சர்வதேச போட்டியில் சாதனை; 'மேக்ஸ்'க்கு குவியும் பாராட்டு
சர்வதேச போட்டியில் சாதனை; 'மேக்ஸ்'க்கு குவியும் பாராட்டு
ADDED : ஆக 09, 2025 01:34 AM

அ மெரிக்காவை சேர்ந்த, 'புரொக்சன் ஸ்போர்ட் அசோசியேஷன்' சார்பில், சர்வதேச நாய்களுக்கான திறன் அறிதல் போட்டியில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின், ராட்வீலர் நாய் முதல்கட்ட தகுதி போட்டியில், முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்போட்டிக்கு தயாரான விதம் குறித்து, செல்லமே பக்கத்திற்காக, பாலமுருகன் பகிர்ந்தவை:
என், மேக்ஸ்-க்கு (ராட்வீலர் ப்ரீடு), மூன்றரை மாதத்தில் இருந்து பயிற்சி அளிக்கிறோம்; தற்போது 5 வயது. வழக்கமான 'ஒபீடியன்ஸ்' பயிற்சி போல அல்லாமல் திறனை வெளிப்படுத்துவது, சூழலை புரிந்து நடத்தல், உரிமையாளரை பாதுகாப்பது, பாதுகாவல் பணியில் ஈடுபடும் போது எப்படி உத்தரவுக்கு கட்டுப்படுவது போன்ற புதுவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மற்ற பெரிய வகை நாய்களை ஒப்பிடுகையில் ராட்வீலருக்கு உள்ளார்ந்த ஆற்றல் குறைவு. இருப்பினும் தொடர் பயிற்சிகளால், அதை உலகளாவிய போட்டியில் பங்கேற்க வைத்ததில் பயிற்சியாளர் சுகர்நேஸ் என்பவரின் பங்களிப்பே முக்கியமானது.
அமெரிக்காவை சேர்ந்த, புரொக்சன் ஸ்போர்ட் அசோசியேஷன் (பி.எஸ்.ஏ.,) சார்பில், நாய்களின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான போட்டி, உலகளவில் நடத்தி, அதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு ரேங்க் வழங்கப்படுகிறது. இதில், மூன்று கட்ட போட்டிகள் இருக்கும். ஒவ்வொரு கட்ட போட்டியிலும் நுழைவதற்கு முன்பு தகுதி போட்டி நடத்தப்படும்.
இதில் சமீபத்தில், பூனேவில் நடந்த தகுதி சுற்றுக்கான போட்டியில், மேக்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து, இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற, முதல் பப்பி மேக்ஸ் தான். இதோடு, உலகளவில் இதுவரை நடந்த போட்டிகளில், ராட்வீலர் நாய்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டால், என் மேக்ஸ் பப்பி மொத்தம் 150க்கு,141 புள்ளிகள் பெற்று, இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில், லண்டன், நார்விச் பகுதியை சேர்ந்த, 'கிங்' என்ற ராட்வீலர் பப்பி, 145 புள்ளிகள் பெற்றுள்ளதாக, பி.எஸ்.ஏ., வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் எதிராளியை கடிக்குமாறு உத்தரவிடும் போது, உடலில் கை, கால் போன்ற குறிப்பிட்ட இடத்தை மட்டுமே, நாய் குறி வைக்க வேண்டும். இதோடு அது ஆக்ரோஷமாக கடிக்க தாவும் போது, திடீரென நிறுத்துமாறு உத்தரவு வந்தாலும், அது கடிக்காமல் மீண்டும் திரும்பி வந்துவிட வேண்டும்.
தனிப்பட்ட பாதுகாவலுக்காக நாய் வளர்க்கும் போது, அது உரிமையாளரின் உத்தரவுக்கு உடனே கீழ்படிய வேண்டும். வெளிநாடுகளில், தப்பி செல்லும் குற்றவாளியை பிடிக்க, பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்துவர். அது ஆக்ரோஷமாக தாக்க முற்படும் போது, குற்றவாளி சரணடைந்தால், நாய் தாக்குதலில் ஈடுபட கூடாது. இதை மீறினால், உரிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பயிற்சி பெற்ற நாய்களை மட்டுமே, காவல்துறை, ராணுவத்திற்கு பயன்படுத்த முடியும். இதை ஊக்குவிக்கவே, இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன, என்றார்.