/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமானம் அரைகுறையாக நிற்கக்கூடாது'
/
கட்டுமானம் அரைகுறையாக நிற்கக்கூடாது'
ADDED : ஜூன் 27, 2025 10:11 PM

நான் ஜி1 கட்டுமானம்(800 சதுரடி) கட்ட இருக்கிறேன். சிமென்ட் பொறுத்தவரை பலவித கிரேட் வகைகள் இருக்கின்றனவாம். நான் எதை, எதற்கு பயன்படுத்த வேண்டும். இதை என் பொறியாளர் பார்த்துக் கொள்வார் என்றாலும், நானும் அதன் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
-செழியன், கவுண்டம்பாளையம்.
சிமென்ட் வகைகளில் OPC-33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு என மூன்று வகைகள் உள்ளன. அதிகமாக புழக்கத்தில் இருப்பது, OPC-53 கிரேடுதான். இதைத் தவிர, எரி சாம்பல் கலந்த PPC எனும் சிமென்ட் உள்ளது. கட்டுமான வேலைகள் அனைத்திற்கும், PPC சிமென்ட்டையே பயன்படுத்த பரிந்துரைக்கின்றோம்.
எங்கள் பக்கத்து வீட்டில், தரைத்தளத்தில் லேத் பட்டறை இருக்கிறது. அதில், இயந்திரங்கள் இயங்கும்போது எங்கள் கட்டடமும் அதிர்கிறது. எங்கள் கட்டடத்திற்கு ஆபத்து வருமா?
-முத்துக்கிருஷ்ணன், வெள்ளலுார்.
லேத் பட்டறையில் இருந்து ஏற்படும் அதிர்வுகள், மிகுதியாக இருப்பதாகத்தெரிகின்றது. அனுபவம், திறமையுள்ள ஒரு பொறியாளரை அழைத்துச்சென்று, கள ஆய்வு செய்யுங்கள். அவர் சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். தொடர் அறிகுறிகள் கட்டடத்தின் நிலை தன்மையை பாதிக்கவே செய்யும்.
என் நண்பனின் பழைய வீடு ஒன்று, 45 ஆண்டு காலம் கொண்டது. 'மெட்ராஸ் டெரஸ்' வகை கட்டுமானம் கொண்ட ஜி1 வீடு. இப்போது மோசமான நிலையில் உள்ளது. நாம் லேசாக அதிர்ந்தால் சீலிங்கில் இருந்து மண் கொட்டுகிறதே?
-அன்பரசு, போத்தனுார்.
மெட்ராஸ் டெரஸ் ரூபிங்கில் உள்ள, மேல் பகுதியை முற்றிலும் எடுத்துவிட்டு, 'வுடன் ரீபர்'ஐ மட்டும் வைத்துக்கொண்டு, புதிதாக தளம் போடுங்கள். உள்ளூர் கட்டுமானப் பொறியாளர் உதவியை நாடுங்கள். அவர் செய்ய வேண்டியவகளை எடுத்துச் சொல்லி வழிநடத்துவார்.
நான் மருந்து பாட்டில்கள் கழிவுக்கிடங்கு ஒன்றை 4,000 சதுரடியில் வைத்துள்ளேன். 33 அடி உயரத்தில் கான்கிரீட் கூரை போட்டுள்ளேன்; அது மொட்டை தளமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கட்டடத்தில், நீர்க்கசிவு தடுப்புக்கு என எதையும் செய்யவில்லை. என்ன செய்வது?
-குருசாமி, கணபதி.
ஒரு உள்ளூர் கட்டுமான பொறியாளரை, அழைத்துச்சென்று கள ஆய்வு செய்து நீர்க்கசிவு எந்தெந்த இடங்களில், எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறியுங்கள். நீர்க்கசிவு தடுப்பு திரவம் இரு பூச்சுகள் அடியுங்கள். 'வெதரிங் கோர்ஸ்' மேலே புதியதாக ஓடு பதித்தால் நல்ல பலன் தரும். மற்றவைகளால் விரும்பிய பயன் கிடைக்காது; தேவையற்ற வீண் செலவே.
கடந்த ஆறு மாதங்களாக, வீடு கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மழையால் கடந்த ஒரு மாதமாக கட்டுமாக பணிகளை நிறுத்தி உள்ளோம். இந்த நிலையில் மழை தண்ணீர் படும் பட்சத்தில், கட்டுமானத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அதற்கான தடுப்பு வழிகளை கூறவும்.
-ஜான், கோவை.
மழையால் கட்டுமான பணிகளை நிறுத்தி உள்ளீர்கள். ஆனால் கட்டடம் எந்த நிலையில் இருப்பதாக கூறவில்லை. தரைத்தளமா, முதல் தளமா, லிண்டல் மட்டமா எனத் தெளிவாகக் கூறவில்லை. மழைக்காலங்களில் கட்டடங்கள், அதிக காலம் அரைகுறையாக இருக்கக்கூடாது. உடனே வேலையை தொடங்கவும். மூலப் பொருட்களை கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி கட்டுமானத்தை தொடரவும்.
-சபரிநாத்,
இணைச்செயலாளர்,
அகில இந்திய கட்டுனர் சங்கம்
கோவை மையம்.