ADDED : செப் 19, 2025 08:59 PM

மருத்துவமனை தேடி வரும், 50 சதவீத பப்பிகளின் பிரச்னை உண்ணிக்காய்ச்சலாக தான் இருக்கிறது. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் இந்த உண்ணிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதை தடுக்கும் முறை பற்றி விளக்குகிறார், கோவையை சேர்ந்த கால்நடை மருத்துவர் செல்வக்குமார்.
அவர் கூறியதாவது:
உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பை பொதுவாக, உண்ணிக்காய்ச்சல் என குறிப்பிடுகின்றனர். ஆனால், மருத்துவ சிகிச்சையில், நான்கு விதமான நோய்களாக பிரிக்கப்படுகின்றன. அவை, ஏர்லிகியா (Ehrlichia), பேபிசியா (Babesia) , அனபிளாஸ்மா (Anaplasma) , ஹெபடோசூன் (Hepatozoon) என்பதாகும். இதில், முதல் மூன்று நோய்கள், பப்பியை உண்ணி கடிப்பதால் உமிழ்நீர் வழியாக பரவுகிறது. 'ஹெபடோசூன்' மட்டும் தோலில் அரிப்பு ஏற்படும் போது, உண்ணியை பப்பி கடிப்பதாலோ, விழுங்குவதாலோ ஏற்படுகிறது.
எதனால் பரவுகிறது
பொதுவாக உண்ணிகள் சூடான, குளிர்ந்த வானிலை, தடுப்பு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, நகரமயமாதல், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தல், தோல் மற்றும் முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பரவுகிறது.
ஒரு உண்ணி, 3000- - 5000 முட்டைகள் இடக்கூடும். இவை நம் கண்ணுக்கு தெரியாது. முட்டையில் இருந்து உண்ணியாக மாற இரண்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம். இதனால், ஒருமுறை உண்ணியால் பாதிக்கப்பட்ட பப்பிக்கு தொடர்ச்சியாக, ஓராண்டு வரை தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான், உண்ணியின் பிடியில் இருந்து பப்பியை, முழுமையாக பாதுகாக்க முடியும்.
அறிகுறி
அதிக காய்ச்சல், விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, சோர்வு, எடைக்குறைவு, உணவு உண்ணாமை, ரத்தசோகை, தட்டையணுக்கள் குறைவதால், பப்பியின் மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுதல், சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தசை, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் மூலம், உண்ணிக்காய்ச்சல் இருப்பதை அறியலாம்.
இது தீவிரமடையும் போது, பப்பிக்கு சுவாசம் குறைதல், மஞ்சள்காமாலை ஏற்படுதல், திடீர் மரணம் கூட நிகழலாம். இந்த கிருமிகளின் பெருக்கம் அதிகமடையும் போது, அவை ரத்தத்தில், தேவையில்லாத சிறிய சிறிய கட்டிகளை உருவாக்கி, ரத்த உறைதலுக்கு தேவையான பொருட்களை வீணடித்து, பெரும் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இச்சமயத்தில் உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.
சிகிச்சை முறை
எந்த வகை உண்ணிக்காய்ச்சல் என்பதை, ரத்த பரிசோதனை மூலமாக அறியலாம். 'பி.சி.ஆர்.,' பரிசோதனை மூலமாக நோயின் தன்மையை துல்லியமாக அறிய முடியும். கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தி கொள்ளலாம். ஆரம்பநிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, 'டாக்ஸிசைக்ளின்' மருந்து கொடுக்கப்படும். தீவிரமான பாதிப்பாக இருந்தால், ரத்தமாற்று சிகிச்சை, பிளாஸ்மா மாற்று சிகிச்சை, குளுக்கோஸ் ஏற்றுதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
வருமுன் காத்தல்
உண்ணிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஸ்பிரே, மாத்திரைகள், ஊசிகள் செலுத்தப்படுகின்றன. இருப்பினும், வருமுன் காத்தலே சிறந்த வழிமுறை என்பதால், செல்லப்பிராணிகளை அடிக்கடி பரிசோதித்து உண்ணிகளை அகற்றுவது, தோல், முடி பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பப்பியை மட்டுமல்லாமல், வீடு, அவை விளையாடும் இடம், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில், உண்ணிகள் வராமல் தடுக்க, சுத்தமாக பராமரிக்க வேண்டும். இது, பப்பிக்கு மட்டுமல்லாமல், குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.