தாய் நாயின் நீதி போராட்டம்... சொல்கிறார் இயக்குனர் நித்தின் வேமுபதி
தாய் நாயின் நீதி போராட்டம்... சொல்கிறார் இயக்குனர் நித்தின் வேமுபதி
ADDED : மார் 07, 2025 08:48 PM

விபத்தில் பறிகொடுத்த, தன் பப்பிக்காக, நீதி கேட்டு போராடும் ஒரு தாய் நாயின் கதை தான் கூரன் திரைப்படம். பிப்ரவரி 28 ம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. வித்தியாசமான திரைக்கதையுடன், ஒரு நாயின் நீதிப் போராட்டத்தை, பாசப்பிணைப்பை, காட்சிகளின் வழியாக தத்ரூபமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நித்தின் வேமுபதி.
இவரிடம், 'செல்லமே' பக்கத்திற்காக எடுக்கப்பட்ட சிறப்பு பேட்டி:
ஒரு நாயின் நீதிப்போராட்டம்- இக்கதைக்கரு பற்றி...
சாலை விபத்தில் இறக்கும் விலங்குகள் பற்றி படிக்கும் போதெல்லாம், இதில் பாதிக்கப்பட்ட ஜீவன் மீது என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி தான் முதலில் தோன்றும். ஒருமுறை, இவ்விபத்தை நேரில் கண்ட போது, அக்காட்சிகளால் மிகவும் பாதிக்கப்பட்டேன். இறக்கும் தருவாயில் அந்த நாய் பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
அப்பாதிப்பில் வந்த கதைக்கரு தான், கூரன் திரைப்படமானது. மனிதர்களுக்கு அநீதி நடக்கும் போது போலீஷ் ஸ்டேஷனையோ, கோர்ட்டையோ அணுகுகின்றனர். நாய் உள்ளிட்டவிலங்குகளுக்கு நடக்கும் அநீதிக்கு எப்படி நீதி கிடைக்கும். தனக்கு நேர்ந்த கொடுமையை, வாய்விட்டு சொல்ல முடியாத ஜீவன்கள், உணர்வு ரீதியாக, அதை வெளிப்படுத்தும் போது, எப்படி இருக்கும் என்ற கற்பனையால், இக்கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறோம்.
திரைக்கதை உருவாக்கத்தில் சந்தித்த சவால்கள் என்ன?
கொடைக்கானலில் 30 நாட்கள், சென்னையில் 15 நாட்கள், ஷூட்டிங் நடந்தது. இதில், பிப்ரவரி மாதத்தில், ஷூட்டிங் துவங்கியதால் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டோம். இதில், படத்தில் நடித்த நாயின் ஒத்துழைப்பு அபரிமிதமானது. நாய் பயிற்சியாளர் செந்து மோகன், மிக சிறப்பாக அதற்கு பயிற்சி அளித்துள்ளார். படத்தில் வரும் அனைத்து காட்சிகளிலும் வெளிப்படும் சோகம், கதறல், கண்ணீர், நீதி கேட்கும் போது ஏற்படும் ஆதங்கம் என நாயிடம் வெளிப்படும் அத்தனை உணர்ச்சிகளும், உண்மையாக வெளிப்பட்டவை. இதில், எந்த தொழில்நுட்ப வேலைகளும் செய்யப்படவில்லை. இதில் பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை.
மறக்கமுடியாத சம்பவம் ஏதேனும் உண்டா?
நிறைய இருக்கிறது. 25 நாட்கள் தொடர்ந்து, ஷூட்டிங் முடிந்த பிறகு, படத்தில் பாதிக்கப்பட்ட நாயின் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஓய்வு கட்டாயம் தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவர் அடுத்தநாளே, புது உற்சாகத்துடன், ஷூட்டிங் நடக்குமிடத்துக்கு வந்துவிட்டார். தனிப்பட்ட ஒருவனுக்காக பலரின் வேலைகள் தடைப்படக்கூடாது, தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார். இந்த வயதிலும், அவரின் தொழில் பக்தியை கண்டு மிகவும் வியப்படைந்தேன்.
கூரன் என்ற பெயரின் பின்னணி என்ன?
கூரன் என்றால் கூர்மையான அறிவுடையவன் என்பது பொருள். முதலில் பைரவன் என பெயரிட்டோம். இப்பெயர் ஏற்கனவே வைக்கப்பட்டதால், வித்தியாசமாக இருக்கட்டுமே என, கூரன் என பெயரிட்டோம். இதற்கு தமிழில், நாய் என்ற அர்த்தமும் இருக்கிறது.
பார்வையாளர்களுக்கு கூற விரும்புவது?
மனிதர்களை போலவே, உணர்வு, உணர்ச்சிகள், விலங்குகளுக்கும் உண்டு. தன் குழந்தையை பறி கொடுத்த ஒரு தாயின் பாசப்போராட்டத்தை, விலங்குகளிடமும் காணலாம். குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிப்பதோடு, குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொல்லும் படம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை கூறியிருக்கிறோம். திரையரங்குக்கு நேரில் வந்து படத்தை கண்டுகளியுங்கள்.