ADDED : செப் 07, 2024 11:49 AM

''அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'கேட் பேன்சியர் அசோசியேஷன்', 45 வகை பூனைகளின் உடலமைப்பு, அதன் தனித்துவம் குறித்து வரையறுத்துள்ளது. ஒரிஜினல் ப்ரீட் வாங்கும் முன்பு, குறிப்பிட்ட ரக பூனை பற்றி ஆய்வு மேற்கொள்வதோடு, அதன் தலைமுறை விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்கிறார் டாக்டர் கீர்த்தி.
கோவையை சேர்ந்த, தோல் நோய் மருத்துவரான இவர், பூனை பிரியரும் கூட. 'மெய்ன்கூன்', 'பெங்கால்', 'டொமஸ்டிக் லாங் ஹேர்' என, 20க்கும் மேற்பட்ட பூனைகளை வீட்டில் வளர்க்கிறார். 'கேட் ஷோ'க்களில் தன் பூனை பெற்ற விருதுகளை காட்டிய பின், நம்மோடு பகிர்ந்தவை:
பூனை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. அதிக சத்தம் எழுப்பாமல், வீட்டிற்குள்ளே இருப்பதால், பூனை வளர்க்க பலரும் ஆசைப்படுகின்றனர். நாட்டு பூனையில் இருந்து, வெளிநாட்டு ரக பூனை வரை வளர்த்திருக்கிறேன். ஒவ்வொரு ப்ரீடும் தனித்துவமானவை.
இதன் உடலமைப்பு, வளர்ச்சி குறித்து, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'கேட் பேன்சியர் அசோசியேஷன்' உட்பட பல்வேறு உலகளாவிய அமைப்புகள் வரையறுத்துள்ளன.
ஒரு பூனை வாங்கும் முன்பு, அது ஒரிஜினல் ப்ரீடா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பிட்ட பூனையின் பெற்றோர், அதன் தலைமுறை அறிந்து வாங்கினால், மரபு ரீதியான நோய் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
முடி அதிகமாக இருப்பதால், சுவாச ரீதியான பிரச்னை இருப்போர், பூனை வாங்க தயங்கலாம். இவர்கள், முடியே இல்லாத 'ஸ்பிங்க்ஸ்' மியாவ் வளர்க்கலாம். முடி குறைவாக இருக்கும், 'ஓரியன்டல் ஷார்ட் ஹேர்', 'பெங்கால்', 'சியாமிஸ்', 'கார்னிஷ் ரெக்ஸ்' பலரும் விரும்பி வளர்க்கின்றனர். உடல்முழுக்க மென்மையான முடியுடன், துறுதுறுவென இருக்கும், 'மெய்ன்கூன்', 'பெர்ஷியன்', 'டொமஸ்டிக் லாங் ஹேர்' ப்ரீடுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
பூனையை பொறுத்தவரை, மாமிச உண்ணி என்பதால், இறைச்சி விரும்பி சாப்பிடும். இதற்கு புரோட்டீன், டாரின் அதிமுள்ள உணவுகள் கொடுப்பது, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எக்காரணம் கொண்டும், பால், தயிர், அரிசி, சாக்லெட், ட்ரை ப்ரூட்ஸ், ஸ்வீட்ஸ் கொடுக்கவே கூடாது. இவை, பூனைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
பூனைக்கு ஆறு மாதத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். இனப்பெருக்கம் (ப்ரீடிங்) செய்வதாக இருந்தால், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ப்ரீட் செய்வதே சிறந்தது. அடிக்கடி இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தினால், தாய் பூனையின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, ஆரோக்கியமான சந்ததி உருவாகாது.