/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கோவை நகருக்கு பூகம்பம் தாங்கும் கட்டடங்கள் அவசியமா?
/
கோவை நகருக்கு பூகம்பம் தாங்கும் கட்டடங்கள் அவசியமா?
கோவை நகருக்கு பூகம்பம் தாங்கும் கட்டடங்கள் அவசியமா?
கோவை நகருக்கு பூகம்பம் தாங்கும் கட்டடங்கள் அவசியமா?
ADDED : ஆக 15, 2025 09:00 PM

கூல் ரூப் டைல்ஸ் பதிப்பதால், கூரை வழியாக வரும் வெப்பம் தடுக்கப்படுமா?
-சீனிவாசன், காந்திபுரம்.
ஆற்றல் பாதுகாப்பு கட்டட குறியீடு(இ.சி.பி.சி.,) கோடு விதிமுறைகளின்படி, பல லேயர்களாக அமைத்து 'பாலியெஸ்டர்' உடன் கூல் ரூப் டைல்ஸ் பதித்தால், துளி வெப்பம் கூட உள்ளே வராது. ஆனால், கட்டடத்தின் சுமை கூடும். செலவும் அதிகமாகும். எனவே, அதற்கு மாற்றாக, எளிய செலவு மற்றும் எடை குறைவான முறையில் கூல் ரூப் டைல்ஸ் அமைக்கும்போது, ஓடுகள் பதிக்கும் சிமென்ட் கலவையில் சிமென்ட் ஒரு பங்கு, சுண்ணாம்பு நான்கு பங்கு, எம்.சாண்ட் ஆறு பங்கு என்று கலந்து, அதன் மேல் டைல்ஸ் பதித்தால், வெப்பம் கீழே ஊடுருவாது. இது, சிக்கனமான வழிமுறையும் ஆகும்.
சில அடுக்குமாடி கட்டுமானங்கள் பூகம்பத்தை தாங்கும் தன்மையுடையது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். கோவை போன்ற நகரங்களில் பூகம்பம் தாங்கும் வகையில் கட்டடங்கள் அவசியமா?
-உமா சங்கர், ஒண்டிப்புதுார்.
கட்டாயம் அவசியம். நமது கோவையானது நிலநடுக்க மண்டலம், 3ன் கீழ் வருகிறது. 1900ம் ஆண்டு(125 ஆண்டுகளுக்கு முன்), 6.0 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் நமது கோவையில் ஏற்பட்டது . எனவே, நாம் நம் கட்டடங்களில், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில், இதுபோன்ற வடிவமைப்பு ஏற்படுத்துதல் நலம். தகுந்த 'ஸ்ட்ரச்சுரல்' பொறியாளரை கொண்டு கட்டடக் கம்பிகளில் சில மாற்றம் மற்றும் 'ஷியர் வால்ஸ்' மற்றும் 'ஐசலேட்டர்ஸ்' கொண்டு வடிவமைத்தல் நலம்.
இப்போது ஸ்டீல் பில்லர் மற்றும் டெக் சிலாப் கொண்ட கட்டமைப்புகள் பெருகிவிட்டன. இதன் தரம் மற்றும் ஆயுட்காலம் எப்படி?
-பிரான்சிஸ்,
சிங்காநல்லுார்.
நீங்கள் கூறிய முறையில், 'கேல்வனைஸ்' செய்யப்பட்ட நெளிவு இரும்பு ஷீட்டுகள், ஸ்டீல் பில்லர் மற்றும் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும். இந்த முறை மிக பாதுகாப்பானது. விரைவில் கட்டடத்தை முடிக்கவும் பயன்படும் தன்மையுடன் இருப்பதால், தற்போது இவ்வகை கட்டடங்கள் பெருகிவிட்டன. டாய்லெட் மற்றும் நீர் தேங்கும் இடங்களில், கூடுதல் பாதுகாப்பு 'வாட்டர் புரூப்பிங்' அவசியம். தகுந்த பொறியாளர் மேற்பார்வையில் தாராளமாக அமைக்கலாம்.
நான் ஒரு பழைய கட்டடம் வாங்கினேன். இப்போது முதல் மாடி கட்டும் எண்ணம் உள்ளது. ஏற்கெனவே, தரை தளத்தில் உள்ள பில்லர் மற்றும் சிலாப்பின் தரம் அறிவது எப்படி?
-வெங்கடேஷ், விளாங்குறிச்சி.
மிக எளிது. தற்போது என்.ஏ.பி.எல்., தரக்கட்டுப்பாடுடன் கூடிய சோதனை மையங்கள் நிறைய உள்ளன. நவீன கருவிகளின் உதவியுடன், ஐ.எஸ்., 516 விதிமுறைகளின்படி 'ரீபவுண்ட் ஹேமர்' முறையில், உங்கள் கட்டடத்தின் கான்கிரீட் உறுதிதன்மையை பில்லர், சிலாப் போன்ற இடங்களில் கட்டடத்தினை சிறிதும் உடைக்காமல் சோதனை செய்து, உடனடியாக அறிந்து கொள்ளலாம். பின்னர் உங்கள் முதல் மாடி அமைக்கலாம்.
இரும்பு தகடு கூரை கொண்ட எனது கடையில், வெயில் காலத்தில் வெப்பம் உள்ளே வருகிறது. குறைந்த செலவில் சரி செய்வது எப்படி ?
-செல்வராஜ், உக்கடம்.
நீங்கள் தெர்மாகோல் 'பால்ஸ் சீலிங்' அமைக்கலாம். அல்லது அலுமினியம் பாயில் சீட் கொண்டு ஷீட்டின் அடியில் பொருத்தலாம். சூடு கணிசமாக குறையும். பாயில் ஷீட் மற்றும் பால்ஸ் சீலிங் இரண்டையும் ஒருங்கே அமைத்தால், வெப்பம் குறையும். கனம் அதிகம் உள்ள அலுமினியம் பாயில் சீட் வாங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.
-செவ்வேள், பொறியாளர் தலைவர், 'காட்சியா'.

