/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கல்லா கட்டும் லேடி ஆபீசருக்கு 'சட்டம்' உதவுது; நல்லா தனிப்படை கறுப்பு ஆடுகள் கைநீட்டுதாம் தில்லா!
/
கல்லா கட்டும் லேடி ஆபீசருக்கு 'சட்டம்' உதவுது; நல்லா தனிப்படை கறுப்பு ஆடுகள் கைநீட்டுதாம் தில்லா!
கல்லா கட்டும் லேடி ஆபீசருக்கு 'சட்டம்' உதவுது; நல்லா தனிப்படை கறுப்பு ஆடுகள் கைநீட்டுதாம் தில்லா!
கல்லா கட்டும் லேடி ஆபீசருக்கு 'சட்டம்' உதவுது; நல்லா தனிப்படை கறுப்பு ஆடுகள் கைநீட்டுதாம் தில்லா!
ADDED : ஏப் 07, 2025 10:15 PM

வெயில் கடுமையாக இருந்ததால், சித்ராவும், மித்ராவும் காரில் நகர் வலம் புறப்பட்டனர்.
காரில் அமர்ந்ததும், சீட் பெல்ட் அணிந்து கொண்ட சித்ரா, ''கோவைப்புதுார்ல சி.எம்., பர்த்டே பங்ஷனை, தடபுடலா நடத்துனாங்களாமே...'' என ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா... முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏரியா... மிரட்டுற மாதிரியா இருக்கணும்னு, மாநாடு போல நடத்திக் காட்டியிருக்காங்க. ஒரே நேரத்துல, 11 ஆயிரத்து, 72 பேருக்கு நலத்திட்ட உதவி கொடுத்தாங்க. சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகுறதுக்கு முன்னோட்டமா, வடக்கு மாவட்டம் சார்புல பங்ஷன் நடத்தியிருக்காங்க...''
போதையில் விழுந்த நிர்வாகி
''யாரோ... மயங்கி விழுந்தாங்கன்னு சொன்னாங்களே...''
''அதுவா... பகுதி கழக செயலாளர் ஒருத்தரு, தலைக்கேறிய போதையில, கூட்ட நெரிசலில் நிற்க முடியாம, மேடையிலேயே தள்ளாடி விழுந்துட்டாரு. அவரால எழுந்திரிக்கவே முடியல, உடன்பிறப்புகள் உதவி செஞ்சு, முன்வரிசையில இருந்த இருக்கையில் ஒக்கார வச்சாங்க.
மதுபோதை வாசத்தால, பக்கத்துல ஒக்கார்ந்திருந்த நிர்வாகிங்க பலரும் முகம் சுழிச்சிருக்காங்க. மினிஸ்டர் கலந்துக்கிற பங்ஷன்ல, பகுதி கழகம் இப்படியா இருக்கறதுன்னு வருத்தப்பட்டிருக்காங்க... அப்புறம்... பின்வரிசை இருக்கையில அவரை ஒக்கார வச்சிருக்காங்க...''
''பங்ஷனுக்கு ராப்பகலா உழைச்ச, பகுதி கழக செயலாளர் ஒருத்தரு, உடம்புக்கு முடியாம மினிஸ்டர் முன்னாடி, மேடையிலேயே மயங்கி சரிஞ்சாரு. அதைப்பார்த்து, மினிஸ்டர் செந்தில் பாலாஜி பதறிட்டாரு.
ஆம்புலன்ஸ் வரவழைச்சு, குனியமுத்துார்ல இருக்கற பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல 'அட்மிட்' பண்ணாங்க. பங்ஷன் முடிஞ்ச பிறகு, ஹாஸ்பிட்டலுக்கு மினிஸ்டர் போயி, டாக்டர்கள்கிட்ட விசாரிச்சிட்டு, குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியிருக்காரு...''
வரவேற்பு வேணாம்!
''ஊட்டிக்கு போன சி.எம்.,க்கு மேட்டுப்பாளையத்துல வரவேற்பு வேண்டாம்னு சொல்லிட்டாங்களாமே...''
''ஆமாக்கா... உண்மைதான்! எம்.எல்.ஏ., சீட்டை எப்படியாவது கைப்பத்தியாகணும்னு ஆசைப்படுற மூன்றெழுத்து பிரமுகர்கள் ரெண்டு பேரும் ஆளாளுக்கு வரவேற்பு கொடுக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். ஆனா, மேட்டுப்பாளையத்துல எந்த வரவேற்பும் வேண்டாம்னு மேலிடத்துல இருந்து சொல்லிட்டாங்களாம். அதையும் மீறி சில இடங்கள்ல, பிளக்ஸ் பேனர் வச்சிருக்காங்க. மேலிடத்து உத்தரவுன்னு சொல்லி, அதையும் போலீஸ்காரங்க கழற்ற வச்சிட்டாங்களாம்...''
