ADDED : அக் 04, 2025 05:46 AM

''ந டப்பன, ஊர்வன, பறப்பன, கொறிப்பன என, எல்லாவித உயிரினங்களும் ஒரே கூரைக்குள் கொண்டுவந்து, அடுத்த தலைமுறைக்கு, இவற்றை அடையாளம் காட்டுவதற்காகவே, இந்த பூங்காவை உருவாக்கினோம்,'' என்கிறார் விலங்கு நல ஆர்வலர் நெல்சன் மண்டேலா.
திருச்சி, கம்பரசன்பேட்டைக்கு அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில், 'என்.என்., பெட்ஸ் பார்க்' உருவாக்கி, பலவித செல்லப்பிராணிகளை பராமரித்து வரும் இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
இந்த உலக இயக்கத்தின் மூலமே, ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை சார்ந்திருப்பது தான். ஏதாவது ஒரு உயிரினம் முற்றிலுமாக அழியும் சூழலில், அதை சார்ந்த மற்ற விலங்குகளும் அழிந்துவிடும். இவைகளின்றி மனிதனால் வாழவே முடியாது. இதை பள்ளிப்பருவத்தில் இருந்தே படித்து வருகிறோம். ஆனால், விலங்குகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் என்ன செய்தோம் என்ற கேள்வியின் பின்னணியில் உருவானது தான், இந்த பெட்ஸ் பார்க்.
தாத்தா, அப்பா என இரு தலைமுறைகளாக, கோழி, ஆடு, மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டியதால், நானும், அண்ணன் வில்லியம் பிராங்கிளின் நிக்கோலஸ் இணைந்து, வித்தியாசமான விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தோம். வெளிநாடுகளை சேர்ந்த இவ்விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்பதால், எங்களின் தேடல் மேலும் விரிவடைந்தது. இவை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்க உருவாக்கியதே இந்த பெட்ஸ் பார்க்.
இங்கே, லவ்பேட்ஸ், ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், கனுார் வகை பறவைகள், காக்கட்டூஸ், காக்டெய்ல், பிஞ்சர்ஸ் என பலவகையான பறவைகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இவற்றிற்கு நீங்கள் இரை கொடுத்து, அவைகளோடு நேரம் செலவிடலாம். குதிரை, ஆடு, பசு, ஒட்டகம், கழுதை ஆகியவற்றிற்கு கீரை வகைகளை சாப்பிட கொடுக்கலாம். முயல், ஆமை, வாத்து, நாய், பூனை மட்டுமல்லாமல், பாம்பு, இக்வானா, எலி, பேன்சி கோழிகள், புறாக்களை கண்டு ரசிக்கலாம். இங்குள்ள குளத்தில் துள்ளி விளையாடும் கொய் மீன்களுக்கு உணவளிக்கலாம். அவை உங்கள் உள்ளங்கையில் உரசி செல்லும் உணர்வு அலாதியானது.
இப்படியாக ஒவ்வொரு செல்லப்பிராணியின் தனித்தன்மை, அதன் பிறப்பிடம், பராமரிப்பு முறை பற்றிய தகவல்கள் அடங்கிய பலகை வைத்துள்ளோம். பள்ளி மாணவர்கள் இங்கே விசிட் அடித்தால் அவர்களுக்கு, செல்லப்பிராணிகள் பற்றிய அரிய தகவல்களை எடுத்து கூறுகிறோம். அவர்கள் இங்குள்ள விலங்குகளுடன் சிறிது நேரம் செலவழிக்கும் போது, அவற்றை பற்றி ஆர்வமாக, வகுப்பறையில் பகிர்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கும். அந்த உந்துதலால் மேலும் வித்தியாசமான செல்லப்பிராணிகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது.
பெரியவர்களுக்கு 100 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் அனுமதி கட்டணம் வசூலிக்கிறோம். பார்க், காலை 10:00 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை செயல்படும். சிறப்பு குழந்தைகளுக்கு பார்க்கில் அனுமதி கட்டணம் இல்லை. விடுமுறையில் ஒருமுறை விசிட் அடித்து, இங்குள்ள செல்லங்களை கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளின் உலகத்தில் உள்ள ஆச்சர்யங்களை அறிமுகப்படுத்துங்கள். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.