ADDED : ஆக 09, 2025 01:33 AM

''ப றவைகளுடன் பழகிவிட்டால், அதன் ஒவ்வொரு அசைவிலும் சத்தத்திலும், நம்மிடம் ஏதோவொன்று தெரிவிப்பதை உணர முடியும். செல்லப்பிராணியாக பறவை வளர்க்க ஆசைப்படுபவர்கள், அதற்கு முறையாக பயிற்சி அளிக்காவிடில், எத்தனை ஆண்டுகள் உங்களுடன் இருந்தாலும், பிணைப்பை ஏற்படுத்தி கொள்ள முடியாது,'' என்கிறார், பறவை ஆர்வலர் சுரேந்தர்.
சென்னை, குரோம்பேட்டையில், 'ருத்வி பெட்ஸ்' என்ற பெயரில், வெளிநாட்டு ரக பறவைகளை விற்பதோடு, பயிற்சி அளிக்கும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணியாக எந்த விலங்கு உங்கள் வீட்டிற்குள் வருவதாக இருந்தாலும் அதன் குணாதிசயம், பிறப்பிடம், வாழும் முறை ஆகியவற்றை தெரிந்து கொண்டு, அவை உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றதா என்பதை ஆய்வு செய்த பிறகே வாங்க வேண்டும். இதிலும் பறவைகள் சற்று வித்தியாசமான குணாதிசயம் கொண்டிருப்பவை. உங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடக்கூடியவை.
புதிதாக பறவை வளர்க்க விரும்புவோர் சிறிய, நடுத்தர அளவு கொண்ட பறவைகளை வாங்குவதே சிறந்தது. இதிலும், சன்கனுார், லோரி, மாங்க், லவ் பேர்ட்ஸ் ஆகியவை எளிதில் உங்களுடன் இணக்கமாகிவிடும். தாமாக உணவு சாப்பிடும் பருவத்தில் வாங்குவதே சிறந்தது. இதற்கு முன்பு அவை முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்.
மூன்று வகை பயிற்சி பறவை பிறந்து 28 நாட்கள் வரை, தன் தாயின் அரவணைப்பில் இருக்கும். இதன் பிறகே, கையில் எடுத்து உணவளிக்க துவங்குவோம். இதற்கென பிரத்யேக உணவுகள், கடைகளில் கிடைக்கின்றன.
இதை, தினசரி குறிப்பிட்ட இடைவெளியில் கொடுத்து பழக்குவோம். ஓரிரு நாட்களில், உணவு சாப்பிடும் நேரம் வந்துவிட்டால், அவை கூண்டில் இருந்து நம்மை தேட ஆரம்பிக்கும். இச்சமயத்தில், சிறிதளவு உணவு கொடுத்து கையில் ஏறி வர பழக்க வேண்டும். இதுவே முதல்கட்ட பயிற்சியாகும்.
இப்படி ஏறி பழகிய பின்பு, அதற்கு ஒரு செல்லப்பெயரோ அல்லது பிரத்யேக சத்தமிட்டோ அழைத்தால், உங்களை தேடி வர வேண்டும். நீங்கள் இருக்குமிடத்திற்கு உணவு தேடி வரவழைப்பது இரண்டாம் கட்ட பயிற்சி.
இறுதியாக, அவை வீட்டிற்குள் எந்த இடையூறும் இல்லாமல் பறக்க பழக்க வேண்டும். அப்படி பறந்து தாமாகவே கூண்டிற்குள் சென்றுவிட்டால் வெளியிடங்களில் பறக்க தயார்ப்படுத்தலாம். இப்பயிற்சிகள் வழங்கிய பிறகு, பறவையை விற்கும் போது, அது புதிய உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும்.
பறவைகளை எப்போதும் கூண்டில் அடைத்து வைத்திருக்க கூடாது. சிறிது நேரம் அவைகளுடன் விளையாட வேண்டும். லோரி, மாங்க் வகை பறவைகள், இயல்பிலே சுறுசுறுப்பாக விளையாடி கொண்டிருப்பதால், இவைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவது அவசியம்.
தினசரி பறவைகளுடன் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும். அவற்றை தோளில் வைத்து வீட்டிற்குள் நடக்கலாம். வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதாக இருந்தால், 'ஹாரன்ஸ்' என்ற பறவைக்கான பெல்ட் அணிவித்து அழைத்து செல்லும் போது, திடீரென அது புதிய சூழலில் பறக்க முயன்றாலும் அதன் கயிறை பிடித்து, உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும், தற்போது பறவைகளுக்கான பிரத்யேக 'டயப்பர்' கடைகளில் கிடைக்கிறது. இதை அணிவித்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
நாய், பூனை போலவே, பறவைகளும் அதன் உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். அதனுடன் பழகிவிட்டால், அதன் ஒவ்வொரு அசைவிலும், சத்தத்திலும் ஏதோவொன்றை நம்மிடம் சொல்வதை உணரலாம். இந்த பிணைப்புக்கு பின், பறவையின் சத்தம், உங்களுக்கு சங்கீதமாகிவிடும், என்றார்.
தற்போது பறவைகளுக்கான பிரத்யேக 'டயப்பர்' கடைகளில் கிடைக்கிறது. இதை அணிவித்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
புதிதாக பறவை வளர்க்க விரும்புவோரிடம் சன்கனுார், லோரி, மாங்க், லவ் பேர்ட்ஸ் எளிதில் இணக்கமாகிவிடும்.