ADDED : மே 04, 2024 08:49 AM

கோவை, கணபதியில், பேக்டரி, தோட்டம், நாட்டு மாடுன்னு பிசியா இருந்த, பாக்கியராஜை, நேரில் சந்தித்து அறிமுகப்படுத்திக்கிட்டோம். புங்கனுார் குட்டை மாடு வளக்குறீங்களாமேன்னு கேட்டதும் பரவசமாகி, தோட்டத்துக்குள் அழைத்து சென்றார். தொழுவத்தில் நின்ற மாடுகளை அறிமுகப்படுத்தினார்.
இவனுக்கு நாலு வயசாகுது. கருப்பா இருக்கறதால கரிகாலன்னு பேரு வச்சிருக்கோம். மற்ற மூணும் பசுமாடுகள். வெள்ளை, சிவப்பு, சந்தன கலர்ல இருக்கறதால, பவானி, செண்பா, பொன்னின்னு பேரு வச்சிருக்கோம். இவங்களோட கன்னுக்குட்டியும், அம்மா கலர்லயே பொறந்துருக்கு, என்றார். ஏன் நாட்டுமாடுகள் மேல ஈர்ப்பு?
'' நான் பேசிக்கா பெட் லவ்வர். வீட்டுல டாக்ஸ், பேர்ட்ஸ், கேட்ஸ் வளர்க்குறேன். பிசினஸ் பண்றதால, விவசாயத்துக்குள்ள போக முடியலை. அந்த குறையை தீர்த்துக்க தான், நாட்டு மாடு வாங்குனேன். ஆனா, இவங்ககிட்ட கிடைக்குற எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்ல இருக்கு. என் மனைவி விஜயலட்சுமி, இவங்க கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டாங்க. அவளை பார்த்தாவே, மூணு கன்னுக்குட்டியும் சேர்ந்து, கோரஸா அம்மான்னு கூப்புடுவாங்க. இந்த பாண்டிங், மாடுகிட்ட மட்டும் தான் கிடைக்கும்.
இதோட பராமரிப்பு பத்தி...'' புங்கனுார் குட்டை ரகம், தமிழ்நாடு- ஆந்திரா பார்டர்ல இருக்கற, சித்துார் ப்ரீட். இது அதிகபட்சமா, நாலடி தான் வளரும். நாட்டு மாடுங்கறதால, ரொம்ப எனர்ஜிடிக்கா இருக்கும். குறைவா தான் தீவனம் சாப்புடும். பாலும் குறைவா தான் தரும். இதோட மில்க் ரொம்ப காஸ்ட்லி. ஒரு லிட்டர் 120 ரூபாயாம். ஆனா நாங்க பால் விக்கறதில்லை. பசுவோட மடி கனமாகிட கூடாதுன்னு, அப்பப்போ பால் கறந்து, கோவிலுக்கு கொடுத்துடுவோம். தாயோட பால், அதோட குட்டிக்கு தான். இந்த ப்ரீட், ரொம்ப ரேர்ங்கறதால, தேடி, அலைஞ்சி வாங்குனேன். லாபம் இல்லாட்டியும், மனநிறைவு கிடைக்குது. எவ்ளோ ஸ்ட்ரஸ் இருந்தாலும், இவங்கள பார்த்தாவே போதும். மனசு லேசாகிடும்'' என்றார்.
'' குழந்தைங்களுக்கு லீவு விட்டா, இங்க கூட்டிட்டு வந்துடுவோம். இப்போ, கரிகாலனும், செண்பாவும், என் கிட்ஸோட பேவரட் பெட் ஆகிட்டாங்க. இவங்க எல்லாரும் என்னோட குழந்தைங்க மாதிரி தான்''னு சொல்லிட்டே, ஊற வைச்ச புண்ணாக்கை, கன்னுக்குட்டிக்கு தாய்மையோட ஊட்டிட்டு இருந்தார் விஜயலட்சுமி. தோட்டமும், மாடும் இருந்தாவே நிம்மதியா வாழலாம் போலன்னு மனசு சொல்லுச்சு!