ADDED : அக் 25, 2025 06:48 AM

சே லம், எருமாபாளையத்தில், 'டாக் வாத்தி' (Dog Vaathi) என்ற பெயரில், பப்பிகளுக்கான பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் சிவாசன்; பொறியியல் பட்டதாரி. ஆல்பா பப்பி பற்றி அவர் கூறியதாவது:
தெருநாய், நாட்டுநாய் முதல் அனைத்து இனங்களிலும், ஒவ்வொரு பிரசவத்திலும், ஒரு துடிப்பான பப்பி பிறக்கும். அது தன்னுடன் பிறந்த மற்ற பப்பிகளுக்கு தலைவனாக நடந்து கொள்ளும். பிற பப்பிகளை தன் தாயிடம் நெருங்கவிடாது. இது சாப்பிட்ட பிறகே மற்ற பப்பிகளை அனுமதிக்கும். இந்த சுபாவம் கொண்ட பப்பிக்கு, பயிற்சி அளித்து, அதனிடம் உள்ள சிறப்பு தன்மையை கண்டறிந்து காவல், ராணுவத்திற்கு பயன்படுத்தலாம்.
ஆனால், இதை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவெடுத்தால், அது சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். குடும்பத்தில், யார் அப்பப்பியுடன் நேரம் செலவிடுகிறார்களோ அந்நபரை மட்டுமே, தன் உரிமையாளராக தேர்வு செய்யும். அசாதாரண சூழலில், உரிமையாளர் தவிர, வேறு யாருக்கும் கட்டுப்படாது.
இது எல்லா இனங்களிலும் இருக்கும் என்பதால், 'ஆல்பா பப்பி' எது என்பதை கண்டறிய சில விஷயங்களை கவனிக்க வேண்டும். பப்பி வாங்க செல்லும் போது, ஒரு 'லிட்டர்மென்ட்' அதாவது ஒரே பிரசவத்தில் பிறந்த பப்பிகளை நேரில் பார்த்து, சிறிது நேரம் அவற்றின் செயல்பாட்டை கவனிக்க வேண்டும். ஐந்து, ஆறு பப்பிகள் இருக்குமிடத்தில், ஏதாவது ஒன்று மட்டும் அதீத சுறுசுறுப்பாக, எதற்கும் பயப்படாமல், பிற பப்பிகளை மிரட்டினால், அப்பப்பி தான் ஆல்பா பப்பியாக கருதப்படுகிறது.
இணையதளத்தில் ஒரு பப்பியை மட்டும் பார்த்து வாங்கினால், அது ஆல்பா பப்பிதானா என்பதை அது வளர வளர, அதன் சுபாவங்கள் அடிப்படையில்தான் இனம்காண முடியும். குறிப்பாக, உணவை தட்டில் வைத்ததும், அது சாப்பிடாமல் இருக்கும் போது நீங்கள் தட்டை தொட்டாலே, கோபம் வந்து 'உர்ர்' என சத்தமிடும். கடிக்க வரும் போது நீங்கள் அடித்தால், ஒரு அடி பின்வாங்கி பின் மீண்டும் கடிக்க வரும். வீட்டிற்குள் புதிய ஆட்களை நுழையவே அனுமதிக்காது. இப்பழக்கத்தை ஆரம்பத்திலே பயிற்சி மூலம், சரி செய்ய வேண்டும்.
ஆல்பா பப்பியை பொறுத்தவரை, தட்டில் உணவு வைத்து நீங்கள் சென்றுவிட்டால், தட்டு தான் அதற்கு உணவு தருகிறது என நினைக்கும். இதை சரிசெய்ய, அது சாப்பிடும் வரை அருகில் இருப்பது, உணவை சில நேரங்களில் நீங்களே கொடுப்பது என, அதனுடன் நேரம் செலவிட வேண்டும்.
ஆல்பா பப்பி மட்டுமல்ல, எந்த இன நாயாக இருந்தாலும், பிறந்து 9 மாதம் முதல் ஒன்றரை வயது வரையிலான காலக்கட்டத்தில், அதன் இயல்பான குணாதிசயம் வெளிபட ஆரம்பிக்கும். இதற்கு முன்பே, அதன் சேட்டைகளை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், பின் பயிற்சி அளித்தாலும் முழுமையாக மாற்ற முடியாது.
சிலர் பப்பி அதீதமாக குறும்பு செய்யும் போது, தான் சொல்வதை கேட்க வேண்டுமென குச்சியை காட்டி மிரட்டுவர். அதுவும் பணிந்துவிடும். குச்சி இல்லாத சமயத்தில், அது உங்கள் குரலுக்கு கட்டுப்படாது. இதற்காக தான், பப்பிக்கு 3 மாதம் முடிந்தவுடன் பயிற்சி அளித்து, செல்லப்பிராணியாக வளர்ப்பதாக இருந்தால், உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அதன் இயல்பை மாற்றி, அதனுடன் நேரம் செலவிடவேண்டுமென வலியுறுத்தப்படுகிறது, என்றார்.

