வானமே எல்லை; சோகம் இனி இல்லை! வெளிநாட்டு பறவைகளை பராமரிப்பது எப்படி
வானமே எல்லை; சோகம் இனி இல்லை! வெளிநாட்டு பறவைகளை பராமரிப்பது எப்படி
ADDED : பிப் 15, 2025 07:49 AM

'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...' என்ற பழைய திரைப்பட பாடல், இன்றளவும் நம் காதுகளில் ஒலிக்க, நம் மனமும் பட்டாம்பூச்சி போல் பறக்கிறது. வானமே எல்லை என, பறவைகள் பறப்பதை பார்த்தால், நம் மனமும் சிறகடித்து பறந்து, சோகம் இனி இல்லை என்ற உணர்வு ஏற்படுத்துகிறது.
மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 24 ஆண்டுகளாக பறவைகள் விற்பனை செய்து வருகிறார். நம் நாட்டு பறவைகளை வளர்க்க சில கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிநாட்டு பறவைகளை வளர்க்க பலரும் ஆர்வமுடன் வருகின்றனர். இவரிடம் லவ்பேர்ட்ஸ், காக்டெயில், வாத்து, டைமண்ட் டவ், பெர்சியன் கேட், கணுர், ஆப்ரிக்கன் காக்டெயில், பிஞ்சஸ் மற்றும் அதன் வகைகள் இருக்கின்றன.
வெளிநாட்டு பறவைகள் பராமரிப்பு பற்றி விக்னேஷ்வரன் கூறியதாவது:
பறவைகளும் மனிதர்களைப் போலவே கால நிலைக்கு தகுந்தாற்போல் வாழக்கூடியவை. தற்போது குளிர்காலம் என்பதால், கூண்டுக்குள், வெளிச்சம் குறைந்த லைட் போட்டுவிடுவதனால் சூடு இருக்கும். சிறு துணிகளை மடித்து வைத்தால் பறவைக்கு இதமாக இருக்கும். கூண்டுக்குள் மரத்தில் அமராமல் கீழே உட்கார்ந்து, சோர்ந்து இருந்தால் உடல்நலம் சரி இல்லை என்று அர்த்தம்.
மருத்துவரை உடனே அணுகி தகுந்த மாத்திரைகள், டானிக் கொடுக்கலாம். சளி பிடிக்கும் என்பதால் அவ்வப்போது மிதமான சுடுதண்ணீர் கொடுக்கலாம். வீட்டிற்குள் வளர்த்தால் காற்றோட்டம் போதுமானதாக இருக்காது. வீட்டு வாசலில், மாடியில், வராண்டாவில் வளர்த்தால் நல்லது. கண்டிப்பாக காற்றோட்டம் இருக்கும் இடத்தில் வளர்க்க வேண்டும். கூண்டுக்குள் சிறு பொம்மைகள், ஊஞ்சல், ஏணி, பந்து போன்றவை வைத்தால் மகிழ்வுடன் விளையாடும்.
சத்தான உணவுகளை கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் கிருமிகள், நோய் வராமல் தடுக்கலாம். லவ் பேர்ட்ஸ்க்கு தினை, பீட்ரூட், கேரட் சீவியது கொடுக்கலாம். பிஞ்சஸ்க்கு தினை, அவித்த முட்டை சீவி வைக்க வேண்டும்.
காக்டெயில்க்கு தினை, சூரியகாந்தி, முளைகட்டிய பயிர்கள் கொடுக்கலாம். கார்ன் பயிர்கள் விரும்பி சாப்பிடும். காலையில் உணவு கொடுக்க வேண்டும். அவை தங்கள் பசிக்கேற்ப எடுத்துக் கொள்ளும்.
இரவு நேரத்தில் உள்ளே இருக்கும் நீரை, உணவு தட்டுகளை எடுத்து விட வேண்டும். அதிகாலையிலே பறவைகள் எழுந்துவிடும். கணுர் வகை பறவைகள் மிகுந்த ஒலி எழுப்பும்; பிஞ்சஸ் குறைந்த அளவு ஒலி எழுப்பும். அனைத்துமே பார்ப்பதற்கு அழகுற இருக்கும். பாதுகாப்பதும் எளிது. அவற்றை ஆரோக்கியத்துடன் வளர்த்தால், நீண்ட நாட்கள் நம்முடன் வாழும்.
ஒரு கூண்டுக்குள் ஒரு ஜோடி அல்லது இரண்டு வளர்த்தால், வாரத்துக்கு ஒரு முறை கூண்டை சுத்தப்படுத்த வேண்டும். 10க்கும் மேற்பட்டவை வளர்த்தால் தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்சமாக ரூ.350க்கு பிஞ்சஸ் வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை பறவைகள் இருக்கின்றன. பறவைகளின் அளவுக் கேற்றார்போல் கூண்டு அமைத்தால் தான், அவை சுதந்திரமாக பறந்து, தங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்தும்.
இவ்வாறு, அவர் கூறினார்.