ADDED : செப் 12, 2025 10:18 PM

நாங்கள் கட்டி வரும் கட்டடம், களிமண் பூமியில் உள்ளது. நான்கு அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கசிந்தும் வருகிறது. அடித்தளத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது?
-செல்வராஜ், ராமநாதபுரம்.
பூமியின் தாங்கும் திறன் மற்றும் நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றை ஆராய வேண்டும். சரியான பொறியாளர்களை கொண்டு, கட்டடத்தின் கட்டுமான வடிவமைப்பு செய்து கட்டுவது மிக சிறந்தது. நிலத்தடி நீர் அதிகமாக கசியும் பகுதிகளில், அடித்தளத்தின் கான்கிரீட் வெளிப்புற பகுதிகளில் சரியான முறையில் சிறு துளைகளை அடைத்து, அதன் மீது 'வாட்டர் புரூபிங்' அல்லது தார்(பிட்டுமன் கோட்டிங்) கொண்டு முழுவதுமாக நீர் புகாமல் செய்து கொண்டால், கட்டடத்தின் அடிப்பகுதி வலிமையானதாகவும், பிற்காலங்களில் பாதிப்புக்கள் வராமலும் தடுத்துக் கொள்ளலாம்.
பாத்ரூம்களில் இறக்கி போடப்படும், 'சன்கன் சிலாப்'களை எதைக்கொண்டு நிறைப்பது சிறந்தது.
-சுந்தரம், வடமதுரை.
பொதுவாக, இப்போது மேற்கத்திய வகை டாய்லெட்கள் அமைப்பதால் சிலாப்பினை, 9 இன்ச் இறக்கி போட வேண்டியது இருக்கும். அந்த பகுதியில் எடை மிகவும் குறைவான 'வெர்மிகுலைட்' என்ற வேதியியல் பொருள் மற்றும் சிமென்ட் கலவை கொண்டு நிறைத்தால், உங்கள் கட்டடத்தில் அனாவசியமான பளு ஏற்படாது. இந்த வெர்மிகுலைட், சந்தையில் பல்வேறு பெயர்களில் கிடைக்கின்றது. அதனை வாங்கி பில்லிங் செய்யலாம்.
என் வீட்டு மொட்டை மாடியில், வெட்ரிபைட் டைல்ஸ் அமைத்தோம். இப்போது ஜாயின்ட் விட்டு நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. என்ன செய்யலாம்?
----குமாரசாமி, சூலுார்.
நீங்கள் டைல்ஸ் நடுவே, இடைவெளி மிக குறைந்த அளவில் விட்டிருப்பீர்கள். மொட்டைமாடி டைல்ஸ் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப சுருங்கி விரிவதனால், இடைவெளி ஏற்பட்டு, ஜாயின்ட் பவுடர் விட்டு வந்துவிடும். எனவே, டைல்ஸ் பதிக்கும்போது குறைந்த பட்சம், 3 மி.மீ., இடைவெளி கொண்டு அமைத்து, எப்பாக்ஸி சீலண்ட் கொண்டு அமைத்தால், இந்த பிரச்னை வராது.
டைல்ஸ் ஏற்கனவே விட்டு வந்திருந்தால், டைல்ஸ் அப்புறப்படுத்திவிட்டு புதிதாக டைல்ஸ் அமைத்து செய்யலாம். அல்லது நல்ல நிலைமையில் இருந்தால், தகுந்த பொறியாளர் மேற்பார்வையுடன் டைல்ஸ் நடுவே, பட்டி தகடை கொண்டு இடைவெளி ஏற்படுத்தி அதன் பின், மேற்கூறிய சீலண்ட் கொண்டு அடைக்கவும்.
எங்கள் புதிய வீட்டில் உள்ள, எல்.இ.டி., பல்புகள் அடிக்கடி பழுதடைந்து கொண்டிருக்கிறது; இதற்கு தீர்வுதான் என்ன?
-சங்கர், ஒண்டிப்புதுார்.
இதற்கு இ.பி.,யில் இருந்து வரும் மின்சாரம், சரியான 'இன்கம்மிங் வோல்டேஜ்' இல்லாததுதான் காரணம். அது குறைவாக வந்தாலும், அதிகமாக வந்தாலும் நமது வீட்டில் உள்ள மின்சார சாதனங்கள் அனைத்தையும் பழுதடையச் செய்யும். இதற்கு தீர்வு, நமது இ.பி.,யில் இருந்து வரும் இன்கமிங் வோல்டேஜுக்கு, அதன் லோடுக்கு தகுந்தாற்போல் ஒரு ஸ்டெபிலைசர் போடுவதன் வாயிலாக சரி செய்ய முடியும். லோ வோல்டேஜ் மற்றும் ஹை வோல்டேஜ் என்ற பிரச்னை இருக்காது.
சமையல் அறையில் அமைக்கப்படும் 'சின்க்' எவ்வளவு ஆழம் இருப்பது நல்லது?
-சதீஷ், பூமார்க்கெட்.
கிச்சனில் அமைக்கப்படும் சின்க், கிரானட்டில் அமைக்கும் பொழுது கண்டிப்பாக அதனுடைய அகலம், நீளம் சரியாக அமைக்க வேண்டும். இல்லையெனில், அது பயன்படுத்துவோருக்கு நிறைய உடல் உபாதைகளையும், சிரமங்களையும் ஏற்படுத்தும். கிச்சனில் அமைக்கப்படும் கிரானைட் சின்க் நீளம், 24 இன்ச்க்கு குறையாமலும் , அகலம், 18 இன்ச்க்கு குறையாமலும், ஆழம், 10 இன்ச்க்கு மிகாமலும் இருப்பது சிறந்த ஒன்றாகும்.
மணிகண்டன்,
இணை செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).