ADDED : டிச 20, 2024 06:37 PM

''அளவுகடந்த அன்பையும், விசுவாசத்தையும் காட்டும் பப்பியை, முறையாக பராமரிக்காவிடில், அதன் ஆயுட்காலம் பாதியாக குறைந்துவிடும்,'' என்கிறார், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த, 'யிப் அண்டு ஸ்னிப்'(Yip 'N Snip) கென்னல் மற்றும் ஸ்பா உரிமையாளர் யனோஜ்.
பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரத்தில் போர்டிங், குரூமிங் மற்றும் ஸ்பா வைத்து நடத்தும் இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
முன்பு, நகர்புறத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வெளிநாட்டு ரக நாய், பூனைகளை செல்லப்பிராணியாக வளர்த்தனர். ஆனால் தற்போது, பப்பி, மியாவ், பேர்ட்ஸ் முதல், எக்ஸாடிக் வெரைட்டி என, ஏதாவது ஒன்றை வளர்க்க பலரும் விரும்புகின்றனர்.
தனிமைக்கு துணையாக இருப்பதோடு, செல்லப்பிராணிகள் அளவு கடந்த அன்பையும், விசுவாசத்தையும் காட்டுகின்றன. இதை முறையாக பராமரிக்காவிடில், பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி, சீக்கிரம் இறக்கும் அபாயம் உள்ளது.
இதில், பப்பியை பொறுத்தவரை, சிட்ஜூ, மின்பின், பூடில் அதிகம் வளர்க்கின்றனர். இதன், கண்கள், பாதம் சுற்றியுள்ள முடிகளை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். அதிக முடிகொண்ட பப்பிகளுக்கு, குரூமிங் செய்யாவிடில், தோல் சார்ந்த பிரச்னை ஏற்பட்டு, பெரிதும் அவதிப்படும்.
வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பியதும், கால் பகுதியை துடைத்துவிட வேண்டும். இல்லாவிடில், பூச்சி, உண்ணி கால்வழியாக ஏறி, உடல் முழுவதும் ஆக்கிரமித்து கொள்ளும். நகங்களை முறையாக வெட்டிவிட தவறினால், நடக்கவே சிரமப்படும். இப்படி சின்ன சின்ன பராமரிப்பு விஷயங்களில், கவனம் செலுத்துவது அவசியம்.
இதேபோல, பப்பியின் வளர்ச்சிக்கேற்ப சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். சிலர் தயிர் சாதம் மட்டும் சாப்பிட கொடுப்பர். சிலர் இறைச்சி மட்டும் சாப்பிட கொடுக்கின்றனர். இதனால், பப்பியின் அடிப்படை வளர்ச்சிக்கான நுண்ணுாட்ட சத்துகள் முழுமையாக கிடைக்காமல் போகலாம். கால்நடை மருத்துவரை அணுகி, பப்பியின் வயதுக்கேற்ற உடல் எடை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நகர்புறங்களை விட, புறநகர், கிராமப்புறங்களில் உள்ள சிலருக்கு, செல்லப்பிராணி வளர்ப்பு, பராமரிக்கும் முறை, குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. ஒரு செல்லப்பிராணியை அனுமதிக்கும் முன்பு, அதற்கேற்ற இடம், சூழலை அமைத்து தருவது உரிமையாளரின் பொறுப்பாகும்.

