/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
வலை விரித்து சுட்டுப்பிடிக்க ஆளை தேடிய போலீஸ்; வாலை சுருட்டி பெட்டிப்பாம்பாய் பதுங்கிய 'வரிச்சியூர்'
/
வலை விரித்து சுட்டுப்பிடிக்க ஆளை தேடிய போலீஸ்; வாலை சுருட்டி பெட்டிப்பாம்பாய் பதுங்கிய 'வரிச்சியூர்'
வலை விரித்து சுட்டுப்பிடிக்க ஆளை தேடிய போலீஸ்; வாலை சுருட்டி பெட்டிப்பாம்பாய் பதுங்கிய 'வரிச்சியூர்'
வலை விரித்து சுட்டுப்பிடிக்க ஆளை தேடிய போலீஸ்; வாலை சுருட்டி பெட்டிப்பாம்பாய் பதுங்கிய 'வரிச்சியூர்'
ADDED : ஏப் 14, 2025 11:14 PM

பணி நிமித்தமாக பேரூர் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் திரும்பி வரும் வழியில், செல்வபுரம் பகுதியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினர்.
அப்பகுதியில் உள்ள பேக்கரிக்குச் சென்ற சித்ரா, காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்தாள்.
''அக்கா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி... இந்த ஏரியாவுல போலீஸ் சோதனை நடந்துச்சாமே...'' என, ஆரம்பித்தாள் மித்ரா.
''ஆமா, மித்து! மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி 'வரிச்சியூர்' செல்வம் நம்மூர்ல பதுங்கியிருக்கிறதா சனிக்கிழமை நைட் இன்பர்மேஷன் வந்துருக்கு. அவரை பிடிக்கறதுக்கு தனிப்படை அமைச்சிருக்காங்க. ரவடிங்கிறதுனால, துப்பாக்கி, அரிவாள்னு ஆயுதங்கள் வச்சிருக்கலாம்ங்கிறதுனால, காலில் சுட்டுப்பிடிக்க, போலீஸ்காரங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருக்கு,''
''ஞாயித்துக்கிழமை செல்வபுரம் ஏரியாவுல சல்லடை போட்டு தேடுனாங்க; எந்த தகவலும் கெடைக்கலை. இந்த விஷயம், 'வரிச்சியூர்' செல்வம் காதுக்கு போனதும் பதறிப் போயிட்டாரு. ஒடனே, மதுரையில நிருபர்களை அழைச்சு, நேருக்கு நேரா பேட்டி கொடுத்துட்டாரு.
அதுக்கப்புறம்தான், இன்பர்மேசன் தப்புன்னு போலீஸ்காரங்களுக்கு புரிஞ்சிருக்கு. அப்புறம்... வழக்கமான வாராந்திர சோதனைய, இந்த தடவை செல்வபுரம் ஏரியாவுல செஞ்சோம்னு சொல்லி போலீஸ் தரப்புல சமாளிச்சிருக்காங்க...''
''இருந்தாலும், நம்மூர்ல 'சம்பவம்' பண்றதுக்கு யாருக்காவது, 'ஸ்கெட்ச்' போட்டிருந்தாங்களா. போலீஸ்சுக்கு இன்பர்மேஷன் போனதும்... 'எஸ்கேப்' ஆகிட்டாங்களான்னு இன்னொரு ரூட்டுல 'என்கொயரி' பண்ணிட்டு இருக்காங்க...''
தனிப்படை கலைப்பு
''அதெல்லாம்... சரி... தனிப்படை போலீஸ்காரங்க மேல ஏகத்துக்கும் கம்ப்ளைன்ட் வந்ததுனால, தனிப்படையையே துணை கமிஷனர் கலைச்சிட்டாராமே...''
''அந்தக் கூத்தை ஏன் கேக்குறே... வடக்கு துணை கமிஷனர் அமைச்சிருந்த தனிப்படையில இருந்த போலீஸ்காரங்க, 'டாஸ்மாக்' பார், எப்.எல்., 2 பார் உள்ளிட்ட இடங்கள்ல மாமூல் வாங்குறதா கம்ப்ளைன்ட் வந்துச்சு.
விஷயம் கேள்விப்பட்டதும், அவுங்களை கூப்பிட்டு 'வார்னிங்' பண்ணியிருக்காரு; இருந்தாலும் கம்ப்ளைன்ட் குறையலை; டென்ஷனான துணை கமிஷனர், தனிப்படையே வேண்டாம்னு சொல்லி கலைச்சிட்டு, அந்தந்த ஸ்டேஷனுக்கே போலீஸ்காரங்களை திருப்பி அனுப்பிட்டாராம்...''
ஆளுங்கட்சின்னா பயம்
டேபிளுக்கு வந்த காளான் பப்ஸ் சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்களை பார்த்து போலீஸ்காரங்க ரொம்பவே பயப்படுறாங்களாமே...'' என, இழுத்தாள்.
