/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
மன உளைச்சல்ல தவிக்கறாங்க உளவு போலீசார்... கலெக் ஷன் வேட்டை நடத்துறாரு 'கதர்' கவுன்சிலர்!
/
மன உளைச்சல்ல தவிக்கறாங்க உளவு போலீசார்... கலெக் ஷன் வேட்டை நடத்துறாரு 'கதர்' கவுன்சிலர்!
மன உளைச்சல்ல தவிக்கறாங்க உளவு போலீசார்... கலெக் ஷன் வேட்டை நடத்துறாரு 'கதர்' கவுன்சிலர்!
மன உளைச்சல்ல தவிக்கறாங்க உளவு போலீசார்... கலெக் ஷன் வேட்டை நடத்துறாரு 'கதர்' கவுன்சிலர்!
ADDED : டிச 16, 2024 11:29 PM

போத்தனுாரில் நடந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் காரில் புறப்பட்டனர்.
இருக்கையில் அமர்ந்ததும் சீல் பெல்ட் அணிந்து கொண்ட மித்ரா, ''என்னக்கா... நம்மூருக்கு முதல்வரும், துணை முதல்வரும் மறுபடியும் வர்றாங்களாமே...'' என ஆரம்பித்தாள்.
''ஆமாப்பா... நாளைக்கு துணை முதல்வர் உதயநிதி வர்றாரு; நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் வந்துட்டு, ஈரோடு போறாரு. நேரம் கிடைச்சா, முன்னாள் எம்.பி., இரா.மோகன் வீட்டுக்கு வந்துட்டு போகலாம்னு, உடன்பிறப்புகள் சொல்றாங்க.
கிறிஸ்தவர்கள் நடத்துற விழாவுல உதயநிதி கலந்துக்கிறாரு; அந்த விழா முடிஞ்சதும், எம்.பி., அலுவலகத்தை திறந்து வச்சுட்டு, கட்சி நிர்வாகிகள் கூட ஆலோசனை நடத்தப் போறாரு,''
''சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை வருஷம் இருக்குதே; அப்புறம் என்ன...''
''மித்து... அரசியல் சூழல் எப்போ வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் மாறலாம்னு நெனைக்கிறாங்க; 2026 தேர்தல் சூழல் எப்படியிருக்கும்னு யாராலும் கணிக்க முடியலை; கூட்டணியை ஒடைக்கிறதுக்கு, பலவித முயற்சி நடந்துட்டு இருக்கு. நம்மூர்ல 28 வருஷம் கழிச்சு, எம்.பி., பதவியை கைப்பத்துன மாதிரி, 10க்கு, 10 அள்ளுறதுக்கு 'பிளான்' போட்டு வேலைய ஆரம்பிச்சிருக்காங்க...''
வட்டத்துக்குள் எம்.பி.,
''ஆனா... நம்மூர் எம்.பி., யாரையும் கண்டுக்கறதே இல்லையாமே. தனக்கென சின்னதா ஒரு வட்டம் அமைச்சுக்கிட்டு, அதுக்குள்ளேயே செயல்படுறாராமே...''
''நீ சொல்றது உண்மைதாம்பா... அவர் எப்பவுமே அப்படித்தானாம்! நெருக்கமான வட்டத்துக்குள்ள இருக்கறவங்க கிட்ட மட்டும் பேசுறாராம்; அவுங்க அழைக்கிற பங்ஷன்ல மட்டும் கலந்துக்கிறாராம்; மத்தவங்க போன்ல கூப்பிட்டாலும், எடுக்கறதில்லைன்னு கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்புறாங்க...''
நண்பேன்டா... நட்புங்க!
''அதெல்லாம் இருக்கட்டும்... பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியும் நெருக்கமா நின்னு, பேசிட்டு இருந்தாங்களாமே...''
''அதுவா... ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுல, ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்டாங்க. அந்த சமயத்துல, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் இருந்தாங்க. சூலுார் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துறது சம்பந்தமா, பேசிட்டு இருந்தாங்களாம்,''
''அ.தி.மு.க., ஆட்சி காலத்துல, செ.ம., மினிஸ்டரா இருந்த சமயத்துல கரூர் மாவட்டத்தை கூடுதலாக கவனிச்சாராம். அப்போதிருந்தே ரெண்டு பேருக்கும் நட்பு இருக்குதாம்,''.
