
''தகதகவென மின்னும் மேனி, வித்தியாசமான உடல்வாகுடன், கண்களை சிமிட்டியபடியே, நம்மை பார்த்ததும், முத்தமிட முந்தி நீந்தும் தங்க மீனுக்கு, குட்டீஸ் முதல் பெரியவர் வரை, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது,'' என்கிறார், கோல்டு பிஷ் பார்ம் இண்டியா' உரிமையாளர் நிர்மல் ஆம்ப்ரோஸ்.
கோவையை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார். ஐ.டி., துறையில் வேலை பார்த்துக் கொண்டே, 14 ஆண்டுகளாக, தங்க மீன் (கோல்டு பிஷ்) பிசினசை மேற்கொண்டு வருகிறார்.
இவர் கோல்டு பிஷ் பற்றி, நம்மிடம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்:
'கார்ப்' பிஷில் இருந்து கலப்பினம் செய்யப்பட்டது தான், கோல்டு பிஷ். இதன் பூர்வீகம் சீனா. அந்நாட்டில், 200க்கும் மேற்பட்ட கோல்டு பிஷ் வெரைட்டி இருப்பதாக கண்டறியப்பட்டு, சமீபத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அங்கு சிலர், 'வாஸ்து'க்காகவும் வளர்க்கின்றனர்.
இது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் பிரீட் செய்து விற்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அடி வரை வளருவதால், குறைந்தபட்சம் மூன்று அடி கொண்ட தொட்டியை தேர்வு செய்ய வேண்டும்.
பெல்லட், துருவிய கேரட், வேகவைத்து தோல் நீக்கிய பட்டாணி, ப்ரக்கோலி, வெள்ளரிக்காய், விதை நீக்கிய ஆரஞ்ச், ஆப்பிள் மற்றும் வேக வைத்த முட்டையை விரும்பி சாப்பிடும். அதிக உணவு எடுத்துக் கொள்வதால், அதிகளவில் கழிவுகளையும் வெளியேற்றி கொண்டே இருக்கும்.
கோல்டு பிஷ் டேங்கில், ஒரு மணிக்கு 10 தடவையாவது தண்ணீரை சுத்திகரிக்கும் திறனுள்ள, பில்டர் இருப்பது அவசியம். தினசரி 4 மணி நேரமாவது, தொட்டியில் லைட் எரிவது நல்லது.
கோல்டு பிஷ் டேங்கில், வாரத்திற்கு ஒருமுறையாவது, 50 சதவீத தண்ணீரை மாற்ற வேண்டும். அக்வாரியம் கடைகளில் கிடைக்கும், சிறிய கல் போன்ற 'பயோ மீடியா' வாங்கி, இதன் பில்டரில் வைக்க வேண்டும். தொட்டி தண்ணீரிலேயே பில்டரை கழுவும் போது, நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், வீணாவதை தடுக்கலாம்.
குளிர்காலத்தில் கோல்டு பிஷ் மீது, வெள்ளைத்திட்டு, பூஞ்சை தொற்று உருவாகலாம். இதை தடுக்க, ஹீட்டர் வைப்பதோடு, அதன் வெப்பநிலை, 28-- -30 டிகிரி செல்சியஸ் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இது, சராசரியாக 5-- 10 ஆண்டுகள் வரை வாழும். கப்பீஸ், மோலி போன்ற சிறிய ரக மீன்களை, இதனுடன் சேர்த்து நீந்தவிடலாம்.
எத்தனை வெரைட்டி மீன்கள் இருந்தாலும், அக்வாரியம் கிங்-னா அது கோல்டு பிஷ் தான். துடுப்பை அசைத்து தண்ணீரில் நீந்தும், இதன் வசீகரத்தை, வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. கோல்டு பிஷ் டேங்க் இருந்தால், உங்கள் வீடும் புதுப்பொலிவாகிவிடும்.