''ஊட்டி நிகழ்ச்சி முடிஞ்சு கோவைக்கு திரும்பி வர்ற வழியில, மேட்டுப்பாளையத்துல ரோட்டுல நின்னுக்கிட்டு இருந்த பப்ளிக்கை பார்த்து வண்டியை நிறுத்தி, சிலர்கிட்ட மட்டும் புத்தகங்கள் வாங்குனாராம்...''
ஆளுங்கட்சி உள்குத்து
ரேஸ்கோர்ஸில் இருந்து கே.ஜி., தியேட்டர் வழியாக வந்த சித்ரா, கோர்ட் வளாகத்தை பார்த்ததும், ''வக்கீல்கள் சங்க தேர்தல்ல, ஆளுங்கட்சியான தி.மு.க., தோத்துப் போயிடுச்சாமே...'' என, கேட்டாள்.
''அதையேன் கேக்குறீங்க... அ.தி.மு.க.,விலும், தி.மு.க.,விலும் இருக்கற சீனியர் வக்கீல்களுக்கு இடையே போட்டி கடுமையா இருந்துச்சு. 269 ஓட்டு வித்தியாசத்துல அ.தி.மு.க., வக்கீல் ஜெயிச்சிட்டாரு. அதனால, தி.மு.க., வக்கீல் டென்ஷன் ஆகிட்டாராம். அவுங்க கட்சியை சேர்ந்தவங்களே தோற்கடிச்சிட்டதா, கோர்ட்டுக்குள்ள பேசிக்கிறாங்க,''
''என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சப்போ... கொஞ்ச நாளைக்கு முன்னாடி... சி.எம்., பர்த்டே பங்ஷன் நடத்தியிருக்காங்க. அதுல, ஆளுங்கட்சி தரப்புக்குள்ள உரசல் நடந்திருக்கு. வாடா... போடா...ன்னு மரியாதை இல்லாம பேசுற அளவுக்கு, எல்லை மீறி போயிருச்சாம்... அந்த மோதலை மனசுல வச்சுக்கிட்டு, உள்ளடி வேலை பார்த்துட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. இந்த விவகாரம், கட்சி தலைமை வரைக்கும் போயிருக்குதாம்...''
பூத் கமிட்டி ஜரூர்
''அதெல்லாம் சரி... அ.தி.மு.க., தரப்புல எலக்சன் வேலையை ஜரூரா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாமே...''
''அதுவா... ஆட்சியில இல்லாட்டியும், கட்சி கட்டமைப்பை வலுவா வச்சிருக்காங்களாம். பூத் கமிட்டி அமைச்சிட்டு வர்றாங்க. தலைவரை சேர்த்து, 10 பேர் இருக்கணுமாம். ஒரு பூத்துல எத்தனை வீதி வருதோன்னு, அத்தனை வீதியில இருந்தும் பூத் கமிட்டிக்கு ஆள் எடுக்கணும்னு சொல்லியிருக்காங்களாம்.
பூத் கமிட்டியை சேர்ந்தவங்க அந்த ஏரியாக்காரரா, 'பப்ளிக்'கிற்கு தெரிஞ்சவங்களா இருக்கணும்னு 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிட்டாங்களாம்... ரூரல் ஏரியாவுல, 'ஏ', 'பி', 'சி'ன்னு துணை கமிட்டி அமைச்சிருக்காங்களாம்.
கட்சி நிர்வாகிகளை அரவணைச்சு போகணும்; ஒவ்வொருத்தர் உழைப்பையும் பயன்படுத்திக் கிடணும்னு, 'மாஜி' உத்தரவு போட்டிருக்காராம். இதைப்பார்த்து, ஆளுங்கட்சி தரப்பு மிரண்டு போயிருக்குதாம்...''
லேடி ஆபீசர் ஆட்டம்
லங்கா கார்னர் வழியாக டவுன்ஹால் நோக்கிச் சென்ற மித்ரா, மாநகராட்சி அலுவலகத்தை பார்த்ததும், ''கார்ப்பரேஷன் ஆபீசுல இருக்கற லேடி ஆபீசர் ஆட்டம் தாங்க முடியலையாமே...'' என, கேட்டாள்.