இளைஞரணியில் ஆதங்கம்
''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சிக்குள்ள இளைஞரணியில புகைச்சல் ஓடிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேனே...''
''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்திருக்கு. உறுப்பினர் சேர்க்கையில இளைஞரணி நிர்வாகி ஒருத்தரு, சரியா செயல்படுறதில்லைன்னு 'கம்ப்ளைன்ட்' சொல்லியிருக்காங்க.
களத்துக்கு வர்றதில்லை; உறுப்பினர்கள் மேல பழி போட்டு தப்பிக்கப் பார்க்குறாரு; இப்படியிருந்தா சரிப்பட்டு வராதுன்னு... இளைஞரணியை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டு பேசியிருக்காங்க. அமைச்சர் செந்தில்பாலாஜிகிட்ட புகார் சொல்ல முடிவு செஞ்சு இருக்காங்களாம்,''
காங்கிரஸில் வசூல்
எதிர் திசையில் காங்கிரஸ் கட்சிக்கொடி கட்டிய கார் கடந்து சென்றது. அதை கவனித்த மித்ரா, ''காங்கிரஸ் கட்சியில, 'போஸ்டிங்' வாங்கித் தர்றதா சொல்லி, 'டீல்' பேசி, கட்டுக்கட்டா கரன்சி வசூல் நடக்குதாமே...'' என கேட்டாள்.
''அந்தக்கூத்தை ஏன் கேக்குறே... ஸ்டேட் லெவல், டிஸ்டிரிக்ட் லெவல்ல காங்கிரஸ் நிர்வாகிகளை வெகுசீக்கிரமாவே மாத்தப் போறதா, தகவல் கசியுது. இந்த நேரத்துல, 'போஸ்டிங்' ஆசை காண்பிச்சு, கதர்ச்சட்டை கவுன்சிலர் ஒருத்தரு, கரன்சி வேட்டையில ஈடுபடுறாராம்..
மாவட்ட தலைவர் பதவிக்கு, 25 'ல'கரம், பாராளுமன்ற பொறுப்பாளர் பதவின்னா, 20 'ல'கரம், மாநில நிர்வாகி பதவின்னா, 10 'ல'கரம், சர்க்கிள் தலைவர் பதவின்னா, 5 'ல'கரம்ன்னு பேரம் பேசி, வசூல்ல பட்டைய கெளப்புறாராம்,''
''இவரை நம்பி, கதர்ச்சட்டைக்காரங்க கரன்சி கட்டுகளை அள்ளிக் கொடுத்திருக்காங்க. இதுவரைக்கும், ரெண்டு கோடி ரூபா வசூலிச்சிருக்காராம். இதே மாதிரி, வீட்டு வசதி வாரியத்துல வீடு வாங்கித் தர்றேன்னு, கோடிக்கணக்குல வசூல் பண்ணியிருக்காராம். இது சம்பந்தமா, போலீஸ்காரங்க 'என்கொயரி' செஞ்சிட்டு இருக்காங்க,'' என்றபடி, போத்தனுார் சந்திப்பு அருகே காரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
கலெக்டருக்கு விருது
''கலெக்டருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை செஞ்சதுக்காக, சிறந்த கலெக்டர் விருது கொடுக்கப் போறாங்க. அவருக்கு பதவி உயர்வு கெடைக்கும்னு சொல்றாங்க...''
''கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரன், 'ஆக்டிவ்'வா செயல்படுறாரு. கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் சொல்றதை, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் காது கொடுத்து கேக்கறதே இல்லைங்கிற புலம்பல் சத்தம், அதிகமா கேட்க ஆரம்பிச்சிருக்கு. ஒன்றரை மாசமாகியும், இன்னும் கவுன்சில் கூட்டம் நடத்தவே இல்லை,'' என்ற சித்ரா, அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.
பின்தொடர்ந்த மித்ரா, ''கனிம வள கொள்ளை நடந்த விவகாரத்திலும், நம்மூர் ஆபீசர்ஸ் வசமா சிக்கிட்டாங்கன்னு சொல்றாங்களே...'' என, கேட்டாள்.
