ADDED : டிச 28, 2024 06:50 AM

''சிறுத்தை போன்ற தோல் அமைப்பு, சிங்கத்தின் ராஜகம்பீர பார்வை, பெரிய தலை, சிறிய கூர்மையான காதுகள் என, மியாவ் வகைகளில், தனித்துவமாக இருக்கும் பெங்கால் பூனையை, பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்,'' என்கிறார், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த நித்யா ராகுல்.
பூனைப்பிரியரான இவர், பெங்கால் பூனையின் தனித்துவம் பற்றி பகிர்ந்தவை:
பெங்கால் பூனையின் தனித்துவமே, சிறுத்தை போன்ற அதன் தோல் நிறம் தான். உடல் முழுக்க அடர்ந்த பழுப்பு நிறத்தில், ஆங்காங்கே புள்ளிகள் இருப்பதோடு, தலை பெரிதாகவும், கண்கள் பாதாம் பருப்பு வடிவிலும், காது குட்டையாக, கூரியதாகவும், முன்னங்காலை விட பின்னங்கால் சற்று குறைவாகவும் இருப்பதால், நடக்கும் போதே ராஜகம்பீர தோற்றம் இருக்கும்.
இது மிகவும் புத்திசாலியானது. குட்டியாக இருக்கும் போதே, சில விஷயங்களை கற்று கொடுத்துவிட்டால், வாழ்நாள் முழுக்க, அதை கடைபிடிக்கும். குழந்தைகள், பெரியவர்கள் மட்டுமல்லாமல், பிற இன பூனைகள், பறவைகளுடனும் எளிதில் நெருங்கிவிடும். எப்போதும் துறுதுறுவென இருப்பதால், இது விளையாட பொம்மைகள் கேட்டு அடம்பிடிக்கும்.
இது, தண்ணீரில் விளையாட விரும்பினாலும், வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டுவதே நல்லது. இதன் பற்கள், நகங்களை, தினசரி சுத்தப்படுத்த வேண்டும். கண்களை சுற்றிலும், மென்மையான முடிகளே இருப்பதால், அதை வெட்டிவிட வேண்டிய அவசியமிருக்காது.  உடல் முழுக்க மிருதுவான முடிகள் இருப்பதோடு, அதிகம் உதிராது என்பதால், பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை.
இறைச்சி, உலர் உணவுகளை விரும்பி சாப்பிடும். குறைவாக தண்ணீர் எடுத்து கொள்வதால், சிறுநீரக பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. சீதோஷ்ண நிலைக்கேற்ப, தண்ணீர் குடிக்கும் அளவை கவனிப்பது அவசியம். கிட்டத்தட்ட, 12-15 ஆண்டுகள் உயிர்வாழும். உரிமையாளரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, சமத்தாக நடந்து கொள்வதால், பேவரட் மியாவ் பட்டியலில், பெங்கால் பூனைக்கு தனியிடமுண்டு.

