ADDED : செப் 21, 2024 12:52 PM

''ஆசையாய் பப்பி வாங்கி, அவை வளர்ந்ததும் பராமரிக்க முடியாமல், சிலர் தெருவில் விட்டு செல்கின்றனர். அவை, உரிமையாளரை தேடி நிர்கதியாய் நிற்பதோடு, புதிய சூழலில் வாழ முடியாமல் தவிக்கின்றன,'' என்கிறார், சென்னை, பெசன்ட் மெமோரியல் மிருக மருத்துவமனை திட்ட தலைவர் மீரஜா வெங்கடேசன்.
பெசன்ட் மெமோரியல் மிருக மருத்துவமனை பற்றி...
'தி தியோசோபிக்கல் சொசைட்டி' யின் கீழ், இம்மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, குறைந்த கட்டணத்தில், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்கள், செல்லப்பிராணிகளின் நலம் விரும்பிகளால் கொண்டுவரப்படும் அடிபட்ட தெருநாய்கள், உடல் ஊனமுற்ற செல்லப்பிராணிகள், இங்கே தங்க வைத்து, இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை குணமானதும், மீண்டும் அதன் வாழ்விடத்தில் கொண்டு போய் விடப்படுகிறது.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் , வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், அடிபட்ட மாடு, குதிரை உள்ளிட்ட மற்ற விலங்குகளை, மருத்துவமனைக்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இங்கு, மற்ற விலங்குகளை காட்டிலும், தெருநாய்களுக்கே அதிகம் சிகிச்சை அளிக்கிறோம். இதற்கு அடுத்தப்படியாக, தெருவில் விடப்படும் பெடிகிரி நாய்களை மீட்பது, சவாலான காரியமாக இருக்கிறது. ஆசையாக பப்பி வாங்கி, பின் அதை வளர்க்க முடியாமல், சிலர் தெருவில் விட்டு செல்வது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
அவை உரிமையாளரை தேடி நிர்கதியாய் நிற்பதோடு, புதிய சூழலுக்கேற்ப தகவமைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றன. தெருநாய்களுடன் சேர்ந்து உணவு தேட முடியாமல், பட்டினியாக கிடந்து இறக்கும் நிலைக்கு கூட செல்கின்றன. இதை மீட்கும் போது, பிற காப்பகங்கள், தனிநபருக்கு தத்து கொடுப்பது, பெரும் சிரமமான காரியமாக இருக்கிறது. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கினால் மட்டுமே, இச்சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது
தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் சார்பில், 1960ல், நாய்களை இனப்பெருக்கம் (பிரீடிங்) செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நாய்களை இனப்பெருக்கம் செய்வோர் (ப்ரீடர்), அரசிடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.
ப்ரீடிங் செய்யும் முன்பு, கால்நடை மருத்துவரிடம் ஹெல்த் ரிப்போர்ட் பெற வேண்டும். ஒரே பிரசவத்தில் பிறந்த ஆண், பெண் நாயை ப்ரீடிங் செய்ய கூடாது. எட்டு வயதுக்கு மேல், ப்ரீடிங்கிற்கு பயன்படுத்த கூடாது என, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதை சிலர் முறையாக பின்பற்றாததால், இளம் வயதிலே மரபு ரீதியான நோய்களால் பப்பி பாதிக்கப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் வலியோடு அவதிப்படுகின்றன. இதை தடுக்க, ப்ரீடர்கள், செல்லப்பிராணி வளர்ப்போருக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்களை, தெருவில் விடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எங்கள் காப்பகத்திலேயே வயதான, உடல் ஊனமுற்ற, நோயால் அவதிப்படும், 180 நாய்கள் உள்ளன. இதேபோல், பல்வேறு காப்பகங்களும், தெருவில் விட முடியாத நிலையில் இருக்கும் செல்லப்பிராணிகளை அதன் வாழ்நாள் முழுக்க பராமரிக்கின்றன. உங்களால் முடிந்தால், அடிபட்ட தெருநாய்களை சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள். செல்லப்பிராணிகளை வளர்க்க முடிவெடுத்தால், எக்காரணம் கொண்டும் அதை தெருவில் விட்டுவிடாதீர்கள். அவையும் உயிருள்ள ஜீவன்களே என்பதை மறந்து விட வேண்டாம்.