''ஆமாக்கா... கார்ப்பரேஷன்ல வேலை பார்க்கற, சக ஆபீசர்களையே மிரட்டி, கரன்சி பார்க்குறாராம். டிரான்ஸ்பர் கொடுக்கறது, போஸ்டிங் போடுறதுல வசூல்னு வேட்டையை நடத்துறாரு. இப்போ, புதுசா ஒரு ரூட் கண்டுபிடிச்சிருக்காராம்...''
''கார்ப்பரேஷன்ல எந்தெந்த ஆபீசர்ஸ் செல்வசெழிப்பா இருக்காங்கன்னு கணக்கெடுத்திருக்காரு. அவுங்கள தனிப்பட்ட விவகாரங்களை பத்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்கச் சொல்லி, தனக்கு வேண்டப்பட்ட சமூக ஆர்வலர் மூலமா துாண்டி விடுறாராம்.
அவரும் கேள்விகள் கேட்குறாரு. அந்த பெட்டிசனை வச்சுக்கிட்டு, சம்பந்தப்பட்ட ஆபீசரை கூப்பிட்டு, பணம் கேட்டு மிரட்டுறாராம். தொகை கைமாறியதும், தகவல் அறியும் உரிமை சட்டம் பெட்டிஷனுக்கு, மழுப்பலா பதில் அனுப்புறாங்களாம்...''
''இதெல்லாம் கமிஷனர் கவனத்துக்கு போகாதா...''
''அவரெங்க கார்ப்பரேஷன் ஆபீசுக்கு வர்றாரு. எந்நேரமும் ஆர்.எஸ்.புரத்துல இருக்கற ஐ.சி.சி.சி., கட்டடத்துலேயே இருக்காரு. அதனால, டவுன்ஹால் ஆபீஸ்ல இருக்கறவங்க ஜாலியா இருக்காங்க. டீலிங் பேசுறவங்க, டீல் பேசுறாங்க. விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட், கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள நுழைஞ்சா... ஆபீசர்ஸ் யாரையாவது 'துாக்கலாம்'ன்னு ஊழியர்கள் சொல்றாங்க...''
சிக்கிய புரோக்கர்
''கார்ப்பரேஷன் வெஸ்ட் ஜோன்ல இருக்கற, சர்வேயர் வில்லங்கத்துல மாட்டிக்கிட்டாராமே...''
''அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க... வெஸ்ட் ஜோன் கார்ப்பரேஷன் ஆபீசுல செயல்படுற சர்வே பிரிவுல, புரோக்கர்களுக்கு சகல அதிகாரமும் குடுத்திருக்காங்களாம். சர்வே தகவலை கம்ப்யூட்டர்ல பதிவேற்றம் செய்றதுக்கு பாஸ்வேர்டு, சர்வேயர் மட்டுமே பயன்படுத்த வேண்டிய லாகின் ஐ.டி., அதற்கான பாஸ்வேர்டு புரோக்கருக்கு சொல்லியிருக்காரு...''
''சர்வேயர் லீவுல இருந்த சமயத்துல தன்னிச்சையா உள்ளீடு செஞ்சு, விண்ணப்பதாரர்கள்கிட்ட ஐந்தாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் வசூலிச்சிருக்காரு. இந்த பிரச்னை விஸ்வரூபமாகி, சம்பந்தப்பட்ட புரோக்கரை பிடிச்சு, போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிருக்காங்க.
வழக்கு பதிவு செஞ்சா, சர்வேயர் மேல நடவடிக்கை எடுப்போம்னு போலீஸ் தரப்புல சொல்லியிருக்காங்க. அதனால, புகாரை வாபஸ் வாங்கிட்டு, புரோக்கருக்கு 'வார்னிங்' கொடுத்து அனுப்பிட்டாங்களாம்...''
''இதுல, புரோக்கருக்கும் போலீஸ்சுக்கும், என்ன நெருக்கம்னு 'என்கொயரி' செய்ய வேண்டியிருக்குது. அரசு அதிகாரி போல் செயல்பட்டு, மோசடி செஞ்சிட்டாருன்னு எப்.ஐ.ஆர்., பதிவு செஞ்சு, புரோக்கரை 'அரெஸ்ட்' பண்ணலாமே... அவருக்காக வக்காலத்து வாங்கி, விடுவிச்சாங்கன்னு கார்ப்பரேஷன் தரப்புல பேசிக்கிறாங்க. இந்த விஷயமும் கமிஷனர் காதுக்கு போகலைன்னு சொல்றாங்க. அந்தளவுக்கு ஜோனல் லெவல்ல நடக்குற விஷயங்கள மூடி மறைச்சிடுறாங்களாம்...''
