மனிதாபிமானம் என்பது எந்த உயிருக்கும் வலி தராதிருப்பது! கவிஞர் தாமரை
மனிதாபிமானம் என்பது எந்த உயிருக்கும் வலி தராதிருப்பது! கவிஞர் தாமரை
ADDED : மார் 21, 2025 11:19 PM

''ஒரு விலங்கைப் பார்க்கும்போது, அதுவும் நம்மைப்போல் ரத்தமும், சதையும், வலியும், குடும்பமும், அன்புமுள்ள, ஓர் உயிரினம் என்பதை உணர்ந்தாலே, விலங்கு உரிமை விரைவில் சாத்தியமாகிவிடும்,'' என்கிறார், கவிஞரும், பாடலாசியருமான தாமரை.
அவர் கூறியதாவது:
விலங்குகள் மீதான கரிசனம், மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளால் எளிதில், நாய், பூனை உள்ளிட்டவற்றின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும். ஐந்தறிவு விலங்கை, இரண்டு வயதுக் குழந்தையின் அறிவுத்திறனுடன் ஒப்பிடலாம். ஆறறிவு மனிதன், தனக்குக் கீழுள்ள வலியுணரும் உயிரினங்களைப் புரிந்து கொள்வதுதான் அந்த ஆறாம் அறிவின் பயன்.
இதற்கு மாறாக, மனித இனம் விலங்குகளைத் தன் பசிக்கு இரையாக்குவது, அவற்றின் உறுப்புகளைப் பிய்த்தெடுத்துத் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது, அடிப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
மனிதாபிமானம் என்பது, எந்த உயிருக்கும் வலிதராதிருப்பது! என் தாய், தந்தை இருவரும் வள்ளுவர், வள்ளலாரைப் பின்பற்றியதால், சின்னஞ்சிறு வயதிலேயே 'உயிர்களிடத்து அன்பு' என்னும் உயர்ந்த நெறி எனக்கு அறிமுகமாகி விட்டது. நானும், என் மகன் சமரனுக்குச் சிறுவயதிலேயே திருக்குறளில், புலால் மறுப்பு அதிகாரத்தைச் சொல்லித் தந்தேன். குழந்தைகளிடம் இரக்கவுணர்வு ஏற்படுத்துவதை ஒவ்வொரு பெற்றோரும் தம் கடமையாகக் கருத வேண்டும்.
'நனிசைவம்' என்பது, எந்த வகையிலும் பிற உயிர்களுக்குத் துன்பம் தராதிருப்பது. அசைவ உணவிலேயே திளைக்கும் வெளிநாடுகளில் கூட, நனிசைவம் குறித்த புரிதல் இன்றைய தேதிக்கு நம்பமுடியாத அளவு அதிகரித்துள்ளது. அசைவ உணவுக்கு எதிராக, மாணவர்கள் கையெழுத்திட்டு, ஆக்ஸ்போர்டு பல்கலை வளாக உணவகத்தில் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பள்ளிகளில், அசைவ உணவில்லாத நாட்கள் (Meatless Monday, Vegan Wednesday) போன்ற வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, விலங்கு நலன் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறது. விலங்குரிமைப் போராளிகள் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது. தொடர் விழிப்புணர்வு பிரசாரங்களால் களால், விரைவில் விலங்கு உரிமை சாத்தியமாகும்.