ADDED : அக் 10, 2025 11:28 PM

''சமையலுக்கு லீவு விட்டு, கல்லுாரி நண்பர்களுடன் அளவாடி சிரித்து மகிழ்ந்து, அலுவலக பணிச்சுமைக்கு மத்தியில், ஒருவேளை வயிறார சாப்பிட வருவோருக்கு, மறக்க முடியாத அனுபவத்தை தர வேண்டுமென்ற நோக்கில், சேலத்தில், 'மைக்கேல் வேக் அண்டு டைன் 'என்ற பெயரில் 'பெட் தீம்டு ரெஸ்டாரன்ட்' அமைத்தோம்,'' என்கிறார், அதன் உரிமையாளர் டிஜோ ஆரோக்கியராஜ்.
'செல்லமே' பக்கத்திற்காக இவர் மேலும் நம்மிடம் பகிர்ந்தவை:
டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில், செல்லப்பிராணிகளுக்காக தொடங்கப்பட்ட சில பிசினஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதிலும் பெட் தீம்டு ரெஸ்டாரன்ட்டுக்கு, மக்கள் ஏகோபித்த ஆதரவு தருவதை காண முடிந்தது. இதனால், சேலத்தில் செல்லப்பிராணிகளை கொஞ்சியபின் சாப்பிட வசதியாக, ரெஸ்டாரன்ட் அமைக்க வேண்டுமென முடிவெடுத்து, நானும், என் தம்பி இன்பன்ட் ஜெப்ரீயும் இணைந்து இதை உருவாக்கினோம்.
இங்கே, உணவு சாப்பிடும் அறைக்கு அருகில், செல்லப்பிராணிகள் கொஞ்சுவதற்கு பிரத்யேக அறை உள்ளது. பெர்ஷியன் இன பூனைகள், சிட்ஜூ, பிரெஞ்சு புல்டாக் பப்பிகள் உள்ளன. இவற்றுடன் நேரம் செலவிட்டு கொஞ்சி, செல்பி எடுத்தபிறகு சாப்பிட செல்லலாம். வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க முடியாதவர்கள், பல்வேறு காரணங்களுக்காக தன் செல்லப்பிராணியை பிரிந்தவர்கள் இங்கே வந்து நேரம் செலவிடுகின்றனர்.
இங்கு சிறிய இன பப்பிகளே இருப்பதோடு, இவற்றிற்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டு, சில அடிப்படை பயிற்சிகள் அளித்துள்ளோம். இவை, குழந்தைகளுடன் எளிதில் நெருங்கி விளையாடும். இங்கே, பிறந்தநாள் போன்ற சிறிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு, அறைகள் இருக்கின்றன. செல்லப்பிராணி அச்சமயத்தில் உடனிருக்க விரும்பினால், அதற்காக ஏற்பாடு செய்து தருகிறோம். விருந்து என்பது வெறுமனே வயிறுக்கு மட்டுமல்ல, மனதும் நிறைய வேண்டுமல்லவா, என்றார்.