தனிப்படையில் கறுப்பு ஆடு
''மித்து, இதெல்லாம் பரவாயில்லை. நான் சொல்ற விஷயத்தை கேட்டா, அதிர்ச்சியாகிடுவ,'' என்ற சித்ரா, ''போலீஸ் துணை கமிஷனரின் தனிப்படையில, இருக்கற ஐந்தெழுத்து எஸ்.ஐ., ஒருத்தரு, ஹாஸ்பிடல் விவகாரத்துல கட்டப்பஞ்சாயத்து செஞ்சு கரன்சி பார்த்தவராம். துணை கமிஷனரின் தனிப்படையில இருக்கற, 'பவர்'-ஐ பயன்படுத்திட்டு, சிட்டி லிமிட்டுல இருக்கற 'டாஸ்மாக்' பார், 'ஸ்பா'ன்னு ஒவ்வொரு இடமா போயி, மாமூல் வசூலிக்கிறாராம்...''
''இன்னொரு எஸ்.ஐ., வடக்கு பகுதியே என்னோட கன்ட்ரோல்ல இருக்குன்னு சொல்லி, வசூல் வேட்டை நடத்துறாராம். விஷயத்தை கேள்விப்பட்ட துணை கமிஷனர், ரெண்டு பேரையும் கூப்பிட்டு, செம 'டோஸ்' கொடுத்திருக்காராம்.
அவுங்க மேல, துறை ரீதியாவும் ஆக்சன் எடுக்கலை; தனிப்பிரிவுல இருந்து நீக்கவும் செய்யலை. திட்டிட்டு விட்டுட்டாராம்... இனி, ஒழுக்கமா இருப்பாங்கன்னு நம்புறாராம். பால் குடிச்ச பூனை ஒழுக்கமா இருக்குமான்னு பார்ப்போம்னு, தனிப்பிரிவுல இருக்கற மத்த போலீஸ்காரங்க சொல்றாங்க...'' என்றபடி, ஒப்பணக்கார வீதி வழியாக, காந்தி பார்க் நோக்கி, காரை செலுத்தினாள் சித்ரா.
''அதெல்லாம் சரி... போலீஸ் உயரதிகாரிகளே குற்றவாளிகளோட ரொம்ப நேசமா... நெருக்கமா இருக்காங்களாமே...''
''ஆமாப்பா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கோர்ட் விசாரணைக்கு அழைச்சிட்டு வந்த குற்றவாளிகளை, உதவி கமிஷனர் கார்ல கூட்டிட்டு போனாங்க. அவரோ, இன்ஸ்., கார்ல போனாரு. இப்போ, கொகைன் கடத்தல் விவகாரத்துல சிக்குனவங்கள, கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போனாங்க. ஒவ்வொருத்தரும் அவங்களோட முகத்தை மறைச்சிட்டாங்க. ஒருத்தரு, போலீஸ் உதவி கமிஷனர்கிட்டயே 'கர்ச்சீப்' கேட்டிருக்காரு. அவரும், 'கர்ச்சிப்' கொடுத்திருக்காரு. போதைபொருள் கடத்துற குற்றவாளிகளோட முகத்தை மறைக்கிறதுக்கு, போலீஸ்காரங்க ரொம்பவே மெனக்கிடுறாங்க...''
ரெய்டுக்கு ஒரு டீல்
''போலீஸ்காரங்க உணர்ச்சி வசப்பட்டு, ரூரல் ஏரியாவுல இருக்கற தாபாக்களுக்கு 'ரெய்டு' போனாங்களாமே... சரித்திர பதிவேடு, தலைமறைவு குற்றவாளிகள் வேலை செய்றாங்களான்னு, சோதனை செஞ்சதா சொன்னாங்களாமே...''
''மித்து, அந்த விவகாரத்துல நடந்ததே வேறயாம். எப்.எல்., 2 கிளப் நடத்துற உரிமையாளர்கள் கொடுத்த அழுத்தத்தால போலீஸ்காரங்க 'ரெய்டு'க்கு போனாங்களாம். தாபா ஹோட்டல்கள் சரக்கு விக்கிறதுனால, எப்.எல்., 2 கிளப்புல சேல்ஸ் பாதிக்குதுன்னு சொல்லியிருக்காங்க.
அதனால, ஆளை தேடுறோம்னு சொல்லி, அட்டை பெட்டிகளை கூட விடாம சோதனை செஞ்சிருக்காங்க. அதைக்கேள்விப்பட்டு, நேர்மையான போலீஸ்காரங்க மனசு ஒடிஞ்சு போயி புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, காந்தி பார்க் அருகே காரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.