ADDED : செப் 29, 2024 09:52 AM

இறக்கை விளிம்பு வரை பரவியிருக்கும் வானவில் வண்ணங்களை, வீடு முழுக்க தெளித்து, கொஞ்சும் மொழியில் கெஞ்சி அழைக்கும் பறவைகளை, பலரும் செல்லப்பிராணியாக வளர்க்க ஆசைப்படுகின்றனர். இதிலும், 'மக்காவ்'கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. புதிதாக மக்காவ் பறவை வாங்குவோர், அதை எப்படி பராமரிக்க வேண்டுமென கூறுகிறார், மதுரை, கே.புதுாரை சேர்ந்த, 'முகமது அமீத் பேர்ட்ஸ் பார்ம்' உரிமையாளர் ஷேக் அப்துல்லா. இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
* வீட்டில் வளர்க்கக்கூடிய கிளி வகைகளுள், மக்காவ் தான் பெரியது. பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்ச், நீலம் என பல்வேறு வண்ணங்களில் இருப்பதால், நிறங்களுக்கேற்ப தனித்தனி பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமே, நீண்ட வால் போன்ற இறக்கை தான். இதை விரித்து பறக்கும் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம்.
* மக்காவ் பறவையை, வீட்டில் வளர்ப்பதற்கு எளிதில் பழக்கப்படுத்த முடியும். ஏற்கனவே பறவை வளர்த்த அனுபவம் இருப்பவர்கள், பிறந்து 40 வது நாளில் இருந்தே, கையில் வைத்து உணவு கொடுக்கலாம். ஆறாவது மாதத்தில், தாமாக உணவை எடுத்து சாப்பிடும் பக்குவத்தை பெறுவதால், புதிதாக பறவை வளர்ப்போர், அச்சமயத்தில் வாங்கலாம்.
* இப்பறவை சீக்கிரம் உரிமையாளருடன் நெருங்கி பழகிவிடும். முறையாக பழக்கினால், சில வார்த்தைகளை பேசுவதோடு, கொஞ்சி, கெஞ்சி கீச்சிட்டு, வீட்டிலுள்ளோரின் கவனத்தை தன் பக்கம் திருப்பும்.
* பப்பாளி, கொய்யா உட்பட அனைத்து பழங்களையும் சாப்பிடும். சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களை வாரத்திற்கு ஒருமுறை தான் கொடுக்க வேண்டும். கத்திரிக்காய் தவிர, அனைத்து காய்களும் சாப்பிடும். முளைக்கட்டிய பயிறு, விதைகள், முந்திரி, பாதாம், அக்ரூட், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை கொரித்து கொண்டே இருக்கும்.
* இதன் கூண்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அடிக்கடி தண்ணீர் வைப்பதோடு, உணவு கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், பூஞ்சை தொற்றால், தொண்டையில் அலர்ஜி ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்படும்.
* மக்காவ் பொறுத்தவரை, பராமரிப்புக்கு பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்பதால், குட்டியாக இருக்கும் போதே வாங்கினால், அதன் ஒவ்வொரு பருவ வளர்ச்சியையும் பார்த்து ரசிக்கலாம்.
* இதையெல்லாம் தாண்டி, பறவைகளிடம் இருந்து, நாம் கற்று கொள்ள ஏராளம் உண்டு. ஒரு பறவையின் இலக்கு எப்போதும் வான் நோக்கியதாகவே இருக்கும். அது கீழே பார்க்கையில், இமயமலையும் கடுகு போலவே கண்ணுக்கு தெரியும். வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை, பறவையின் கோணத்தில் அணுகினாலே, நமக்கும் சிறகு முளைப்பதை உணரலாம்.