாணியில் இத்திரைக்கதை. சிரிப்பில், முறைப்பில், மவுனத்தில் உணர்வுகளை கடத்தாமல் வசனங்களாகவும், விவரிப்புகளாகவும், 'மொக்கை' நகைச்சுவையுடன் கொடும் படையெடுப்பு!
பேருந்து, ரயில், விமானம் மூன்றையும் ஒரே நேரத்தில் பிடிக்க ஒரு ஆள் ஓடுவதைப் போல, காட்சிகள் ஒவ்வொன்றும் விழுந்தடித்து ஓடுகின்றன. விதவிதமான கடன்காரர்களால் கதைக்கு சேர்ந்த அர்த்தம் என்ன; குடிகாரர்களாக வரும் கும்பலின் பங்களிப்பு என்ன; இவ்விரு தரப்பையும் வெட்டியிருந்தாலே கதையில் நிதானம் கூடியிருக்கும்!
மணிகண்டனின் குட் நைட், லவ்வர் படங்களின் வரவேற்புக்கு அதன் கருத்துக்கள் மட்டுமே காரணம் அல்ல; நல்ல இசை, இலகுவான திரைக்கதையால் தான் அப்படைப்புகள் பார்வையாளர்களிடம் நெருங்கி சென்றன. அளவாகப் பேசும் நாயகி சான்வி மேக்னாவின் பாத்திரம் போல, 'செயலே முக்கியம்' என்பதை இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமியும் பின்பற்றி இருப்பின் சிறப்பாக இருந்திருக்கும்!
சம்பாதிக்கும் இயந்திரமாக ஆண்களை பார்க்கும் குடும்பம், தனக்கு மட்டும்தான் தலையாய பிரச்னை உள்ளதாக கருதும் கணவன், மருமகளை வார்த்தைகளால் குதறும் உறவுகள் என, இரும்பு காலத்துக்கும் முற்பட்ட விஷயங்களைத் தொட்டிருப்பதை சிலர் பாராட்டக்கூடும்; அவர்களை இந்த குடும்பஸ்தன் கவர்வான்.
ஆக....
உறையில் இருந்து விருட்டென உருவுகையில் கழன்று வந்தது கத்தியின் கைப்பிடி!