/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
இடத்தை மீட்கும் பணி சுணக்கம்... புது ஆபீசர் வந்ததால் 'கலக்கம்'
/
இடத்தை மீட்கும் பணி சுணக்கம்... புது ஆபீசர் வந்ததால் 'கலக்கம்'
இடத்தை மீட்கும் பணி சுணக்கம்... புது ஆபீசர் வந்ததால் 'கலக்கம்'
இடத்தை மீட்கும் பணி சுணக்கம்... புது ஆபீசர் வந்ததால் 'கலக்கம்'
ADDED : ஜன 07, 2025 06:54 AM

மார்கழி மாத குளிரால் நடுங்கியபடி, மித்ரா வீட்டுக்கு, ஸ்கூட்டியில் சென்றாள் சித்ரா.
''அக்கா... இதென்ன ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குல்லா போட்டுட்டு வந்திருக்கீங்க...'' என்றவாறே சுடச்சுட டீ கொடுத்தாள். அதனை உடனே வாங்கி, சுவைத்தபடியே, ''திருப்பூர் சிட்டியில், என்னதான் 'ரூல்ஸ்' பிரகாரம் மின்சாரம் இணைப்பு வேண்டி அப்ளி கேஷன் கொடுத்தாலும் கூட, சம்பந்தப்பட்டவர்களை 'கவனித்தால்' மட்டுமே, வேலை சீக்கிரம் நடக்கிறதாம். அனைத்து ஏற்பாடுகளையும், விதிமுறைப்படி செய்து, புதிய இணைப்பு பெற விண்ணப்பித்தாலும், அதிகாரிகள் ஆய்வு முடிந்த பின், பின்னரும், இணைப்பு கொடுக்க காலதாமதம் செய்கின்றனர்,''
''இணைப்பு கேட்டவர், ஏன் இவ்ளோ லேட் பண்றீங்க என கேட்கும் வரை இழுத்தடிக்கின்றனர். அதன்பின்னரே, 'கவனிக்க வேண்டும்' என்கின்றனர். வேறு வழியின்றி, கேட்டதை கொடுத்துவிட்டு, இணைப்பு பெற வேண்டிய நிலை உள்ளது என பாதிக்கப்பட்டோர் புலம்புகின்றனர். இதுபற்றி தெரிந்தும் கூட, உயர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லையாம்...'' என ஆம்பித்தாள் சித்ரா.
''என்னத்த சொல்ல...'' சலித்துக் கொண்ட மித்ரா, ''ஹிந்து சமய அறநிலையத்துறையில், நிலம் மீட்பு பணி கடந்த சில மாதங்களாக கிடப்பில் போட்டு விட்டனராம்,'' என்றாள்.
''அடக்கொடுமையே...''
''உண்மை தாங்க்கா... கடந்த வருஷங்களில், நிலம் மீட்கப்படுவது குறித்து, மக்களுக்கு தகவல் தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது நிலம் மீட்பு பணிகள் மிகமிக மந்தமாக நடக்கிறது. இதுகுறித்து கேட்டால், 'திருப்பணி' வேலையை கவனிக்குமாறு மேலிடத்தில் கூறிவிட்டனர்; அதற்கே நேரம் போதவில்லை' என்று பதில் கூறுகின்றனர். ஏற்கனவே, பல கோவில்களுக்கு, அறங்காவலர் நியமன பணிகளை செய்ய முடியாமல், அறநிலையத்துறை ஓய்ந்துவிட்டது. முதலில், எங்க வேலையை முடிச்சுட்டு, மத்த வேலைகளை செய்யலாம் என, அறங்காவலர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் வற்புறுத்துகின்றனராம்...''
''ஆமா... கோவில் இடத்தை மீட்கப்போனாலே, சில அரசியல்வாதிகள் அதனை தடுக்க என்ன வேலை செய்யணுமோ, அத கச்சிதமா செஞ்சிடறாங்க... அதிகாரிகளும், நமக்கெதுக்கு வம்புன்னு, ஒதுங்கிடறாங்க...'' மித்ரா கூறினாள்.
இடம் எங்கே இருக்குது...
