ADDED : டிச 28, 2024 06:49 AM

''வேகமாக சுழலும் நாட்களுக்கு சின்ன பிரேக் எடுத்து குழந்தைகளுடன், நண்பர்களுடன், இயற்கை சூழலை ரசித்து செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட விரும்புவோர், ஏலகிரி வரலாம்,'' என்கிறார் விக்னேஷ்.
பொறியியல் பட்டதாரியான இவர், செல்லப்பிராணிகள் மீதான பிரியத்தால், ஏலகிரி பேர்ட்ஸ் பார்க் (yelagiri birds park) அமைத்துள்ளார். சுற்றுலா வருவோர், எக்ஸாடிக் வகை செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட விரும்புவோர், இங்கே சென்று வித்தியாசமான அனுபவம் பெறலாம்.
இவர் கூறியதாவது:
சுற்றிலும் மலை, படர்ந்திருக்கும் பசுமை, கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய ஏலகிரி மலையில், நிலாவூர் செல்லும் வழியில் ஏலகிரி பேர்ட்ஸ் பார்க் உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சிறிய, பெரிய வகை பறவைகளுக்கென பிரத்யேக சரணாலயம், பல்வேறு வகை மீன்கள் துள்ளி விளையாடும் அக்வாரியம், பாம்பு, முயல், ஆமை, குட்டை ஆடு, பேன்சி கோழிகள், இக்வானா என, எக்கச்சக்க 'எக்ஸாடிக்' செல்லப்பிராணிகள் உள்ளன.
ஒட்டகத்திற்கும், நெருப்புக்கோழிக்கும் நீங்களே உணவளிக்கலாம். சரணாலயத்திற்குள் நுழைந்தால் உங்களுக்குள் சிறகு முளைத்தாற்போன்ற உணர்வு ஏற்படும். விதவிதமான பறவைகளை கொஞ்சியபடி கண்டு ரசிக்கலாம். சோசியல் மீடியாவில் டிரெண்ட்டாவதற்காகவே வித்தியாசமான 'போஸ்'களுடன், கேமராவை கிளிக் செய்யும், 2கே கிட்ஸ் இங்குள்ள நியான் விங்ஸில் போட்டோ எடுத்து கொள்ளலாம்.
பார்க் அருகே ஏரி இருப்பதால், இதை பார்ப்பதற்கென பிரத்யேக ஏறுதளம் வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் ஏறி நின்று, தண்ணீர் அசைந்தாடும் அழகை ரசிக்கலாம். குழந்தைகளுக்கென ஜிப் லைன், டிராம்போலைன், பங்கீ ஜம்பிங் உள்ளிட்ட வித்தியாசமான விளையாட்டுகள் இருப்பதால், நாள் முழுக்க, குஷியாக விளையாடுவர்.
பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 100 ரூபாயும், நுழைவுக்கட்டணமாக பெறப்படுகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பார்க் திறந்திருப்பதால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், செல்லப்பிராணிகளை கொஞ்சி, உடலுக்கும், மனதுக்கும் தேவையான எனர்ஜியை நிரப்பி கொண்டு வீடு திரும்பலாம்.