''ஆமாப்பா.. உண்மைதான்! பெரியநாயக்கன் பாளையம் ஏரியாவுல ஆளுங்கட்சி 'அட்ராசிட்டி' எல்லை மீறி போகுதுன்னு, பப்ளிக் புலம்பிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சநாளைக்கு முன்னாடி, உடன்பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் தகராறு நடந்துச்சு. ரெண்டு தரப்பும் கடுமையா மோதிக்கிட்டாங்க; காயம் கூட ஏற்பட்டுச்சு,''
''சம்பவத்தை ஒரு போலீஸ்காரர், மொபைல் போனில் வீடியோ எடுத்தாரு. ஆளுங்கட்சியை சேர்ந்தவரு, போலீஸ்காரரின் மொபைல் போனை பிடுங்கிட்டாரு. கவர்மென்ட் ஊழியரை பணி செய்ய விடாம தடுத்ததா, அவர் மேல வழக்கு பதியலாம்.
போலீஸ் உயரதிகாரிகளுக்கு இன்பர்மேஷன் கொடுத்தும், ஆளுங்கட்சி நிர்வாகி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆளுங்கட்சியை சேர்ந்தவங்கன்னா... என்ன வேணும்னாலும் செய்யலாமான்னு, போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க...'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.
வடவள்ளிக்காரர் தவம்
''வடவள்ளிக்காரர் ஆளுங்கட்சி பக்கம் தாவப்போறதா சொல்றாங்களே...''
''அதுவா... மூனு மாசமா பேச்சு நடந்துக்கிட்டு இருக்குதாம். பின்னணியில ஜாதி முட்டுக்கட்டையா இருந்துச்சுன்னு, ஆரம்பத்துல சொன்னாங்க. இப்போ, வேற மாதிரி சொல்றாங்க. தலைமைக்கு தகவல் சொன்னப்போ... 'ரெட் சிக்னல்' விழுந்துருச்சுன்னு பேசிக்கிறாங்க,''
''விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் 'ரெய்டு' பண்ணி, கேஸ் பைல் பண்ணியிருக்காங்க. கேஸ்க்கு பயந்து ஓடி வர்றதா கட்சியில நினைப்பாங்க. அசெம்ப்ளி எலக்சன்ல சீட் கொடுத்தா, உடன்பிறப்புகளே உள்ளடி வேலை செஞ்சிருவாங்க. இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லியிருக்காங்களாம். அதனால, இணைப்பு விழாவுக்கு வாய்ப்பில்லைன்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''
தாமரைக்கட்சி சந்தோஷம்
''எதிர்பார்த்த மாதிரி அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைஞ்சதுனால, தாமரைக்கட்சிக்காரங்க சந்தோஷத்துல இருக்காங்களாமே...''
''ஆமாக்கா... நம்ம மாவட்டத்துல இலைக்கட்சி ரொம்ப ஸ்ட்ராங்கா செயல்படுது; தாமரைக்கட்சி சேரும்போது, ஈஸியா ஜெயிக்கலாம்னு கணக்கு போடுறாங்க. எம்.பி., எலக்சன்ல அண்ணாமலை வாங்குன ஓட்டுகளை கணக்குப் போட்டு, மூனு தொகுதி வாங்குறதுக்கு பிளான் போடுறாங்களாம்...''
''சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்கற தொகுதிகளை தவிர்த்துட்டு, ரூரல்ல இருக்கற தொகுதிகளை குறி வைக்கிறாங்களாம். அதனால, மேட்டுப்பாளையத்தை எப்படியாச்சும் வாங்கிடணும்னு, தாமரைக்கட்சிக்காரங்க இப்பவே பேச ஆரம்பிச்சிட்டாங்க,''
''ஏன்னா... லோக்சபா எலக்சன்ல, மேட்டுப் பாளையம் சிட்டி ஏரியாவுல தாமரைக்கட்சி கணிசமான ஓட்டு வாங்கியிருக்கு; கிராமப்புறங்கள்ல இலைக்கட்சி அதிகமான ஓட்டு வாங்கியிருகக்கு. ரெண்டு கட்சிகளும் சேர்றதுனால, ஈஸியா ஜெயிக்கலாம். அதனால, தொகுதியை கேட்டு வாங்கணும்னு தாமரைக்கட்சிக்காரங்க சொல்றாங்களாம்...''
தாமரையிலும் கோஷ்டி
''அதெல்லாம்... சரி... தாமரைக்கட்சியிலும் கோஷ்டி பூசல் இருக்குதாமே...'' என்ற சித்ரா, பேக்கரியில் பில் கொடுத்து விட்டு, வெளியே வந்து, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள். பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''அதுவா... அன்னுார் யூனியன்ல தாமரைக்கட்சிக்கு புதுசா யூனியன் சேர்மன், நிர்வாகிகள் நியமிச்சாங்க. அதனால, ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு செயல்படுறாங்க. ஒரு கோஷ்டி நடத்துற பங்ஷனுக்கு இன்னொரு கோஷ்டி வர்றதில்லை. சமூக வலைதளத்திலும், ஒருத்தருக்கு ஒருத்தர் கம்ப்ளைன்ட் பண்ணி, நாறிக்கிட்டு இருக்காங்க...''