''கோவில் இடம்னு சொல்லவும், பூண்டி மேட்டர் ஒன்னு நினைவுக்கு வந்தது. பூண்டி திருமுருகநாதர் கோவிலுக்கு சொந்தமான, 20 சென்ட் இடம் அவிநாசியில இருக்காம். அதனை மீட்க நடவடிக்கை எடுத்த கோவில் இ.ஓ., அது சம்பந்தமா, சப்-ரிஜிஸ்டருக்கு ஒரு தபால் கொடுத்திருக்காங்க. அதில, எந்த இடம்னு குறிப்பிட்டு சொல்லாம, ஒட்டுமொத்தமா சர்வே எண்ணை சொன்னதால, சப்-ரிஜிஸ்டர் ஆபீசில், குறிப்பிட்ட காலை எண் கொண்ட இடம் முழுவதையும், பிளாக் பண்ணிட்டாங்க,''
''இதனால, நுாத்துக் கணக்கானோர் பாதிச்சிருக்காங்க... இதப்பத்தி பூண்டி கோவில் இ.ஓ., கிட்ட கேட்டதற்கு, 'எங்களுக்கே இடம் எதுன்னு சரியா தெரியல. அதனாலதான் இப்படி மொத்தமா கொடுத்திட்டோம். ரெவின்யூ சைடில் இருந்து, அளந்தும் கொடுக்க மாட்டேங்கிறாங்க...' என்று சொல்லி, பழியை, அந்த டிபார்ட்மென்ட் மேல ஈஸியா போடறாங்கன்னு பாதிக்கப்பட்டவங்க புலம்புகின்றனர்,'' விளக்கினாள் சித்ரா.
''அதானே, கோவில் இடத்தை ஆக்கிரமிச்சுட்டு இருக்றவங்க யாருன்னு பார்த்து, மீட்கறதை விட்டுட்டு, இப்படி தலையை சுத்தி காதை தொடற வேலைய ஏன் தான் செய்றாங்களோ,'' என்ற மித்ரா, '' கலெக்டர் ஆபீஸ் பின்னாடி இருக்கும் ஆவின் டீ கடையில், அரசு ஊழியர்களே டீ போடும் பணியை அவ்வப்போது செய்கின்றனர். வளாகத்தில் உள்ள பாங்க் அதிகாரியின் டிரைவர், 'கல்லா'வில் நின்று பெரும்பாலான நேரத்தில், டீக்கடையை கவனித்துக் கொள்கிறார்,''
''தேசிய தகவலியல் மையத்தில் உள்ள ஊழியர் ஒருவர், நேற்று முழு நேரமும் டீ தயாரிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறார். எப்படித்தான், அரசு அலுவலக பணியையும் செய்து கொண்டே, டீக்கடையையும் கவனிக்க நேரம் கிடைக்குதோனு தெரியலைனு, மத்த ஆபீசர்ஸ் கமென்ட் பண்றாங்க...'' என அடுத்த மேட்டர் பேசினாள்.
பூண்டி ரகசியம் என்ன?
''பூண்டி முனிசிபாலிட்டில, 15 கோடி ரூபாய் செலவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் போறாங்களாம். இதுல, 7 கோடி ரூபாய்க்கு முதற்கட்ட டெண்டர் விட்டு, வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும். 8 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட வேண்டியிருக்காம். பூண்டி நகராட்சியில, முதல் முறையாக ஒரு மெகா திட்டம் நடக்குது. ஆனா, இது சம்மந்தமா எந்த விஷயத்தையும் நிர்வாக தரப்புல இருந்து சொல்வதில்லையாம்,''
''கவுன்சிலருங்களுக்கு கூட, இந்த திட்டம் தொடர்பா எந்தவொரு விஷயமும் தெரியலையாம். 'டெண்டர் எல்லாம் சென்னையிலயே விட்டுட்டாங்க; எங்களுக்கு எதுவும் தெரியாது'ங்கற மாதிரி, நிர்வாக தரப்புல பதில் சொல்றாங்களாம். 'ஒரு மெகா திட்டத்தை, இத்தனை ரகசியமா செய்ய வேண்டிய அவசியம் என்னங்கிற சந்தேகம், கவுன்சிலருங்க மத்தியில மட்டுமில்லாம, பொதுமக்கள் மத்தியிலும் வந்திருச்சு...'' என்றாள் சித்ரா.
