ADDED : ஜூலை 25, 2025 09:02 PM

நாங்கள் புதிதாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். இதில், 'பிளம்பிங்' பணிகளுக்கு பயன்படுத்தும் குழாய் உள்ளிட்ட பொருட்களை, எதைப் பொறுத்து தேர்வு செய்ய வேண்டும்.
-பசுபதி, வடவள்ளி.
நீங்கள் பெறும் நீர் கடுமையானதா அல்லது மென்மையானதா என்பதைப் பொறுத்தும் குழாய் தேர்வு முக்கியம். கடுமையான தண்ணீரில் கல்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக இருப்பதால், சில குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். மென்மையான தண்ணீரில் பெரும்பாலும் எந்த குழாயும் சரியாக வேலை செய்யும். குடிநீருக்கு சி.பி.வி.சி.,(குளோரினேட்டெட் பாலிவினைல் குளோரைடு) அல்லது 'கிராஸ் லின்கிடு பாலிஎத்திலின்' குழாய்கள் சிறந்தது.
நாங்கள் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் பயன்படுத்தும் டி.எம்.டி., கம்பிகளுக்கு மாற்றாக, எப்.ஆர்.பி., போன்ற புதிய தொழில்நுட்ப கம்பிகளை பயன்படுத்துவது சரியான முறையா?
-சஞ்சய், சுந்தராபுரம்.
முதலில் எப்.ஆர்.பி., என்பது கண்ணாடி, கார்பன் அல்லது பசல்ட் நார்கள் மற்றும் 'பாலிமர் ரிசைன்ஸ்' கொண்டு உருவாக்கப்படும் 'நான் மெட்டாலிக் ரீஇன்போர்ஸ்மென்ட் பார்'. இது வளைந்து சகிக்காது.
ஒரு தடுமாற்றம் வந்தால், உடனே உடைந்து போகும் வாய்ப்புள்ளது. குடிநீர் தொட்டி, வாட்டர் டேங்க், கடலோர பகுதிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவற்றுக்கு சிறந்தது.
மின்சாரத்தை செலுத்தாது மின் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் மிகச் சிறந்தது. எப்.ஆர்.பி., கம்பிகளை 'ஸ்டிரக்சுரல் லோடு பேரிங்' பகுதிகளில் மாற்றாகப் பயன்படுத்தும் முன், ஸ்டிரக்சுரல் இன்ஜினியரின் ஆலோசனை கட்டாயம். அவர்கள் உங்கள் கட்டடத்தின் டிசைன், வலிமை, லோடு கால்குலேசன், பிணைப்பு வலிமை ஆகியவை வைத்து முடிவெடுக்க வேண்டும்.
நாங்கள் புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ள நிலையில் எங்களது வீட்டின் மொட்டை மாடியில் சிறிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. முதல் மாடியில் உட்புறத்தில் சுவற்றில் சிறிய நீர்க்கசிவு ஏற்படுகிறது; இதனை சரி செய்ய சரியான தீர்வு என்ன?
-சுரேஷ்குமார், விளாங்குறிச்சி.
வெடிப்புகள் எவ்வளவு ஆழம் மற்றும் நீளம் கொண்டவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வெடிப்பு நிலையானதா அல்லது மேலும் விரிவடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதனை சரி செய்ய முதலில் வெடிப்புகளை 'பாலிமர் மாடிபைடு கிரேக் பில்லர்' கொண்டு நிரப்ப வேண்டும். பெரிய வெடிப்புகளுக்கு 'எபாக்ஸி'யை அடிப்படையாக கொண்ட கலவை வாயிலாக சரி செய்ய வேண்டும். இது ஒரு தண்ணீர் தடுக்கும் திரவம் போல பூசப்படுகிறது.
நாங்கள் வீடு கட்டி முடித்து ஆறு மாதங்கள் முடிந்துள்ளது. இன்றைய கால வெப்ப நிலைக்கு ஏற்ப வெளிப்புற சுவர்களுக்கு எவ்விதமான பெயின்ட் தேர்வு செய்வது?
-விஜியாகுமார், கோவில்பாளையம்.
நீங்கள் வீடு கட்டி முடித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என்பதால், இப்போது வெளிப்புற சுவர் பெயின்ட் செய்வது மிகவும் சரியான நேரம். சுவர் கட்டும் போது உள்ள ஈரப்பதம் இப்போது குறைந்திருக்கும். எனவே, பெயின்ட் நன்கு ஒட்டும்.
இன்றைய தமிழ்நாட்டின் வெப்பநிலை, மழை, காற்று, மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும். பெயின்ட் பயன்படுத்தும் போது சரியான முறையில் 'மிக்ஸிங்' செய்து சரியான வேலை ஆட்கள் கொண்டு பயன்படுத்தினால், அது நீடித்து உழைக்கும்.
-கவிராஜ்,
இணை பொருளாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).