பப்பிக்கும் குர்தா, வேட்டி, லெஹங்கா, பந்தனா அட, பார்ரா!
பப்பிக்கும் குர்தா, வேட்டி, லெஹங்கா, பந்தனா அட, பார்ரா!
ADDED : ஆக 22, 2025 11:27 PM

''நி ழல் போல உங்களை சுற்றி சுற்றி வரும் பப்பியை பண்டிகை, விசேஷ நாட்களில் மேலும் அழகுபடுத்தி ரசிக்க, பல்வேறு ஆடை, அலங்கார பொருட்களை வடிவமைக்கிறோம்,'' என்கிறார், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பர்எவர் ஸ்டெபி' (furever steffie) என்ற செல்லப்பிராணிகளுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் சேத்னா.
அவர் நம்மிடம் பகிர்ந்தது:
செல்லப்பிராணிகள் நம் குடும்பத்தின் அங்கமாக மாறிவிட்டன. நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறோம். வித்தியாசமான ஸ்டைலில் முடி வெட்டி விடுவது, எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்வது என அவை நம் நிழல் போல பின்தொடர்கின்றன.
என் முதல் குழந்தையான ஸ்டெபிக்கு (சிட்ஜூ பப்பி), ஆடை வடிவமைத்து அணிவித்தேன். இதை அணிந்து கொள்ள, ஸ்டெபி விரும்பியதோடு, வித்தியாசமாக 'போஸ்' கொடுத்தது. இதை பார்த்த பலரும் தங்களின் செல்லப்பிராணிக்கும் ஆடை வடிவமைத்து தருமாறு கேட்டனர். இப்படியாக தான், செல்லப்பிராணி ஆடை வடிவமைப்பை பிசினஸாக மாற்றினேன்.
பப்பிக்கான பிறந்தநாள், வீட்டு விசேஷங்கள், பண்டிகை நாட்கள், சுற்றுலாவிற்கு செல்லும் போது, பப்பிக்கு ஆடை அணிவித்து, புகைப்படம் எடுத்து, பொக்கிஷமாக வைத்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். இதற்காக, பப்பிக்கு எந்த விதத்திலும் அசவுகரியம் ஏற்படுத்தாத வகையில் ஆடைகளை வடிவமைக்கிறோம்.
காட்டன், மென் பட்டு துணிகளில், பப்பிக்கு உறுத்தாத வகையில் வெல்குரோ, பட்டன் இணைக்கப்படுகிறது. குர்தா, வேட்டி, லெஹங்கா, பந்தனா, கழுத்தில் அணிவிக்கப்படும் டை, கவுன் என வித்தியாசமான மாடல்கள் ஆடைகள் உள்ளன. உரிமையாளரின் உடைக்கு ஏற்ற அதே டிசைனிலும் வடிவமைத்து தருகிறோம். பப்பியின் அளவுக்கேற்ப, வாடிக்கையாளருக்கு பிடித்த டிசைன்களில் வடிவமைப்பதோடு, சந்தைகளில் கிடைக்காத வகையில், சில வித்தியாசமான டிசைன்களை ஆடைகளில் உருவாக்குவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆதரவு தருகின்றனர்.
இந்தியா முழுக்க, பல்வேறு நகரங்களில், எங்களுக்கு ஆன்லைன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பப்பிக்கு கழுத்தில் அணிவிக்கும் டை, பந்தனா ஆகியவை, 499 ரூபாயில் இருந்து விற்பனை செய்கிறோம். லெஹங்கா, குர்தா ஆகியவை, 1,049 ரூபாயில் இருந்து வாங்கலாம். பப்பியின் அளவு டிசைனுக்கேற்ப, விலை மாறுபடும். ஒருமுறை எங்களின் ஆடையை அணிவிப்போர், மீண்டும் தேடி வருகின்றனர்.
சிலர் பப்பிக்கு ஆடை அணிவிப்பதெல்லாம் அவசியமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இது, உரிமையாளர்களின் விருப்பம், மனநிலையை சார்ந்தது!, என்றார்.