
பா ம்பு, பல்லி, கரப்பான் பூச்சி என, பல வகை எக்ஸாடிக் செல்லப்பிராணிகளை வளர்ப்பது குறித்து, சென்னை, திருவெற்றியூரில் உள்ள ஜூபிலிஸ்ட் (Zoophilist) , நிறுவனர் ஹேமபிரியா கூறியதாவது:
ராயல் பால் பைத்தான் செல்லப்பிராணியாக பாம்பு வளர்க்க நினைப்பவர்களுக்கு, சிறந்த தேர்வாக இருப்பது, ராயல் பால் பைத்தான். இதன் பூர்வீகம் ஆஸ்திரேலியா. கிட்டத்தட்ட, 25-30 ஆண்டுகள் உயிர்வாழும். இது பிறந்து ஓரிரு மாதத்தில் இருந்து விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதன் உணவு எலி. இதை கடிக்காமல், அப்படியே விழுங்கிவிடுவதால், சாப்பாடு கொடுத்த முதல் மூன்று நாட்களுக்கு, பாம்பை கையில் எடுத்து விளையாட அழைக்க கூடாது. நான்காவது நாளில் இருந்து கையில் வைத்து கொஞ்சலாம். வாரத்திற்கு ஒருமுறை உணவளித்தாலே போதும். இது கடிக்காது என்பதால், யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஒன்றரை மாத பாம்பின் விலை ரூ.15 ஆயிரம்.
கரப்பான்பூச்சி நம் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை போல அல்லாமல், அளவில் பெரியதாக, இறக்கை இல்லாமல், இது காணப்படுகிறது. இதன் பூர்வீகம், ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர். இது வெஜிடேரியன் என்பதால், காய்கறி, பழங்களை சாப்பிட கொடுக்கலாம். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உயிர்வாழும். 5-7 இஞ்ச் வளருவதால், மூடப்பட்ட கண்ணாடி பெட்டியில், தேங்காய்நார் போட்டு, அதற்குள் விடவேண்டும். இதற்கு இருட்டு தான் பிடிக்கும். இதன் பெட்டிக்குள் பானை, கொட்டாங்குச்சி வைத்துவிட்டால், ஒளிந்து கொள்ளும். இது பிறந்து ஒன்றரை வயதில், இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். ஜோடியாக வளர்ப்பதே நல்லது. 100-150 குட்டிகள் வரை போடும். ஒரு ஜோடி குட்டி கரப்பான்பூச்சியின் விலை 1,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
நந்தை எங்களிடம் இருப்பது, 'ஆப்பிரிக்கன் ஆல்பினோ ஜெயன்ட் லாண்டு ஸ்னைல்'. இது அதிகபட்சம் 10 செ.மீ., வரை வளரும். இது வெஜிடேரியன் என்பதால், சிட்ரிக் அமிலம் இல்லாத காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளை கொடுக்கலாம். 10-15 ஆண்டுகள் உயிர்வாழும். இதற்கு, 20 ஆயிரம் பற்கள் உள்ளன. ஆனால், நம்மை கடிக்காது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை, தன் இனத்தை தாமே மாற்றி கொள்ளும். அதாவது, முதல் ஆறு மாதம் பெண்ணாகவும், அடுத்த ஆறு மாதம் அதுவே ஆண் தன்மையாக மாறி கொள்வதால், தாமாகவே இனப்பெருக்கத்திற்கு தயாராகி கொள்ளும். இருப்பினும் ஜோடியாக வளர்ப்பதே சிறந்தது. ஒருமுறை இனப்பெருக்கம் செய்தால், 150 முட்டைகள் வரை இடும். ஒரு மாத நத்தை குட்டியின் விலை 400 ரூபாய்.
உடும்பு 'மானிட்டர் லிசார்டு' என்ற இந்த உடும்பின் பூர்வீகம், ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள சவானா பாலைவனம். கிட்டத்தட்ட 12-15 ஆண்டுகள் உயிர்வாழும். 4-5 அடி உயரம் வரை வளரும். நம் நாட்டிலுள்ள உடும்பு போலவே காணப்பட்டாலும், இதை சிறியதாக இருக்கும் போதே எடுத்து வளர்த்தால், உரிமையாளரை கடிக்காது. இதை, 10X10 அளவுள்ள தனியறையில் வளர்ப்பதே நல்லது. முதலை போலவே, நீரிலும், நிலத்திலும் வாழும் என்பதால், தண்ணீர் அவசியம் வைக்க வேண்டும். இது பாலைவன உயிரினம் என்பதால், அதன் இருப்பிடம் வெப்பமாக இருக்க வேண்டும். இதற்கு பல்ப் செட்-அப் ஏற்படுத்தலாம். தினசரி ஒரு மணி நேரமாவது, உடும்புடன் விளையாட வேண்டும். ஒன்றரை மாத குட்டி உடும்பின் விலை 27 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

