ரெனோ 'ட்ரைபர்' எம்.பி.வி., 21 கி.மீ., மைலேஜ் தரும் டர்போ இன்ஜின்
ரெனோ 'ட்ரைபர்' எம்.பி.வி., 21 கி.மீ., மைலேஜ் தரும் டர்போ இன்ஜின்
UPDATED : அக் 07, 2026 08:31 AM
ADDED : அக் 06, 2026 08:24 PM

'ரெனோ' நிறுவனம், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'ட்ரைபர் டர்போ' மாடல் எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் மூன்று மாடல்களில் வரும் இந்த காரின் விலை, என்.ஏ., பெட்ரோல் காரை விட, 94,000 ரூபாய் அதிகம்.
5 மற்றும் 7 சீட்டர் மாடலில் வரும் இந்த கார், இந்நிறுவனத்தின் 'ஆர்.ஜி.இ.பி.,' என்ற புதிய கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 'கைகர்' எஸ்.யூ.வி.,யில் வரும் அதே 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினை, 20 என்.எம்., டார்க் அதிகம் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு, இதில் வழங்கப்பட்டுள்ளது. இது, 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது. இந்த கார், 10.8 வினாடியில், 100 கி.மீ., வேகத்தை எட்டும் அளவிற்கு திறன் உடையது. மைலேஜ், 21 கி.மீ., வரை தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது.
காரின் பிக்கப் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சேசிஸ் பலப்படுத்தப்பட்டு, பெரிய ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. வளைவில் கார் கவிழாமல் இருக்க 'ஆன்டி ரோல் பார்' பயன்படுத்தப்பட்டுள்ளது. கார் கட்டுப்பாட்டை மேம்படுத்த, ஸ்டீயரிங் மற்றும் பிரேக் ட்யூன் செய்யப்பட்டுள்ளன. இன்ஜின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, பெரிய 'பி.எல்.டி.சி.,' ரேடியேட்டர் பேன், புதிய இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகிய இயந்திர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, டர்போ இன்ஜின் காரின் எடை, 80 கிலோ உயர்ந்துள்ளது. வடிவமைப்பு மற்றும் இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
