ADDED : அக் 25, 2025 06:46 AM

த ஞ்சாவூரை சேர்ந்த டான்மேத்யூ, பொறியியல் பட்டதாரி. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, மக்காவ் பறவை இனப்பெருக்கம் செய்கிறார். இப்பறவையை யாரெல்லாம் வளர்க்கலாம், எப்படி பராமரிப்பது என்பது குறித்து, நம்மிடம் பகிர்ந்தவை:
கிளி வகைகளில் மிகப்பெரிய பறவை மக்காவ் எனும் பஞ்சவர்ணகிளி. ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை பூர்வீகமாக கொண்டது. இதில் அளவில், சிறிய, நடுத்தர, பெரியவை என நிறைய வகைகள் உள்ளன.
உலகளவில் பெரிய பறக்கும் கிளி செந்நீல பஞ்சவர்ணகிளி தான். இது, கிட்டத்தட்ட 140 செ.மீ., வரை சிறகு விரிக்கும். சிறிய வகை பஞ்சவர்ணகிளி, 30 ஆண்டுகள் வரையும், பெரிய வகை பறவை என்றால் அதிகபட்சம் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
இப்பறவை வீட்டில் இருந்தால் கிட்டத்தட்ட இரு தலைமுறையினருடன் பந்தம் தொடருவதை உணரலாம். சிவப்பு, பச்சை, ஊதா, செந்நீலம், மஞ்சள் என பல்வேறு வண்ணங்கள் கலந்து இவற்றின் இறக்கைகள் இருப்பதால், இவை பறந்தால் கண்கொள்ளா காட்சியாக, அழியா உயிர் ஓவியமாக இருப்பதை காணலாம்.
பச்சை இறக்கை பஞ்சவர்ணகிளி தான், இரண்டாவது மிகப்பெரிய பறவை. இது அதீத கூச்ச சுபாவம் கொண்டது. உரிமையாளர் தவிர பிறரிடம் எளிதில் நெருங்காது. பொதுவாக இவை, பெரிய இறக்கைகளை கொண்டிருந்தாலும், குழந்தைகளிடம் மென்மைாகவே நடந்து கொள்ளும். உங்கள் கையில் உணவு கொடுத்து வளர்த்தால், அழைத்ததும் தோளில் வந்து அமர்ந்து காதில் ரகசியம் சொல்லும்.
இது அதீத புத்திசாலி என்பதால், பயிற்சி அளித்தால், வீட்டை விட்டு எங்கே பறந்தாலும், மீண்டும் வந்துசேரும். வீட்டிற்குள் இருக்கும் போது, இதற்கு கூண்டு தேவைப்படாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, ஓய்வு எடுக்க விடுவதாக இருந்தால், 5*5 அளவுள்ள கூண்டு போதும்.
இதை இடவசதியில்லாத சிறிய வீடுகள், அப்பார்ட்மெண்ட்டுகளில் வளர்க்க முடியாது. இவை சுதந்திரமாக பறக்க போதிய இடவசதி வேண்டும்.
அவகோடா தவிர மற்ற பழங்களை சாப்பிட கொடுக்கலாம். முளைக்கட்டிய பயிறு, அனைத்துவிதமான விதைகள் சாப்பிட கொடுக்கலாம். எல்லா காய்கறிகளும் விரும்பி சாப்பிடும்.
அதீத அளவு உணவு கொடுத்தால் சில நேரங்களில் செரிமான பிரச்னை ஏற்படலாம். வாந்தி, சோர்வு, பறக்க கஷ்டப்படுவது போன்ற அறிகுறிகளால் இதை அறியலாம். இச்சமயங்களில், கால்நடை மருத்துவர், பறவை ஆர்வலர்களின் ஆலோசனையை பின்பற்றி, உணவுமுறை மாற்ற வேண்டும்.
இப்பறவை வாங்கி, கூண்டுக்குள் அடைக்காமல், தினசரி சிறிது நேரம் அதை கையில் வைத்து கொஞ்சி, விளையாடும் போது, அது மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது அதன் இறக்கையின் நிழலில் நீங்கள் இளைப்பாறலாம், என்றார்.