''யெஸ்... நீ சொல்றது கரெக்ட். லோடு லோடா கனிம வளம் கடத்தியிருக்கிறதை விசாரணையில ஐகோர்ட் பதிவு செஞ்சிருக்கு. இப்போ, கனிம வளத்துறையை சேர்ந்த வெளியூர் அதிகாரிகள் ஆய்வு செஞ்சிட்டு இருக்காங்க.
இன்னும் யார், யார் மேல எப்.ஐ.ஆர்., போடுவாங்கன்னு தெரியாததால, கனிம வளம் கொள்ளையடிச்சவங்க பீதியில சுத்திட்டு இருக்காங்க. அதனால, போலீஸ்காரங்களுக்கு தெனமும் போன் பண்ணி, யார் மீதாவது எப்.ஐ.ஆர்., போட்டிருக்கீங்களான்னு விசாரிக்கிறாங்களாம்,''
''இந்த விவகாரத்துல மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை, காவல்துறை அதிகாரிகள் 'சைலன்ட்'டா இருந்ததால, துறை ரீதியான நடவடிக்கை எடுக்குறதுக்கு, வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க...''
ரவா ரோஸ்ட், பில்டர் காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''ரூரல் ஏரியாவுல ஒரு நம்பர் லாட்டரி சேல்ஸ் ஜோரா நடக்குதாமே...'' என, 'ரூட்' மாறினாள்.
''அதையேன் கேக்குறே... எஸ்.பி., கார்த்திகேயன் கவனத்துக்கு எந்த பிரச்னை போனாலும் அதிரடியா நடவடிக்கை எடுக்குறாரு. இருந்தாலும், சில ஏரியாவுல இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் நடக்குதாம். அதுல, ஆனைகட்டி, சின்ன தடாகம் வட்டாரத்துல ஒரு நம்பர் லாட்டரி சேல்ஸ் சக்கைப்போடு போடுதாம்.
ஸ்டேஷன் போலீஸ்காரங்ககிட்ட சொன்னாலும், ஆக்சன் எடுக்கறதில்லையாம். கூலி வேலை பார்த்து சம்பாதிக்கற பணத்தை, லாட்டரியில இழந்துட்டு வர்றாங்களாம்; அவுங்க குடும்பத்தை சேர்ந்தவங்க, வறுமையில இருக்காங்களாம்; போலீஸ்காரங்க மாமூல் வாங்கிட்டு, வேடிக்கை பார்க்குறாங்க,''
போலீசாருக்கு மன உளைச்சல்
''சிட்டி லிமிட்டுல வேலை பார்க்குற, உளவு பிரிவு போலீஸ்காரங்களும் மன உளைச்சல்ல இருக்கறதா சொல்றாங்களே...''
''ஆமாப்பா... நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.,) ரெண்டு பிரிவு இருக்கு.
இதுல, மதம் சார்ந்த விவகாரங்களை மட்டும் எஸ்.ஐ.சி., பிரிவை சேர்ந்தவங்க கண்காணிக்கறது வழக்கம். இப்போ, அப்படி இல்லை.
அந்தந்த ஸ்டேஷன் லிமிட்டுல இருக்கற, எல்லா தகவலையும் சேகரிச்சு தரணும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. இதுல, ஐ.எஸ்., பிரிவுக்கும், எஸ்.ஐ.சி., பிரிவுக்கும் இடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கி விட்டிருக்காங்க. அதனால, மதம் சார்ந்த விஷயங்கள்ல எஸ்.ஐ.சி., பிரிவினரால கவனம் செலுத்த முடியறதில்லை,''
''ஏதாச்சும் தகவல் 'மிஸ்' ஆச்சுன்னா... மேலிடத்துல இருந்து ஏகத்துக்கும் திட்டு விழுது; ஒருமையில வசைபாடுறதுனால, எஸ்.ஐ.சி., பிரிவு போலீஸ்காரங்க மன உளைச்சல்ல இருக்காங்க.
இந்த செக்சன்ல இருந்து, எங்களை விடுவிங்கன்னு லெட்டர் எழுதிக் கொடுத்தா, வேறு விதமா 'டார்ச்சர்' செய்றாங்களாம்...'' என்றபடி, சாப்பிட ஆரம்பித்தாள் சித்ரா.
காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள் மித்ரா.