ADDED : டிச 13, 2024 08:08 PM

''அக்வாரியம் பிசினசை பொறுத்தவரை, ஆயிரக்கணக்கான மீன் வெரைட்டிகளை இனப்பெருக்கம் செய்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், முன்னிலையில் இருப்பது, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளே. இந்தியாவிலும் மீன் வளர்ப்பு தொழிலின் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருப்பதால், இளைஞர்கள் இத்துறைக்குள், தயங்காமல் காலடி எடுத்து வைக்கலாம்,'' என்கிறார், வர்ணமீன் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் நவீன் வெங்கட்ட பிரசன்னா.
கோவை, பொள்ளாச்சியில், 'சீ ஸ்டார்' அக்வாரியம் நடத்தும் இவர், இத்துறைக்குள் புதிதாக வருவோருக்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேல், இத்துறையில் அனுபவம் கொண்ட இவர், செல்லமே பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:
உலகளவில், அக்குவாரியம் துறை பொறுத்தவரை, மீன், தொட்டி, லைட், பில்டர்ஸ், தொட்டிக்குள் வைக்கப்படும் அலங்கார பொருட்களின் சந்தை மதிப்பு, 90 ஆயிரம் கோடியாக உள்ளது. இதற்கு காரணம் மீன் வளர்ப்பது எளிது என்பதோடு, பலரும் இதை செல்லப்பிராணியாக வளர்க்க முன்வருவது தான். குறைந்த இடத்திலும், ஒரு குட்டி தொட்டியில் வைத்து கூட, மீன் வளர்க்கலாம். வீடுகளில் மட்டுமல்லாமல், அலுவலகம், மருத்துவமனை, வணிக வளாகங்களின் வரவேற்பு அறையில், வாஸ்து, அலங்காரத்திற்காகவும், மீன் நீந்துவதை பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்பதாலும், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வித்தியாசமான மீன் வெரைட்டி வளர்க்க பலரும் விரும்புவதே, இத்துறைக்கான தேவையை அதிகரித்துள்ளது. மீன் தொட்டிக்குள், செடிகளை வைத்து, இயற்கையான சூழலை வீட்டிற்குள் கொண்டு வருவது போன்ற வடிவமைப்பு கொண்ட, பிளான்டட் அக்வாரியம் வைக்க பலரும் விரும்புகின்றனர். மெரைன் அக்வாரியம் செட்-அப் உருவாக்க குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதேபோல, திறந்தவெளி, வீட்டிற்குள் குளம் போன்ற அமைப்பை உருவாக்கி, 'கொய்' இன மீன்களை விடுவது தற்போது பேஷனாக மாறிவிட்டது.
கற்பனைக்கு எட்டாத வண்ணங்களில், மீன்களை பீரிடிங் செய்து விற்பதால், இத்துறைக்கான வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை உலக அக்வாரியம் மார்கெட்டில், தனியிடம் பிடித்துள்ளதால், இளைஞர்கள் இத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தால் சாதிக்கலாம்.
சிலர், அக்வாரியம் கடை திறந்து சில மாதங்களில், நஷ்டமாகிவிட்டதாக கூறுகின்றனர். இதற்கு, மீன் வளர்ப்பு பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பதே காரணம். இத்துறைக்குள் புதிதாக வருவோர், தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில், உரிமம் பெற வேண்டும். மீன்வளத்துறை வழங்கும் சில அடிப்படை பயிற்சிகள் பெறுவதோடு, வெவ்வேறு ரக மீன்கள், அதன் வாழ்விடம், அதை வளர்க்கும் முறை குறித்து, அனுபவங்களை பெற்ற பிறகு, கடை திறக்கலாம். வருமானத்தை தாண்டி, மீன்களுடன் நமக்கான தொடர்பும், உறவும் தான், இத்துறையில் வெற்றி பெறுவதற்கான, தாரக மந்திரம்.

