/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான பொருட்கள் தரத்தை பரிசோதிக்க இருக்கு வழி! பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் அறிவுரை
/
கட்டுமான பொருட்கள் தரத்தை பரிசோதிக்க இருக்கு வழி! பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் அறிவுரை
கட்டுமான பொருட்கள் தரத்தை பரிசோதிக்க இருக்கு வழி! பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் அறிவுரை
கட்டுமான பொருட்கள் தரத்தை பரிசோதிக்க இருக்கு வழி! பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் அறிவுரை
UPDATED : ஆக 17, 2024 10:59 AM
ADDED : ஆக 16, 2024 10:51 PM

''கட்டுமான பொருட்களின் தரத்தை அறிய, அருகில் உள்ள பொறியியல் கல்லுாரியில், பொருட்களை கொடுத்து பரிசோதித்துக்கொள்ளலாம்,'' என அறிவுறுத்துகிறார், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மைய முன்னாள் தலைவர் கரணபூபதி.
* நான் 1998ம் ஆண்டு, வீட்டுடன் செப்டிக் டாங்க் கட்டியிருந்தேன். இப்போது, அது நிரம்பி உபயோகப்படுத்த முடியாமல் உள்ளது. அதை, சீரமைப்பு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா?
-சத்யநாயகம், சுந்தராபுரம்.
தாங்கள் செப்டிக் டாங்க் கட்டி 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது. அதனால், அதை ஒருமுறை செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்து, அதனுடைய நான்கு பக்கங்களிலும், நான்கு இன்ச் சுவர் கட்டி, சிமென்ட் பூசி அருகில் புதிதாக ஒரு சோக் பிட் போட்டு உபயோகப்படுத்த முடியும் அல்லது, அருகில் இடம் இருந்தால், புதிதாக செப்டிக் டாங்க் போட்டுக் கொள்ளலாம்.
* சுமார் 10 வருடங்களுக்கு முன், நான் ஹாலோ பிளாக் வைத்து சுவர் கட்டியிருந்தேன். அதற்கு பலமுறை வெள்ளையடித்தும் இருந்தேன். தற்போது, மேற்படி சுவர் பொரிந்து உள்ளது. எனவே, சிமென்ட் கலவை பூச எண்ணியுள்ளேன். வெள்ளை அடித்து உள்ளதால், கலவை ஒட்டுமா என்ற சந்தேகம் உள்ளது. கலவை ஒட்ட என்ன செய்ய வேண்டும்? --
- என்.நாகராஜன், கருப்பராயன்பாளையம்.
ஹாலோ பிளாக் சுவர் மேல் அடித்துள்ள வெள்ளை, ஏடு ஏடாக உரிந்து வருகிறதா என்று குறிப்பிடவில்லை. சுவர் பொரிந்து உள்ளது என்று கூறியுள்ளீர்கள். அதனால், ஒயர் பிரஷ் கொண்டு சுவர் முழுவதுமாக தேய்த்து, பொரிந்துள்ள துகள்களை முழுவதுமாக எடுத்த பின், சிமென்ட் கலவை பூசுவது நல்லது. ஒயர் பிரஷ் வாயிலாக தேய்ப்பதால், சுவரின் மேல் பகுதியில் உள்ள வெள்ளை அடித்த சுவர் மேலும் தேய்ந்து, சிமென்ட் கலவை ஒட்டும் தன்மை பெற்று விடும்.
* கட்டுமான பொருட்களின் தரத்தை எப்படி பரிசோதிப்பது? கட்டுமான பொறியாளர்கள் மட்டும் தான் இதை அறிந்து கொள்ள முடியுமா?
--பன்னீர்செல்வம், தொண்டாமுத்துார்.
கட்டுமான பொருட்களின் தரத்தை அறிய, அருகில் உள்ள பொறியியல் கல்லுாரியில், பொருட்களை கொடுத்து பரிசோதித்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களையும் அவ்வாறு நீங்களே சோதித்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக, கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அவ்வாறு சோதித்து அறிந்து கொள்ளலாம். சில தனியார் மையங்கள் கூட, இம்மாதிரியான சோதனைகளை செய்து கொடுக்கிறார்கள். அவர்களிடம் கொடுத்து சோதித்து தெரிந்து கொள்ளலாம்.