நாய்களுக்காக வீட்டையே விற்றேன்!: நெகிழ வைக்கும் ஆட்டோ ஓட்டுனர்
நாய்களுக்காக வீட்டையே விற்றேன்!: நெகிழ வைக்கும் ஆட்டோ ஓட்டுனர்
ADDED : ஜூலை 06, 2024 09:17 AM

தெருவில் தனித்துவிடப்படும் நாய்களை தத்தெடுத்து, அதற்காக சொந்த வீட்டையே விற்ற ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் பற்றி கேள்விப்பட்டதும் ஆர்வத்துடன் கிளம்பி கோவை, தீத்திப்பாளையம் சென்றோம்.
சவாரிக்காக காத்திருந்தவர் நம்மை பார்த்ததும் வீட்டிற்கு அழைத்து சென்றார். 'நாய்கள் மீது ஏன் இவ்வளவு கரிசனம்' என்றதும், சிரித்து கொண்டே பேச ஆரம்பித்தார். ஆறு வருஷத்துக்கு முன்னாடி, நைட் சவாரி முடிச்சிட்டு காந்திபார்க் ரவுண்டானா வந்தேன். அன்னைக்கு தீபாவளி. வெடி சத்தத்துக்கு மிரண்டு போய், ஒரு குட்டி பப்பி அலறுனதை கேட்டு வீட்டுக்கு துாக்கிட்டு வந்துட்டேன்.
டாக்டரை பார்த்ததும், பப்பிக்கு கேன்சர் இருக்கறதா சென்னாரு. நல்ல புட், மெடிசின் கொடுத்ததும் கேன்சர்ல இருந்து தேறி வந்துடுச்சு. நாலு வருஷம் எங்களோட இருந்து அப்புறம் தான் இறந்துச்சு. இதுக்கு அப்புறம் எந்த தெருவுல நாய் தனியா இருந்து கஷ்டப்பட்டாலும், வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன். இது, அக்கம்பக்கத்துல இருக்கவங்களுக்கு புடிக்கலை. இதனால, செல்வபுரத்துல இருந்த சொந்த வீட்டை வித்துட்டு தீத்திப்பாளையத்துல நாய்கள் தங்கறதுக்கும் வசதி இருக்கற மாதிரி புது வீடு கட்டுனோம்,'' என்றார் பெருமிதத்துடன்.
உங்க டாக்ஸ பாக்கணுமே என்றதும், ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தினார். இவன் 'பிளப்பி' (லேப்ரடார்). காளாம்பாளையத்துல ரோட்டுல திரிஞ்சிட்டு இருந்துச்சு. நான் வீட்டுக்கு துாக்கிட்டு வந்தப்ப, 4 வயசு இருக்கும். ஒல்லியா, பாக்கவே பரிதாபமா இருந்தான். இப்போ 9 வயசாகுது. வீட்டுக்கு வந்து ரெண்டு, மூணு நாள்லயே, எங்களோட ரொம்ப அட்டாச் ஆகிட்டான்.
இவன் 'ஷான்'; பொமரேனியன் ப்ரீட். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பேரூர்ல இருந்து எடுத்து வந்தோம். இவனும் தீபாவளி அன்னைக்கு தான் வீட்டுக்கு வந்தான். இந்த ராட்வீலர் பேரு 'கிஸ்'. இவனை பராமரிக்க முடியலைன்னு தெரிஞ்சவங்க எங்களுக்கு கொடுத்துட்டாங்க.
இதோ கருப்பா இருக்கறானே, இவன் பேரு 'ஓரியோ'. இவனும் பொமரேனியன் சுவிட்ஸ் ப்ரீட். ரொம்ப துறுதுறுன்னு இருப்பான். புது ஆள் வந்தா, சத்தம் போட்டு காட்டி கொடுத்துடுவான். இவங்களை தவிர, 'கியா', 'லாயல்'-னு ரெண்டு சிட்ஜூவும் இருக்குது.
உங்களை பத்தி... பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. நான், மனைவி, ரெண்டு பொண்ணுங்க, கொஞ்சம் டாக்ஸ். மூத்தவ தன்யா, இப்போ வீட்ல இருந்து ஒர்க் பண்றதால, பப்பிக்கு புட் கொடுக்கறது, குளிப்பாட்டுறது, குரூமிங் பண்றது எல்லாமே இவளோட பொறுப்பு. என் ரெண்டாவது பொண்ணு திவ்யா, ஐதராபாத்ல ஒர்க் பண்றா., வீட்டுக்கு எப்போ வந்தாலும், டாக்ஸோட தான் அதிகம் இருப்பா. இவ்வளவு தான் என்னோட உலகம். இவங்களுக்காக தான் தினமும் ஓடுறேன் என, வெள்ளந்தியாய் சிரித்தார்.