/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டின் முன்பகுதி அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
/
வீட்டின் முன்பகுதி அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
ADDED : ஜன 11, 2025 08:56 AM

சேரன் மாநகர் பகுதியில், ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்கியுள்ளேன். மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 'செப்டிக் டேங்க்' அமைப்பு அடிக்கடி நிறைந்து விடுகிறது. கதவு ஜன்னல் வழியே கரையான் வருகிறது. நல்ல தீர்வு சொல்லுங்கள்.
-சி.பழனியப்பன், கணபதி.
சேரன் மாநகர் பகுதி உள்ள இடத்தின் தன்மை, களிமண் பூமி ஆகும். செப்டிக் டேங்க்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, 'சோக் பிட்' அமைத்து சரி செய்யலாம் அல்லது 'பயோ செப்டிக் டேங்க்' அமைத்தால், தகுந்த தீர்வு கிடைக்கும். கதவு, ஜன்னல் வழியே கரையான் வருவதை தடுக்க சரியான முறையில், 'பெஸ்ட் கன்ட்ரோல்' செய்து கொள்ளவும்.
நான் புதிதாக வீட்டுமனை வாங்க உள்ளேன். இரண்டு சென்ட் போதுமானது. சாலையை பார்த்தபடி இருக்கும், முன்புறப்பகுதியின்(ரோடு பேஸ்) அகலம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும். தற்போது பார்த்துள்ள இடம், 17.5 அடிகள்தான் உள்ளது. நீளம், 38 அடி உள்ளது. இந்த அமைப்பில் வீடு கட்டுவது சாத்தியமா?
-வ.ரவிசுந்தரம், குரும்பபாளையம்.
நீங்கள் வாங்கும் மனையின் குறைந்தபட்ச ரோடு பேஸிங், 30 அடி இருக்க வேண்டும். அதேபோல் இடத்தின் சதுர அடி, இரண்டே முக்கால் சென்டுக்கு மேல் இருந்தால் நல்லது. அங்கீகாரம் பெற்ற மனையாக வாங்குவது நல்லது.
வீடு கட்டுவதற்கு போர்வெல் அமைத்துள்ளோம். துவர்ப்பு தன்மை மிகவும் குறைவாக உள்ளது. ஆதலால், போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாமா?
-ர.ஹரீஷ், திருப்பூர்.
துவர்ப்பு தன்மை குறைவாக இருந்தாலும், தண்ணீர் பரிசோதனை செய்து குடிப்பதற்கு, ஏற்றதா என்பதை தெரிந்து கொண்டு, அதன் பிறகு பயன்படுத்தலாம். ஏனெனில், நம் உடலுக்கு ஒவ்வாத சில வேதியியல் உப்புக்கள், அதில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
குளியல் அறையின், புளோர் டைல்ஸ் ஜாயின்டில் எபாக்ஸி பேஸ்ட் கண்டிப்பாக வைக்க வேண்டுமா?
-ம.சன்ஜய், காரமடை.
குளியல் அறையின் புளோர் டைல்ஸ் இணைப்பில், நீர் கசிந்து 'ரூப்சிலாப்' பாதிப்படைய கூடாது என்பதற்காக, டைல்ஸ் இணைப்பில் எபாக்ஸி பேஸ்ட் வைக்கப்படுகிறது. இது முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அமையக்கூடிய, குளியல் அறைகளுக்கு கட்டாயம் வைக்க வேண்டும்.
சமையல் மேடை எவ்வளவு உயரம் மற்றும் அகலம் வைக்க வேண்டும்?
-பி.சத்யா, வேலாண்டிபாளையம்.
புளோர் டைல்ஸின் மேல் மட்டத்திலிருந்து, சமையல் மேடையின் அடிமட்டம், 27 இன்ச், மேல் மட்டம் பினிசிங், 30 இன்ச் இருக்குமாறும் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் அகலம் பினிசிங், 24 இன்ச் இருக்க வேண்டும்.
காலம் போஸ்ட், ரூப் பீம், லிண்டல் பீம், படிக்கட்டு சிலாப் போன்ற அனைத்து கான்கிரீட்டிற்கும் கவரிங் வைக்க, ஒரே அளவுள்ள கவர் பிளாக் வைப்பது சரியா?
-கே.ராமலிங்கம், சிங்காநல்லுார்.
தவறு. காலம் போஸ்ட்டிற்கு, 40 மி.மீ., ரூப் பீம், 25 மி.மீ., ரூப் சிலாப், 20 மி.மீ., படிக்கட்டு சிலாப், 20 மி.மீ., லிண்டல் பீம், 20 மி.மீ., அளவுகள் கொண்ட கவர் பிளாக்கைத்தான் வைக்க வேண்டும்.
--மணிகண்டன்,
பொருளாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).