ADDED : நவ 01, 2025 06:46 AM

''ஒ ரு குழந்தை தவழ்ந்து, தத்தி நடைபழகி, தாமாகவே எழுந்து ஓடி, விளையாடி, மழலை மொழியை காற்றில் கரைத்து, சிணுங்கி, சிரிக்கும் போது எவ்வளவு பேரானந்தம் ஏற்படுகிறதோ, அதேமாதிரியான உணர்வை, மீண்டும் ஏற்படுத்தி தருபவை செல்லப்பிராணிகளே. குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்ட உங்கள் பப்பிக்கு, பிறந்தநாள் கொண்டாட விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம் என்கிறார் சக்தி.
மதுரையில், பைரவா கென்னல் நடத்தி வரும் சக்தி அரவிந்த், செல்லப்பிராணிகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார். இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணிகளுக்கு பிறந்தநாள், வளைகாப்பு, முக்கிய விசேச தினங்களை கொண்டாட பலரும் விரும்புகின்றனர். அவைகளுக்கான கொண்டாட்டத்தில், நாம் சாப்பிடும் கேக் வாங்கி வெட்டும் போது அதை பப்பிக்கு கொடுக்க முடியாது. இனிப்பு, செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தப்பட்ட பேக்கரி பொருட்களை, பப்பிகளுக்கு சாப்பிட கொடுக்க கூடாது. இதனால், அவை விரும்பி சாப்பிடும் பொருட்கள் கொண்டு கேக் தயாரிக்கிறோம்.
சிக்கன், முட்டை கொண்டு தயாரிக்கும் 'கேக்'கை, பப்பி மிச்சம் வைக்காமல் சாப்பிடுகின்றன. இதில் நிறமூட்டியாக, பீட்ரூட், கேரட், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். தயிர் மற்றும் முட்டை கலவையில், கேக் மீது வார்த்தைகள் எழுதுகிறோம். இதில் எண்ணெய், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட பேக்கரி பொருட்கள் என எதுவும் சேர்ப்பதில்லை. இதனால், பப்பி எவ்வளவு சாப்பிட்டாலும், அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.
இதில் உங்கள் பப்பி விரும்பி சாப்பிடும் காய்கறி, பழங்கள், பிஸ்கட் போன்றவை கொண்டும் அழகுப்படுத்தலாம்.இக்கொண்டாட்டத்திற்கான அனைத்து டெக்கரேஷன்களையும், நாங்களே செய்து தருகிறோம். எங்கள் இடத்தில் வந்தும் பிறந்தநாள் கொண்டாடலாம். பப்பியுடனான இனிய தருணங்கள் கொண்டாடும் போது, அவை மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தி தருகின்றன, என்றார்.

