சிறுமியை குதறிய ராட்வீலர் தவிர்க்கும் வழிகள் என்ன?
சிறுமியை குதறிய ராட்வீலர் தவிர்க்கும் வழிகள் என்ன?
ADDED : மே 11, 2024 10:14 AM

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிய ஐந்து வயது சிறுமியை இரு ராட்வீலர் நாய்கள், கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராட்வீலர் வளர்ப்பவர்களின் விபரங்கள் திரட்டுதல், உரிமம் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நாய் கடி சம்பவங்கள் குறைக்க என்னதான் தீர்வு என, வல்லுநர்களிடம் கேட்டோம்.அவர்கள் பகிர்ந்தவை: எ.தனுராய், தலைவர், கோவை கென்னல் கிளப்: கென்னல் கிளப் ஆப் இண்டியா சான்றிதழ் பெற்ற நாய்கள், மைக்ரோ சிப் இணைக்கப்பட்டு விற்கப்படுவதால், அதன் உரிமையாளரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் உரிமம் வழங்கும் போது, மைக்ரோ சிப் இணைத்து உரிமம் வழங்க வேண்டும். முறையாக தடுப்பூசி போடுவதோடு, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, 'லீஸ்', 'மவுத் கேப்' அணிவிக்காமல் இருந்தால், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கலாம். நாய் கடிக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கான மருத்துவ செலவினங்களை, அதன் உரிமையாளரே ஏற்க வேண்டும். பாதிப்பின் தன்மையை பொறுத்து, நாய் உரிமையாளர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
எஸ்.வெங்கடேஸ்வரன், மருத்துவர்:பொதுவாக நாய்கள் ஆக்ரோஷமானவையே. எல்லா வகை நாய்களும் கடிக்கும். இதை வளர்க்கும் முறையில் தான், குணாதிசயத்தை மாற்ற முடியும். குறிப்பாக, பப்பிகளுக்கு, முதல் இரண்டு வாரங்களில், உணர் உறுப்புகள் செயல்படாது.
மூன்று, நான்காவது வாரங்களில் தான் கண்கள் பார்க்கும் திறனையும், காதுகள் கேட்கும் திறனையும் பெறும். இச்சமயத்தில், பப்பியை எப்படி பழக்கப்படுத்துகிறோமோ அதை பொறுத்து, அதன் குணத்தை மாற்றலாம். மேலும், ப்ரீடர்கள் பெரிய வகை நாய்கள் விற்கும் முன்பு, புதிய ஓனருக்கு வளர்ப்பு முறை பற்றிய கவுன்சிலிங் வழங்குவது அவசியம். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு, 'பீக் ஹவர்ஸ்'களில் நாய்களை அழைத்து செல்லக்கூடாது.
வி.ராகேஷ், செயலாளர், தமிழ்நாடு ராட்வீலர் அசோசியேஷன்: சென்னை சம்பவத்தை பொறுத்தவரை, அக்குறிப்பிட்ட நாய், ஏற்கனவே மூன்று முறை பிறரை கடித்துள்ள சூழலில், மாநகராட்சி நிர்வாகமோ, காவல்துறையோ நடவடிக்கை எடுத்திருந்தால், அசம்பாவிதம் தொடர்வதை தடுத்திருக்க முடியும். இதை காரணம் காட்டி, ராட்வீலர் 'ப்ரீட்' தடை செய்தால், அடுத்தடுத்த வகை நாய்களும் இப்பட்டியலில் இணையலாம். கடிக்கும் நாய் வகையை ஒழிப்பது இதற்கு தீர்வல்ல.
அதை வளர்க்கும் உரிமையாளருக்கு, விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். குறிப்பாக, செல்லப்பிராணிகள் வாங்குவோர், அதற்கு முறையாக தடுப்பூசி போடுவது, பயிற்சி அளித்தல், பொது இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வாக்கிங் அழைத்து செல்வது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.