ADDED : பிப் 17, 2024 08:37 AM

'சொன்னா நம்ப மாட்டீங்க. பைரவ் பாத்ரூம்ல தான் 'ஒன் அண்டு டூ' போவான். அவுட்டிங் போய்ட்டு வீட்டுக்கு வரதுக்கு லேட் ஆனாலும், அடக்கி வச்சிட்டு, கதவை திறந்ததும் குடுகுடுன்னு ஓடி போய், வேகமா காலால பாத்ரூம் கதவை தள்ளிவிட்டுட்டு உள்ளே போவான். புத்திசாலி பெட் பைரவ்னு'' மூச்சுவிடாம பேசும் கவிநிலவு, கோவை, ரத்தினபுரிபகுதியை சேர்ந்தவர். தன் பைரவ்வோட சேட்டைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
''வெள்ளை தோல்ல, கருப்பா அங்கங்க புள்ளி இருக்கற யுனிக் லுக் தான், டால்மேஷன் பிரீட்டோட ஸ்டைல். ஒரு மாத குட்டியா வாங்கி பைரவ்னு பேரு வச்சோம். இப்போ பைரவ்வுக்கு மூணு வயசாகுது. இதுக்கு தனி கூண்டு வச்சிருக்கோம். ஆனா அதுக்கு அந்த இடம் பிடிக்காது. கூண்டுங்கற வார்த்தைய சொன்னாவே ஓடி போய் ஒளிஞ்சிக்கும்.
எல்லா வார்த்தையும் பைரவ்க்கு புரியும். வாட்டர் பாட்டில் எடுத்துட்டு மாடியில இருக்க என்னோட ரூம்க்கு போவேன். நான் பாட்டில்ல தண்ணி புடிச்சாவே, 'மேல போலாம் வா'ங்கற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு படிக்கட்டுல நிக்கும். என்கிட்ட குறும்பு பண்ற பைரவ், வயசானவங்க கிட்ட ரொம்ப சாதுவா இருக்கும். அதோட ஹாபி வேடிக்கை பாக்கறது தான். வயிறு சரியில்லன்னா, வீட்டு தோட்டத்துல இருக்கும் செடிய, அதுவே சாப்பிட்டு சுய வைத்யம் பார்த்துக்கும். இதெல்லாம் தானாவே செய்யறதால தான், பைரவ்வ புத்திசாலின்னு சொன்னேன்,'' என்றார்.