/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ரூப்பிங் ஷீட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
/
ரூப்பிங் ஷீட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ரூப்பிங் ஷீட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ரூப்பிங் ஷீட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : செப் 07, 2024 12:06 PM

கட்டடத்தில் அனைத்து இடங்களிலும் கான்கிரீட் மேல்தளம் அமைப்பதால் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை மக்கள் தேடுகின்றனர். இதில் கட்டடத்தின் குறிப்பிட்ட பிரதான பகுதிகள் தவிர்த்து, பிற இடங்களில் மாற்று வழிமுறைகளில் கூரை அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இது மட்டுமல்லாது, தரைதளம் கட்டடம் கட்டிய பின் சில ஆண்டுகள் கழித்து, மேல் தளத்தில் சிறிய அறை கட்ட வேண்டும் என்று நினைக்கும் போது கான்கிரீட் தளத்தை தவிர்ப்பது நல்லது. இது போன்ற இடங்களில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் உடல் நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால், கான்கிரீட் தளம் தவிர்க்கப்படும் இடங்களில் மாற்று வழிமுறையில் கூரை அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான மேற்கூரையாகவும், செலவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
மக்களின் இத்தகைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், பல்வேறு புதிய வழிமுறைகளில் ரூப்பிங் ஷீட்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
ரூப்பிங் ஷீட் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாக இரும்பு ஷீட்கள், பாலிகார்பனேட் ஷீட்கள் தான் பிரதானமாக இருந்து வருகின்றன.
மக்களுக்கு தேவையான பல்வேறு வண்ணங்கள், வடிவமைப்புகளில் இவை கிடைப்பதால், இதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாலிகார்பனேட் ஷீட்கள் தயாரிப்பில் சில நிறுவனங்கள் எடை குறைப்பு ரீதியில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளன.
வீட்டில் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு எப்படி பிவிசி, யுபிவிசி பயன்படுத்தப்படுகிறதோ அதுபோன்று மேற்கூரை தயாரிப்பிலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன.
இந்த வகையில் பிவிசி மற்றும் யுபிவிசி பொருட்களை அடிப்படையாக வைத்து ரூப்பிங் ஷீட்கள் தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
தற்போதைய சூழலில், சென்னை போன்ற நகரங்களில் கோடை காலத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாவது வழக்கமாகி உள்ளது.
இந்நிலையில், 110 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பம் இருந்தாலும், அதை வீட்டுக்குள் கடத்தாமல் உட்புறத்தை குளுமையாக வைப்பதில் பிவிசி ரூப்பிங் ஷீட்கள் தனித்தன்மைஉடன் செயல்படுகின்றன.
மங்களூர் ஓடுபோன்ற பல்வேறு எளிமையான வடிவமைப்புகளில் பிவிசி ரூப்பிங் ஷீட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை ஷீட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மேற்புற வண்ணத்துக்கு, 15 ஆண்டும், பயன்பாட்டுக்கு 30 ஆண்டுகால உத்தரவாதம் வழங்குகின்றன.
வெப்பத்தடுப்பில் இது சிறப்பாக செயல்படுவதால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் உட்புறத்தில் தனியாக இன்னொரு கூரை அமைக்க வேண்டாம்.
குறிப்பாக, மழைக்காலத்தில் சத்தம் ஏற்படுத்துவதில்லை என்பதால், இதை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.