ADDED : செப் 07, 2024 11:51 AM

''வாழ்நாளில் ஒருமுறையாவது ஆதரவற்ற விலங்குகளின் பசியாற்றுங்கள். அது காட்டும் அளவில்லாத அன்பை உணர்ந்துவிட்டால், பின்பு செல்லப்பிராணிகளின் கால்தடமில்லாத வீட்டில் வசிக்கவே முடியாது. என்னுடன், 12 ஆண்டுகளாக, தெருநாய்களும், பூனைகளும் இருக்கின்றன,'' என்கிறார் தாம்பரம், செம்பாக்கத்தை சேர்ந்த, 'ஐ.டி.,' நிறுவன ஊழியர் ஷராய் பென்னி.
உங்களை பற்றி...
என் பூர்வீகம் சென்னை தான். நான், அப்பா பென்னி, அம்மா வசந்தி, கொஞ்சம் தெருநாய்கள், பூனைகள்-னு, சின்ன குடும்பம். தற்போது ஐ.டி., துறையில் வேலை பார்க்கிறேன். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். நாய், பூனைகளுக்காகவே, அடிக்கடி வீடு மாற்றும் படலம் தொடரும். செம்பாக்கத்தில் தற்போது வசிக்கும் வீட்டை சுற்றிலும் காலியிடம் இருப்பதால், நாய், பூனைகள் தங்க வசதியாக இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்காகவே, விரைவில் சொந்த வீடு கட்டணும்.
தெருநாய்களை தத்தெடுப்பதில் உள்ள சவால்கள் என்ன?
வீட்டின் உரிமையாளர் அனுமதித்தாலும், சுற்றி வசிப்போர், தெருநாய்கள், பூனைகளை தங்க வைக்க கூடாதென சண்டை போடுகின்றனர். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எதற்குமே ஆசைப்பட கூடாதென்ற வசைமொழிகளை தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறேன்.
சமீபத்தில் நான் வீட்டிலில்லாத போது, எதிர் வீட்டில் வசிக்கும் ஒருவர், பப்பியை கல்லால் அடித்துள்ளார். பயத்தில் அவை சத்தமாக குரைத்து கொண்டிருந்தன. இதை காரணம் காட்டி வீடு காலி செய்யுமாறு, நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டார். இதனால், பயத்தில் நடுங்கும் மூன்று பப்பிகளை, தற்போது என் அறையிலே துாங்க வைக்கிறேன். அம்மாவும், அப்பாவும் தரையில் தான் துாங்குகின்றனர். இப்படி, ஒவ்வொரு நாளும், சுற்றி இருப்பவர்கள் தரும் தொந்தரவுகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
ஆனால் இப்படிப்பட்ட சிலருக்காக, ஆதரவில்லாமல், பசியோடு சுற்றி திரியும் பப்பிகளை பார்த்தால், எப்படி உணவளிக்காமல் இருக்க முடியும். கண்டும் காணாமல் வந்துவிட்டால் அவை அங்கேயே இறந்து விடும். தற்போது என்னிடம் 11 நாய்கள், 20க்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றன. அனைத்துக்கும் முறையாக தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
இவ்வளவு செல்லப்பிராணிகளையும் எப்படி பராமரிக்கிறீர்கள்?
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, நாய், பூனைகள் எங்களோடு இருக்கின்றன. ஆரம்பத்தில் இதற்கு உணவளிப்பது, உடல்நிலை சரியில்லையெனில், மருத்துவமனை அழைத்து செல்வது சிரமமாக இருந்தது. இப்போது, எத்தனை நாய், பூனைகளையும் வளர்த்து விட முடியுமளவுக்கு, அனுபவம் கிடைத்துள்ளது.
இவை இருப்பதால், வீட்டிற்கு உறவினர்கள் வருவதே இல்லை. சில நேரங்களில், இவைகளுக்கு உணவளிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகள் வரும். எங்களை பற்றி அறிந்த சில தன்னார்வலர்கள் அவ்வப்போது முன்வந்து உதவுவர். அச்சமயம், இறைவனே இறங்கி வந்து உதவுவதாக தோன்றும். சில நேரங்களில் நாங்கள் பட்டினியாக இருந்தாலும், அவைகளுக்கான உணவை அம்மா தயார் செய்வார். கிச்சன் வேலைகளுக்கு, அப்பா தான் உதவுவார்.
எங்களை பொறுத்தவரை, வாழும் வரை, பிற ஜீவன்களின் பசியாற்ற வேண்டும். வாழ்நாளில் ஒருமுறையாவது இதை செய்து பாருங்கள். அப்போது, செல்லப்பிராணிகளின் கால்தடமில்லாத இடத்தில் வசிக்கவே முடியாது என்பதை உணருவீர்கள்.
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு
சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு!