சணி 'எஸ்.கே.டி., - 130எஸ்' நாட்டின் முதல் 'ஹைபிரிட் டிப்பர்'
சணி 'எஸ்.கே.டி., - 130எஸ்' நாட்டின் முதல் 'ஹைபிரிட் டிப்பர்'
ADDED : ஏப் 08, 2025 11:51 PM

கட்டுமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் 'சணி' நிறுவனம், 'எஸ்.கே.டி., - 130எஸ்'என்ற நாட்டின் முதல் ஹைபிரிட் சுரங்க டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டிப்பர், புனேவில் உள்ள இந்நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறந்த ஆற்றல், குறைவான எரிவாயு செலவு, பணியாளர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்ட இந்த டிப்பர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், 100 டன் எடை வரை சுமந்து செல்ல முடியும். இதில் உள்ள ஹைபிரிட் டீசல் இன்ஜின், 1,240.45 ஹெச்.பி., பவரையும், 3,200 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
இதில் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் வாயிலாக, 20 முதல் 25 சதவீதம் வரை எரிவாயு செலவை குறைக்க முடியும்.
பள்ளமான பகுதிகளில் செயல்படும்போது, 'ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்' அம்சம் வாயிலாக, அதன் 'ஹை வோல்டேஜ்' பேட்டரியை சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
இயந்திர செயல்திறனை கண்காணிக்க 'ஸ்மார்ட் கட்டுப்பாடு அமைப்பு', கார்களில் இருப்பதை போன்று 10 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் கேமரா, ஹைட்ராலிக் ஸ்டீயரிங் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த டிப்பரின் மீது, பாறைகள், பெரிய கற்கள் மேலே விழுந்தாலும், சுரங்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டாலும், ஓட்டுநரை பாதுகாக்க வலுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, உலக பாதுகாப்பு தரத்திற்கு இணங்க தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.

