ADDED : ஆக 31, 2024 11:01 AM

''ஐடி துறையில், 12 ஆண்டுகள் வேலை பார்த்தேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களில், செல்லப்பிராணிகளை தத்தெடுப்பது, உணவளிப்பது என, பிசியாக சுற்றிக்கொண்டிருந்தேன். என்னிடம் மட்டுமே 28 நாய்களோடு, பூனை, முயல், சேவல், பன்றி என, செல்லப்பிராணிகளின் பட்டியல் அதிகரித்ததால், விலங்குகளை பராமரிப்பதை முழு நேர வேலையாக்கி கொண்டேன்,'' என்கிறார், சென்னையை சேர்ந்த கீர்த்தி பிரியதர்ஷினி.
சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியில், 'டாக் ஹவுஸ்' என்ற பெயரில் கென்னல் நடத்தி வரும் இவர் நம்மிடம் பகிர்ந்தவை: ''நான் பொறியியல் பட்டதாரி. ஐடி துறையில் கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளாக வேலைப்பார்த்தேன். நல்ல சம்பளம் கிடைத்தும், மன நிம்மதி இல்லை. சின்ன வயதில் இருந்தே, நாய், பூனை வளர்த்ததால், ஓய்வு நேரங்களில், தெருநாய்களை தத்தெடுப்பது, அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பதில் கவனம் செலுத்தினேன்.
இதைத்தாண்டி பராமரிப்பு தேவைப்படும் செல்லப்பிராணிகளை தங்க வைக்க தனி வீடு எடுத்தேன். ஒரு கட்டத்தில், என்னுடன் 28 நாய்கள், பூனை, முயல், பன்றி, சேவல் என செல்லப்பிராணிகள் இருந்ததால், வீட்டில் தனியாக பராமரிக்க முடியவில்லை. இவைகளை தங்க வைக்க, தனி இடம் பார்க்க துவங்கிய போது தான், கென்னல் தொடங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
டாக் ஹவுஸ் பற்றி...
சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியில், 15 ஆயிரம் சதுர அடியில், 55 நாய்கள் தனித்தனியாக தங்குவதற்கு ரூம், வாக்கிங் செல்வதற்கான ஏரியா, நீச்சல் குளம், ஏசி அறை உள்ளது. வெளியூர் செல்வோர் இங்கே நாய்களை தங்க வைக்கலாம். மாதக்கணக்கில் கூட சிலர் தங்க வைக்கின்றனர். சின்ன வயதில் இருந்தே, நாய்களை பராமரித்த அனுபவம் இருப்பதால், எந்த வகை நாய்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டுமென தெரியும்.
வாகன வசதி இருப்பதால், சென்னையை சுற்றி எங்கிருந்து அழைத்தாலும், வீட்டிற்கு நேரில் சென்று அழைத்து வரப்படும். நீண்டநாட்கள் இங்கே தங்கும் நாய்களுக்கு, கால்நடை மருத்துவர்கள் வந்து, பரிசோதித்து அதன் ஹெல்த் ரிப்போர்ட் தருவர். இதை, உரிமையாளருக்கு அப்டேட் செய்து விடுவோம்.கென்னல் சுற்றிலும் தோட்டம் அமைத்திருப்பதால், நாய்களை குறிப்பிட்ட நேர இடைவெளியில், அடிக்கடி வாக்கிங் அழைத்து செல்வோம். ஒரே இடத்தில் நாய்களை கட்டி வைக்க மாட்டோம். இதனால், ஒருமுறை இங்கு கொண்டுவந்து விடுவோர், நிரந்தர கஸ்டமராகிவிடுவர்.
எதிர்கால திட்டம் என்ன?
கென்னலில் கிடைக்கும் வருமானத்தில், என்னை நம்பி இருக்கும் வாயில்லாத ஜீவன்களுக்காக செலவழிக்கிறேன். இதுதவிர, முன்பு போலவே தற்போதும், தெருநாய்களை தத்தெடுப்பது, உணவளிப்பது போன்ற பணிகளும் தொடர்கின்றன. இதைத்தவிர பெரிதாக எந்த எதிர்கால திட்டமும் இல்லை.

