ADDED : ஜூன் 13, 2025 10:26 PM

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய மிக கொடிய நோய்களின் பட்டியலில், முன்னிலையில் இருப்பது 'ரேபிஸ்' எனும் வெறி நோய். இந்த வைரஸ் உடலுக்குள் சென்றதும் உடனே தடுப்பூசி போடாமல் அலட்சியப்படுத்தினால், இறப்பு ஏற்படுவது உறுதி.
நாய், பூனை, வவ்வால், ரக்கூன், நரி போன்ற விலங்குகள் ரேபிஸ் வைரஸை பரப்பினாலும், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேருக்கு வெறிநாய் கடி தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
மதுரையில் ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன், தாம் ஆசையாக வளர்த்த பூனை கடித்ததால் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அப்படியானால், இந்த வைரஸ் மனித உடலுக்குள் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும், பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை, தடுப்பூசி முறைகள் பற்றி, கோவை கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மருந்தியல் நிபுணர் டாக்டர் சுரேந்தர் கூறியதாவது:
ரேபிஸ் என்பது, 'லைசா வைரஸ்' குடும்பத்தை சேர்ந்தது. இது புல்லட் வடிவில் இருக்கும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கு மனிதர்களை கடித்தாலோ, கீறினாலோ, ஏற்கனவே நமக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்ட விலங்கு, தன் எச்சிலால் நக்கினாலோ உடனே பரவ துவங்கிவிடும். இந்த வைரஸ், மனித உடலுக்குள் ஒருநாளைக்கு, 200 - 400 மைக்ரோ மீட்டர்வேகத்தில் மட்டுமே நகரும். இது, உடலுக்குள் சென்று பெருக்கமடைவதற்குள், அதாவது அறிகுறிகள் தென்படுவதற்குள், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இல்லாவிடில், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
நான்கு நிலைகள்
ரேபிஸ் வைரஸ், மனித உடலுக்குள் நான்கு படி நிலைகளில் பெருக்கமடைகிறது.
முதல்நிலையானது அறிகுறி வெளிப்படும் காலம். எந்தவொரு நோய் கிருமியும் மனித உடலுக்குள் சென்று, பெருக்கமடைந்தால் தான் அறிகுறி வெளிப்படும். இதை 'இன்குபேஷன் பீரியட்' என்பர். ரேபிஸ் வைரஸ், உடலுக்குள் சென்ற தீவிரத்தை பொறுத்து, குறைந்தபட்சம் 1-3 நாட்கள் முதல், சில மாதங்கள் வரை எடுத்து கொள்ளும்.
மற்ற வைரஸ், மனித உடலுக்குள் ரத்தம் வழியாகவே பரவும். ஆனால், ரேபிஸ், நரம்பு வழியாகவே ஊடுருவுகிறது. இது, வெறிநாய் கடித்த இடத்திற்கு அருகிலுள்ள நரம்பின் மையத்திற்கு செல்ல 2-10 நாட்களாகும். இச்சமயத்தில், காய்ச்சல், கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படலாம். இது இரண்டாவது நிலையாக கருதப்படுகிறது.
நரம்பின் மையத்தில் இருந்து மூளைக்கு சென்றடைவதே மூன்றாவது நிலை. இதற்கு, 2-7 நாட்களாகும். இந்த நிலையில் தான், அறிகுறிகள் வெளிப்பட துவங்கும். 'ஹைட்ரோபோபியா' எனும், தண்ணீரை விழுங்க முடியாமல் அவதிப்படுதல், வெறித்தனம், மயக்கத்தில் இருப்பது, முடக்குவாதம் போன்றவை ஏற்படும்.
இந்த மூன்று நிலைகளிலும், வைரஸ் உடலுக்குள் ஊடுருவிய தன்மையை பொறுத்து, குறைபட்சம் 14 நாட்கள் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுக்குள், கோமா, இறப்பு ஏற்படலாம்.
என்னென்ன தடுப்பூசி?
ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கு மனிதர்களை கடித்திருந்தால், காயம் ஏற்பட்ட இடத்தை சோப்பு நீரால் நன்கு சுத்தப்படுத்தி உடனே மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட அன்றைய தினம், 3,7,14 மற்றும் 28வது நாளில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இத்தடுப்பூசி உடலுக்குள் சென்று, இக்குறிப்பிட்ட நோயை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்க, 28 நாட்கள் வரை எடுத்து கொள்ளும். எனவே, தீவிர வெறிநாய் கடியாக இருக்கும் பட்சத்தில், 'இம்யூனோகுளோபின்' என்ற செயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை உடனே உருவாக்கும் மருந்து ஊசி வாயிலாக உட்செலுத்தப்படும். இதனால், ரேபிஸ் வைரஸ் பெருக்கமடையாமல் தடுக்கப்படுகிறது.
வருமுன் காத்தல்
ரேபிஸ் வைரஸ் பரவாமல் தடுக்க, விலங்குகளுக்கு தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். பப்பியாக இருந்தால், அவை பிறந்து 90வது நாளில் முதல் தடுப்பூசி, அடுத்த 21 நாட்களுக்கு பின் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இதற்கு பின், ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை போலவே, தெருநாய், பூனைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.
இந்தியாவில், 2030க்குள் ரேபிஸ் வைரஸ் முற்றிலுமாக ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசோடு இணைந்து, தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்களும், தெருநாய், பூனைகளுக்கு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இது ஒரு தொடர் இயக்கமாக முன்னெடுத்தால், ரேபிஸ் வைரஸை நுாறு சதவீதம் ஒழிக்க முடியும், என்றார்.