ADDED : அக் 10, 2025 11:18 PM

சென்னையில் உள்ள, 'பெட் குரூமிங் அகாடமி'யின் தலைவர் வருண் வினோத் ஷர்மா, செல்லப்பிராணிகளுக்கு குரூமிங் செய்யும் தொழில்நுட்பம், இத்துறையின் வளர்ச்சி குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
பப்பி, பூனையை பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். ஏறத்தாழ 400 பப்பி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு உடலமைப்பு, முடியின் தன்மை கொண்டவை; இதேபோல, 50க்கும் மேற்பட்ட பூனை இனங்கள் உள்ளன.
எந்த ப்ரீடராக இருந்தாலும், அதை எப்படி கையாள வேண்டும், அதன் தனித்துவ குணாதிசயம் என்ன, அதன் உடலமைப்பில் உள்ள நிறை, குறைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அவற்றிற்கு எப்படி முடி வெட்டுவது, அதற்கு எந்த அளவுள்ள கத்திரிக்கோல் பயன்படுத்த வேண்டும், எப்படி நகத்தை சீர்திருத்துவது, பாதம், காது சுத்தப்படுத்தும் முறை என, அடிப்படை கல்வியோடு, பயிற்சி பெறுவது அவசியம்.
குரூமிங் அகாடமி சென்று படித்து, சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே, உங்களை நம்பி செல்லப்பிராணிகளை ஒப்படைப்பர். மேலும், குரூமிங் செய்யும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு எப்படி முதலுதவி கொடுக்க வேண்டுமென, கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலுடன், அகாடமியில் சொல்லித்தருவர்.
இத்துறைக்கு பெரும்பாலும் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், அதன்மீது பிரியம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வர முடியும். செல்லப்பிராணிகளை எப்படி கையாள்வது என்ற அடிப்படை புரிதல் இல்லாதவர்கள், கத்திக்கோலை கையில் எடுத்தால், அதனிடம் கடி தான், வாங்க வேண்டியிருக்கும்.
மேலும், அவை உங்களை நம்ப வேண்டும். அவற்றிற்கு எந்த அசவுகர்யமும் ஏற்படுத்தாத வகையில், அழகுப்படுத்த மார்கெட்டில் நிறைய கருவிகள் உள்ளன. அவற்றை பற்றிய அப்டேட் இருக்க வேண்டும்.
அகாடமியில், பேசிக், அட்வான்ஸ் லெவல் என இருவிதமான படிப்புகள் இருக்கும். வெறுமனே படித்து சான்றிதழ் வாங்கினால் மட்டும் போதாது. தொடர் பயிற்சி இருக்க வேண்டும். இதற்கு பின், முறையான அனுமதியுடன், பிரத்யேகமாக குரூமிங் சென்டர் ஆரம்பித்தால், லாபம் ஈட்டலாம்.
தற்போது, வெளிநாட்டு இன பப்பிகளையே நிறைய பேர் வளர்க்கின்றனர். அவற்றிற்கு மாதம் ஒருமுறையாவது குளிப்பாட்டுவது, முடிவெட்டிவிடுவது, காது சுத்தப்படுத்துவது, நகங்களை வெட்டிவிடுவது என, ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்கான தேவையை புரிந்து கொண்டு, நிறைய இளைஞர்கள், இத்துறைக்குள் வருகின்றனர். இது வரவற்கத்தக்க வளர்ச்சியாக கருதப்படுகிறது. என்றார்.