''ஒரு ஸ்டெப் அதிகமாகி, அன்னுார் ஸ்டேஷனுக்கு போயி, ரெண்டு தரப்புமே எதிர் தரப்பு மேல கம்ப்ளைன்ட் கொடுக்கற அளவுக்கு, நிலைமை மோசமா இருக்கு. எலக்சனுக்கு ஒரு வருஷமே இருக்கு; அன்னுார் ஏரியாவுல தாமரைக்கட்சி நிலைமை படுமோசமா இருக்குன்னு, தொண்டர்கள் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றாள்.
அரவணைப்பு அவசியம்
''ரத்தத்தின் ரத்தங்களும், 'அப்செட்'டுல இருக்கறதா சொல்றாங்களே...''
''இலைக்கட்சியும், தாமரைக்கட்சியும் இணையறதுனால, நம்ம ஏரியாவுல ஜெயிக்கறதுல எந்த பிரச்னையும் வராது. ஓ.பி.எஸ்., - தினகரனை சேர்க்கலைன்னா, மத்த ஏரியாவுல ஓட்டு வாங்கறது கஷ்டம்னு, ரத்தத்தின் ரத்தங்கள் பேசிட்டு வர்றாங்க.
அவுங்க ரெண்டு பேரையும் அரவணைச்சு போகலைன்னா, 2021 ரிசல்ட்டே திரும்பி வரும்; அதனால, இந்த விஷயத்துல கொஞ்சம் இறங்கிப் போகணும்னு, இதய தெய்வம் மாளிகையில ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிட்டு இருந்தாங்க,''
சித்ரா, ''அங்கன்வாடி மையங்களுக்கு ஆள் எடுக்கறதுக்கு அப்ளிகேசன் வாங்க ஆரம்பிச்சிட்டாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.
''ஆமாக்கா... ரொம்ப வருஷம் கழிச்சு அங்கன்வாடிக்கு ஆள் எடுக்குறாங்க. வேலையை கைப்பத்துறதுக்கு, ஆளுங்கட்சி நிர்வாகிகள்கிட்ட முட்டி மோதுறாங்க; இப்போதைக்கு அப்ளிகேசன் வாங்கிட்டு இருக்காங்க. எத்தனை 'ல'கரம்கிறது, இன்னும் முடிவாகலையாம். யார் யாருக்கு எவ்வளவு பங்குன்னு முடிவானதும் சொல்வாங்களாம்; கரன்சி கைமாறியதும், 'போஸ்ட்டிங்' கன்பார்ம் ஆகிடும்னு சொல்றாங்க...''
கெத்துக் காட்டும் ஆபீசர்
டவுன்ஹால் மணிக்கூண்டை பார்த்த சித்ரா, ''கார்ப்பரேஷனை பத்தி... எதுவுமே சொல்லலையே...'' என, வம்புக்கு இழுத்தாள்.
''கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள போனா... மழை மாதிரி இன்பர்மேஷன் கொட்டுமே...'' என்ற மித்ரா, ''கார்ப்பரேஷன் இன்ஜினியர் ஒருத்தரு, புதுசா பிளாக் கலர் சொகுசு கார் வாங்கியிருக்காரு; பார்க்கறதுக்கு அட்டகாசமா இருக்குது. சிட்டிக்குள்ள நண்பர்களோடு அந்த கார்ல வலம் வந்து கெத்துக் காட்டுறாரு. யாராச்சும் கேட்டா... நண்பரின் காருன்னு சொல்றாராம். ஹைஆபீசர்ஸ்க்கு ரொம்பவே நெருக்கமா இருக்கறதுனால, ஜாலியா இருக்கறதா, சக இன்ஜினியர்கள் சொல்றாங்க...''
''கம்ப்ளைன்ட் செய்றவங்களை 'பிளாக் லிஸ்ட்'டுல சேர்க்குறாங்களே...''
''ஆமாக்கா... அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு யாராச்சும் போன் பண்ணி, பஸ் வர்றதில்லை; ஸ்டாப்புல நிக்கறதில்லைன்னு கம்ப்ளைன்ட் செஞ்சா... அந்த மொபைல் நம்பரை 'பிளாக் லிஸ்ட்டுல' சேர்த்திடுறாங்க. நடவடிக்கை எடுக்க வேண்டிய கவர்மென்ட் ஆபீசர்ஸ்களே இப்படி செஞ்சா... யார்கிட்ட போயி முறையிடுவாங்கன்னு, பப்ளிக் சைடுல இருந்து புலம்பல் சத்தம் கேக்குது,''
மித்ரா சொன்னதை கேட்டுக் கொண்டே கலெக்டர் அலுவவலகம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.