மெர்சிடிஸ் பென்ஸ் 'எஸ் கிளாஸ்' 'பிளக் இன் ஹைபிரிட்', 32 கி.மீ., மைலேஜ்
மெர்சிடிஸ் பென்ஸ் 'எஸ் கிளாஸ்' 'பிளக் இன் ஹைபிரிட்', 32 கி.மீ., மைலேஜ்
UPDATED : ஜூன் 17, 2026 07:25 AM
ADDED : ஜூன் 17, 2026 07:18 AM

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'எஸ் கிளாஸ்' சொகுசு செடான் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 35 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வினியோகம் தீபாவளி முதல் துவங்குகிறது.
5.7 மீ நீளம் உள்ள இந்த கார், இந்தியாவில் முதல் முறையாக 'பிளக் இன் ஹைபிரிட்' தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. அதாவது, 3.0 லிட்டர், இன் லைன், 6 - சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், மின் மோட்டாரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த இன்ஜின் 9 - ஸ்பீடு ஏ.டி., ஆட்டோ கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைலேஜ், 32.2 கி.மீ., கிடைக்கிறது.
![]() |
ரியர் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரில், 22 கி.வாட்.ஹார்., பேட்டரி, மோட்டார் ஆகியவை பின்புறம் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், காரின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டராக குறைந்துள்ளது. இ.வி., மோடில் மட்டும், 115 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும். 60 கி.வாட்., பாஸ்ட் சார்ஜர் வாயிலாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய, 20 நிமிடம் எடுக்கிறது.
ஒளிரும் முன்புற கிரில், 600 மீ வரை அடிக்கும் டிஜிட்டல் எல்.இ.டி., ஹெட்லைட், ஸ்டார் வடிவில் டி.ஆர்.எல்., டெயில் லைட், 20 அங்குல அலாய் சக்கரங்கள், 10 டிகிரி வரை ரியர் வீல் ஸ்டீயரிங், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
உட்புறத்தில், 14.4 மற்றும் 12.3 அங்குல மூன்று முன்புற டிஸ்ப்ளே, 13.1 அங்குல இரு இரண்டாம் வரிசை டிஸ்ப்ளே, குளுகுளு, மசாஜ் சீட்கள், 43.5 டிகிரி ரிக்லைன் பின்புற சீட், அலங்கார விளக்கு, 31 ஸ்பீக்கர் 4டி சவுண்ட் சிஸ்டம், 4 - ஜோன் ஏ.சி., 15 காற்று பைகள், ஏ.ஐ., வாய்ஸ் கமாண்ட், ஒயல்லெஸ் சார்ஜிங், அடாஸ் லெவல் 2 பிளஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நவீன அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

