/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய வீட்டில் 'பால்ஸ் சீலிங்' அமைக்கலாமா?
/
புதிய வீட்டில் 'பால்ஸ் சீலிங்' அமைக்கலாமா?
ADDED : ஏப் 11, 2025 11:02 PM

ஜன்னல் கிரில்களுக்கு 'ரப் ராடு' அல்லது 'பாலிஷ் ராடு' என, இரண்டில் எது நல்லது?
-கணேஷ், அன்னுார்.
ஜன்னல் கிரில்களுக்கு முடிந்த அளவு, பாலிஷ் ராடை உபயோகப்படுத்துவது சிறந்ததாகவும், அழகாகவும் இருக்கும். பராமரிப்பும் எளிதாக இருக்கும்.
நான் கட்டிக் கொண்டிருக்கும் புதிய வீட்டில், 'பால்ஸ் சீலிங்' அமைக்க எண்ணி உள்ளேன். அதற்கு கட்டடத்தின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
-சம்பத், சரவணம்பட்டி.
நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில், 'பால்ஸ் சீலிங்' அமைப்பதென்றால் தரையில் இருந்து குறைந்த பட்சம், 11 அடி இருக்க வேண்டும். அப்போதுதான், 'பால்ஸ் சீலிங்' அமைக்க ஏதுவாக இருக்கும். சீலிங் பேன் பொருத்தும்போது, உயரம் சரியாக இருக்கும்.
நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீடு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இப்பொழுதே உட்புற சுவர்களுக்கு பட்டி பார்க்கலாமா?
-வேல்முருகன், பேரூர்.
உட்புற சுவர் பூச்சு முடிந்தவுடன், நீர் ஆற்றுதல் பணிகளை ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன்பின்பு, ஒரு வாரம் சுவர் நன்கு காய்ந்த பிறகு, பட்டி பார்க்கும் வேலைகளை ஆரம்பிக்கலாம்.
நாங்கள் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளோம். அந்த வீட்டில் தரை தளம் மொசைக் பதித்துள்ளார்கள். நான் டைல்ஸ் பதிக்க விரும்புகிறேன். அதற்கு மொசைக் கற்களை உடைத்து நீக்க வேண்டுமா?
-பாலகுமார், துடியலுார்.
நீங்கள் வாங்கி இருக்கும் வீட்டின் தரையில், மொசைக்கை எடுக்காமல் அதன் மேல் ஒட்டுவதற்கென்று பிரத்யேகமான பேஸ்ட் உள்ளது.
அதை பயன்படுத்தி டைல்ஸ் பதிக்கலாம். தற்பொழுது கட்டுமானத்துறையில் உள்ள சில முன்னணி நிறுவனங்கள், தரமான பேஸ்ட் விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.
அதை வாங்கி தாராளமாக உபயோகித்து, மொசைக் கற்களை எடுக்காமலேயே, டைல்ஸ் பதிக்கலாம்.
நாங்கள் கட்டும் வீட்டிற்கு, ரெடிமேடு நிலவு கதவுகள் வாங்கலாம் என்று உள்ளோம். உங்களுடைய ஆலோசனையை கூறவும்.
-ஜீவானந்தம், துடியலுார்.
ரெடிமேடு கதவு நிலவுகள் வாங்கும்போது, நல்ல தரமானதாகவும், காய்ந்த மரத்தில் செய்யப்பட்டதா எனவும் பரிசோதித்து வாங்கவும். காய்ந்த மரம் இல்லை என்றால் பிற்காலத்தில் மரத்தில் வெடிப்புகள் வரக்கூடும்; சுருங்கவும் செய்யும். மரத்தை நன்கு பரிசோதித்து, நல்ல மரமாக உள்ளதா என தெரிந்த பின்னரே உபயோகப்படுத்தவும்.
நான் புது வீடு கட்ட ஆரம்பித்துள்ளேன். கான்கிரீட் வரை தேவையான சிமென்ட் வாங்கி ஸ்டாக் வைக்கலாமா?
-சதீஷ், சிங்காநல்லுார்.
நீங்கள் ஆரம்பித்துள்ள வீடு, எந்த நிலையில் உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், சிமென்ட் காற்று புகாத வண்ணம் ஒரு மாதம் வரை, ஸ்டாக் வைத்து பயன்படுத்தலாம்.
எனவே, உங்களுடைய வீட்டின் வேலைகளுக்கு எந்த அளவு சிமென்ட் தேவைப்படுகிறது என்பதை உறுதி செய்து, அதற்கு தகுந்தாற்போல் சிமென்ட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமூர்த்தி
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.