ADDED : அக் 25, 2024 11:07 PM

2கே கிட்ஸின் பேவரட் செல்பி ஸ்டார் என்றால், அது மால்தீஸ், பூடில் பப்பியாக தான் இருக்கும். பார்ப்பதற்கு குட்டியாக, உடல் முழுக்க மென்மையான முடிகளுடன், துறுதுறுவென இருக்கும், 'டாய்' வகை பப்பிகளை இனப்பெருக்கம் (ப்ரீடிங்) செய்கிறார், சென்னையை சேர்ந்த, 'பான் சேயோன் கென்னல்' (Bon Ceyone Kennels) உரிமையாளர் பவானி விக்ரம்.
ஒரு பெண்ணாய், ப்ரீடிங் பீல்டில் உங்களின் அனுபவம் எப்படி என்றதும், புன்னகையை பிள்ளையார் சுழியாக்கி, பேச துவங்கினார். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
என் பூர்வீகம் சென்னை. படித்தது இளங்கலை உளவியல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பாசத்தை மட்டுமே, டன் கணக்கில் கொட்டும் பப்பிகளின் மீது, சின்ன வயதில் இருந்தே தனி காதல் உண்டு. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக, ப்ரீடிங் பீல்டில் இருக்கிறேன்.
மிகவும் சிறிய வகை (டாய்) பப்பிகளில், மால்தீஸ், பூடில், சிட்ஜூவை ப்ரீடிங் செய்கிறேன். இதை உள்ளங்கையில் ஏந்தி, எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். வீட்டில் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வை தரும். முறையாக தடுப்பூசி போட்டு, அடிப்படை பயிற்சிகள் வழங்கினால் போதும். இதன் பராமரிப்புக்கு பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை.
மால்தீஸ் பொறுத்தவரை, வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும். அதிகபட்சம் 25 செ.மீ., உயரம், 3 கிலோ வரை எடை கொண்டதாக இருப்பதோடு, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடல் முழுக்க மென்மையான முடிகள் இருந்தாலும், அதிகளவில் உதிராது. தினசரி சீவிவிட்டால் போதும். எட்டு மாதங்களுக்கு பின், இது எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைந்துவிடும். ஒருநாளைக்கு 60 கிராம் வரையிலான கமர்ஷியல் உணவே, இதன் வளர்ச்சிக்கு போதுமானது.
பூடில் பப்பியின் தனித்துவமே, அதன் சுருள் சுருளான முடி தான். இது, டாய், மினியேச்சர், மீடியம், ஸ்டாண்டர்டு என நான்கு அளவுகளில், இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதில், டாய் பூடிலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதிகபட்சம் 30 செ.மீ., உயரம், 5 கிலோ வரை எடை கொண்ட டாய் பூடில் பப்பியால், ஒருநாளைக்கு 100 கிராம் வரையிலான கமர்ஷியல் உணவே சாப்பிட முடியும்.
மால்தீஸ், பூடில் என இரண்டுக்குமே, மூக்கு சற்று நீளமாக இருப்பதால், சுவாச பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அதிகபட்சம் 10---14 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வளரும். வாரத்திற்கு ஒருமுறை, இதன் கண்களை சுற்றியுள்ள முடி, பாதங்களில் உள்ள முடியை வெட்டி விட்டால் போதும்.
இவ்விரு வகை பப்பிகளை, பிறந்து 60 நாட்களுக்கு பிறகு வாங்குவதே சிறந்தது. நன்றாக நடக்கிறதா என பரிசோதிப்பது அவசியம். இதன் முடியின் தன்மையை பொறுத்து, ஆரோக்கியத்தை அளவிடலாம். பெற்றோர் யார் என்பதை பார்த்து, பப்பி வாங்கினால், மரபு ரீதியான நோய்கள் வராமல் தடுக்கலாம். எவ்வளவு வயதானாலும், இதன் அழகும், சுட்டித்தனமும் மாறாது.
''ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில்...
நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில்''
என, இப்பப்பிகளை கொஞ்சியபடியே, ஒவ்வொரு நொடியும், ரசித்து வாழலாம்.