ஓடி ஒளியும் ஒற்றர் படை
''இதிலென்ன ரகசியம் வேண்டிக்கிடக்குனு தெரியல...'' என சிரித்த மித்ரா, ''வெள்ளையான கோவில் கொண்ட ஸ்டேஷனில் அனைத்து விதமான சட்டவிரோத செயல்களும் கொடிகட்டி பறக்குதுனு, சில நேர்மையான போலீசே சொல்றாங்க. அதுமட்டுமல்லா, நிருபர் என்ற பெயரில் ஒருவர் உள்ளே நடமாடிட்டு, போலீசாருக்கு தேவையான அனைத்து எடுபிடி வேலைகள், வசூல் செய்து கொடுப்பது என நிறைய கட்டப்பஞ்சாயத்துகளை செய்துட்டு வராரு,''
''இப்படி பல விஷயம் நடந்தாலும், ஒற்றர் படை போலீசார் எதயும் கண்டுக்காம, எது நடந்தாலும், அடக்கியே வாசிக்கறாங்களாம். அந்த நிருபரின் நடமாட்டம் குறித்து, எஸ்.பி.,க்கும் தகவல் கொடுக்காம, குறட்டை விடறாங்களாம்...'' என்றாள் சித்ரா.
''ஏங்க்கா... இப்ப தான் புது எஸ்.பி., வந்திருக்காரு. ஒற்றர் படையினர் ஸ்டேஷனில் இருந்து எந்த தகவலையும், 'மிஸ்' பண்ணாம சொல்லணும். நீங்க தகவல சொன்னாதான் தவறுகளை தடுக்க முடியும். அப்படி மறைச்சீங்கன்னா எப்படி நடவடிக்கை பாயும். எல்லாரும், டியூட்டியில ஒழுங்கா இருக்கணும்னு எச்சரித்துள்ளார். அப்ப வெ.கோவில் மேட்டரையும் பார்த்துப்பாரா,'' என்றாள் மித்ரா.
''ம்... ம்... பார்க்கலாம்,''என்ற சித்ரா, ''டிடி கொடுக்காமலயே 'பார்' நடத்துறாங்க தெரியுமா?'' என்றதும், ''நெறைய பக்கம் அப்டித்தான் இருக்குது. நீங்க சொல்றது எங்கீங்க்கா?'' சந்தேகம் கேட்டாள்.
'டிடி' எதுக்கு எடுக்குறீங்க?
''மித்து, இங்க தான், கணியாம்பூண்டி, தெக்கலுார், கருவலுார்ல தான். அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தர், 'யார் வந்தாலும் நான் பாத்துக்கறேன்னு' தைரியம் கொடுத்திருக்காராம். அவருக்கு மாவட்ட வி.ஐ.பி.,யும், யூத் விங்கோட முக்கிய நபரும் சப்போர்ட்டாம். இப்படி டிடி எடுக்காம, 'பார்' நடத்தறதால, கவர்மென்ட்டுக்கு தான், பல லட்சம் நஷ்டமாகுதுன்னு ஒரு பேச்சு இருக்கு...''
''அக்கா... எஸ்.பி, ஆபீசில வேல பார்க்கற ஸ்டாப் ஒருத்தரு, போலீசுன்னு சொல்லிட்டு, அவிநாசியில இருக்கற பழக்கடை, காய்கறிக்கடை, பானிபூரி கடைன்னு கண்ணுல படற கடைகளுக்கெல்லாம் போய் பொருள் வாங்கிட்டு, பணம் கொடுக்காம போயிடுவாராம். இப்படி ஒரு நாள் லிங்கம்பாளையத்துல இருக்கற ஒரு பழக்கடையில பழங்கள் வாங்கிட்டு பணம் கொடுக்கல. ஆனா, அந்த கடைக்காரர் அவரை பத்தி விசாரிச்சு, எஸ்.பி., ஆபீசுக்கே போயிட்டாராம். கடைக்காரை பார்த்து மிரண்டு போன, அந்த ஸ்டாப், உடனே பணத்தை செட்டில் பண்ணிட்டாராம்...''
''அப்ப புதுசா வந்திருக்கற எஸ்.பி.,க்கு களை எடுக்கற வேல நிறையவே இருக்குனு சொல்ற... அப்டித்தானே!,'' என சிரித்தாள் சித்ரா.