நாங்க என்ன சொல்றோம்னா...: லிட்டில் ஹார்ட்ஸ் (தெலுங்கு)
நாங்க என்ன சொல்றோம்னா...: லிட்டில் ஹார்ட்ஸ் (தெலுங்கு)
PUBLISHED ON : செப் 14, 2025

'காமெடி'யை காதலிக்கத் துாண்டும் 'காதல்' கதை!
ஓ.எம்.ஆர்., தாளில் தன் பதிவெண்ணைக் கூட நிரப்பத் தெரியாத அகில், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்காக கோச்சிங் சென்டரில் தள்ளப்படுகிறான். 'காத்யாயினி' எனும் பெயரைக் கூட எழுத தெரியாதவனுக்கு அவள் மீது கண்டதும் ஆசை. அது காதலா, மோகமா, ஆர்வக்கோளாறா என்று அறியாத அகிலின் அழிச்சாட்டியமே 127 நிமிட கதை!
அகில் தந்தையின் மாத சம்பளம் 70 ஆயிரம் ரூபாய்; மாத லஞ்சம் 60 ஆயிரம் ரூபாய். இப் பணத்தில், தன் மகன் 'பில்கேட்ஸ்' போல வருவதற்காக கணினி வாங்கித் தருகிறார். சினிமா பதிவிறக்கம் செய்வது, அதிக வயது வித்தியாசம் கொண்ட காதல் ஜோடிகள் பற்றி 'கூகுள்' செய்வது என, கணினியை ஆக்கப்பூர் வமாக கையாள்கிறான் அகில்!
இப்படி, தன் மானத்தை தானே கப்பல் ஏற்றிக் கொள்ளும் நாயகனாக மவுலி தனுஜ் பிரசாந்த். தெலுங்கில் பிரபல 'யு டியூபர்' என்பதால் அவருடைய 'ஒன் லைன்' காமெடிகள் திரைக் கதை முழுக்க குவிந்திருக்கின்றன!
ஒரு பாடலின் மத்தியில் 'என்ன கன்றாவி பாட்டு இது...' என்ற வரியை பாடி தங்களை தாங்களே கலாய்த்துக் கொள்ளும் படக்குழு, ஜாதி, கவுரவம் என 'கெத்து' காட்டும் முந்தைய த லைமுறையை கலாய்க்கவும் தவறவில்லை! எதிர்காலம் குறித்த திட்டமிடல், காதலில் விட்டுக் கொடுக்காத குணம் என நாயகி பாத்திரம் இருப்பது சிறப்பு.
இக்கதை 2015 - 2025 காலகட்டத்தில் நிகழ் கிறது. 'இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்து இப்போவரைக்கும் உலகத்துல நிறைய மாறிடுச்சு. மாறாதது ரெண்டு... மோடி ஆட்சி, 'அகில் - காத்யாயினி' காதல்' என்று கதையை நாயகன் முடிக்கை யில் வெடிச்சிரிப்புடன் வெளியேறுகிறது கூட்டம்.
ஆக...
'கிளீன் போல்டு' ஆகும் உச்ச நடிகர்களுக்கு மத்தியில் ஒரு சுட்டிப் பையனின் சிக்ஸர்!