/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பல இனங்களில் செலுத்திய கட்டணம் ஒருங்கிணைப்பு
/
பல இனங்களில் செலுத்திய கட்டணம் ஒருங்கிணைப்பு
ADDED : பிப் 21, 2025 11:31 PM

கட்டட அனுமதி பெறுவதை எளிமையாக்க, பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதில் ஒன்று, மாநிலம் முழுவதும் ஒரே கட்டணம் நிர்ணயித்திருப்பது. பல இனங்களில் இதுவரை வசூலித்தது, ஒருங்கிணைந்த கட்டணமாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு, கட்டட உரிமம், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, வளர்ச்சி கட்டணம் மற்றும் தொழிலாளர் நல நிதி ஆகிய, நான்கு வகை கட்டணங்களுடன் சேர்த்து, ஒருங்கிணைந்த கட்டணமாக, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
உத்தேச கட்டடங்களின் வரைபடம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019க்கு உட்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின், கட்டணம் செலுத்த கேட்கப்படும். குடியிருப்பு கட்டடங்களுக்கு, கோவை போன்ற மாநகராட்சிகளில், சதுர அடிக்கு ரூ.88 கட்டணமாகும்.
பிற கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு ரூ.110 குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்க, மாமன்றத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுய சான்று கட்டடங்களான, 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு, சதுர அடிக்கு ரூ.88 கட்டணம் வசூலிக்கப்படும்.
அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனையாக இருந்தால், அதற்குண்டான வரன்முறை கட்டணத்தையும், கூடவே செலுத்த வேண்டும். அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் இக்கட்டணம் பொருந்தும்.
குடியிருப்பு கட்டடங்கள், 10 ஆயிரம் சதுர அடி, வணிக கட்டடங்கள், 2,000 சதுர அடியைவிட கூடுதலாக இருப்பின், கோவை உள்ளூர் திட்ட குழுமம் அல்லது நகர ஊரமைப்பு அலுவலகம் மூலம், திட்ட அனுமதி கேட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கு கட்டணமும் செலுத்த வேண்டும். உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி (ஐ.ஏ.,) கேட்கப்படலாம். திருப்பி அளிக்கக்கூடிய, வைப்பு தொகை கூடுதலாக வசூலிக்கப்படும். வரைபடத்தின் படி கட்டப்படுவதை உறுதிப்படுத்த, ஐ.ஏ., கட்டணத்தில் பாதி வைப்பு தொகையாக கேட்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.