/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய வீட்டில் வயதான பெற்றோருக்கு என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டும்?
/
புதிய வீட்டில் வயதான பெற்றோருக்கு என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டும்?
புதிய வீட்டில் வயதான பெற்றோருக்கு என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டும்?
புதிய வீட்டில் வயதான பெற்றோருக்கு என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டும்?
ADDED : ஆக 24, 2024 01:27 AM

''பெற்றோருக்கு என, வீட்டில் சில வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,'' என்கிறார், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மைய செயலாளர் பிரசாத் சக்ரவர்த்தி.
கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார், பிரசாத் சக்ரவர்த்தி.
நான் புது வீடு கட்டி குடியேற இருக்கிறேன். என் பெற்றோருக்கு வசதியாக, என்னென்ன முறையில் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்?
---எம்.தமிழரசு, தொண்டாமுத்துார்.
பெற்றோருக்கு முடிந்தவரை, தரைத்தளத்தில் அறை ஒதுக்குவது மிகவும் நல்லது. அவர்களுக்கு உண்டான கழிப்பறையை, அவர்களுடைய படுக்கையறை அருகே வைக்க வேண்டும். குளியல் அறையில், anti skid tiles போடப்பட வேண்டும்.
குளியல் மற்றும் கழிப்பறையில் நடப்பதற்கு, வசதியாக சுவரில் கைப்பிடி அமைக்கலாம். அவர்கள் சுலபமாக நடந்து செல்ல தேவையான அளவுக்கு பர்னிச்சர் வைத்தால் போதும். தேவையான அளவுக்கு இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் அமைய வேண்டும். வண்ணம் மிக, மிக முக்கியம். அவர்களுக்கு பிடித்தமான வண்ணம் தீட்டலாம். அவர்கள் கண்களுக்கு இதமாக இருக்கும் அளவு, வண்ணம் தீட்ட வேண்டும்.
கட்டிய புது வீட்டில், ஒரு சில வருடங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில், வீட்டை கட்டிய பொறியாளரிடம் முறையிடலாமா? அவர் செலவில் செய்து கொடுப்பாரா இல்லை அந்த பழுதுக்கு நான் செலவிட வேண்டுமா? -
--ஆர்.அழகேந்திரன், மேட்டுப்பாளையம்.
கட்டடத்தில் எந்த விதமான பழுதும் ஏற்படாது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உபயோகப்படும் பொருட்கள், சிமென்ட் முதல் பெயின்ட் வரை அனைத்துமே மிகவும் தரமானதாகவே இருக்கின்றன.
இப்பொழுது கட்டப்பட்டு வரும் அனைத்து கட்டடங்களும், நீண்ட ஆயுட்காலம் உடையவையாகவே அமைகின்றன. அப்படி பழுது ஏற்படும் பொழுது, வீட்டைக் கட்டிய பொறியாளரிடமே, அணுகுவது சிறந்தது. ஏனென்றால் அவருக்கு தான் வீட்டின் அமைப்பு நன்றாக தெரியும்.
எப்படி ஒரு வண்டி வாங்கினால், அதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சர்வீஸ் செய்கிறோமோ, அதேபோல் வீட்டைக் கட்டிய பின்பும், அதை நன்றாக பராமரிக்க வேண்டும்.
அப்படியே பிரச்னை வரும் பட்சத்தில், அவருடைய மேற்பார்வையில் அந்த பிரச்னையை முடித்துக் கொடுப்பார். இருப்பினும், பணியாளர்களுக்கு உண்டான சம்பளம் மற்றும் பழுது நீக்க தேவையான பொருட்களுக்கு 'பில்' இடுவார்.
மழை காலங்களில், மொட்டை மாடியில் நீர் தேங்கி பாசி படர்ந்திருக்கிறது. வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது. பாசி படராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்? -
-வி.குமுதா, மதுக்கரை.
பொதுவாகவே மழைக்காலம் வரும் முன்பே, நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்பொழுதும் எடுக்க வேண்டும்.
மொட்டை மாடி பராமரிப்பு, மிக மிக முக்கியம். ஏனென்றால், அதுதான் நம்முடைய மேற்கூரையின் ஆயுட்காலத்தையும் முடிவு செய்கிறது.
மொட்டை மாடியில், பாசி படர்ந்துள்ள இடத்தில் சுடு தண்ணீரை ஊற்றி, சிறிது நேரத்திலேயே அதை சுத்தம் செய்து விடலாம். வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை நீருடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
இதனால், மேற்கூரைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. புதுப்புது ரசாயனங்கள் உள்ளன. அவற்றை சிறிது நீருடன் கலந்து பயன்படுத்தலாம். அந்த ரசாயனங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் எனும் விளக்கம், அந்த ரசாயனத்தின் கையேட்டில் இருக்கும்.
நான் வீட்டை ஒட்டிய சுவரோரம், மரங்கள், செடிகள் வைத்துள்ளேன். இதற்கு நீர் ஊற்றும் போதோ, மழை காலங்களில் நீர் தேங்கும் போதோ, வீட்டின் உட்பகுதியில் ஓதம் ஏற்பட வாய்ப்புள்ளதா?
- ஆர்.கமலேஷன், ஊட்டி.
நிச்சயமாக ஓதம் ஏற்படும். ஆதலால் வீட்டு சுவற்றை ஒட்டி செடிகள் வைக்கும் போது, பூந்தோட்டிகளில் வைப்பது நன்று.

